இன்றைய இறைமொழி
வெள்ளி, 6 பிப்ரவரி ’26
பொதுக்காலம் நான்காம் வாரம், வெள்ளி
சீஞா 47:2-11. மாற் 6:14-29
இவர் யோவானே!
இயேசு தம் சீடர்களை இருவர் இருவராகப் பணிக்கு அனுப்புகிற நிகழ்வைத் தொடர்ந்து திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படுதல் நிகழ்வைப் பதிவு செய்கிறார் மாற்கு. இப்படிப் பதிவு செய்வதன் வழியாக இந்நிகழ்வை மூன்று நிலைகளில் முதன்மைப்படுத்துகிறார்:
(அ) திருத்தூதர்களின் செய்தி நிராகரிக்கப்படும். இந்த உலகம் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதில்லை. நற்செய்தியை அறிவிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. காலம் காலமாக இறையாட்சி பற்றிய செய்தி இன்று வரை கேலிக்கும் சிரிப்புக்கும் உள்ளாகி வருகிறது. எதிர்க்கப்படுகிறது.
(ஆ) இயேசு கொலை செய்யப்படுவதன் முன்நிழல். திருமுழுக்கு யோவானுக்கு நேர்ந்ததே இயேசுவுக்கும் நேரும். மாசற்றோரின் துன்பம் என்பது இங்கே வலியுறுத்தப்படுகிற கருத்துரு.
(இ) திருத்தூதர்களும் திருமுழுக்கு யோவான் போல இயேசு போல எதிர்க்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று சொற்களில் புரிந்துகொள்வோம்:
(அ) குழப்பம் – இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேட்கிற ஏரோது குழப்பமடைகிறார். பெரிய ஏரோதுவின் மகன் ஏரோது அந்திபா இயேசுவின் பணிக்காலத்தில் ஆட்சி செய்கிறார். பெரிய ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடினார். அவருடைய மகன் ஏரோது அந்திபா தான் கொன்ற திருமுழுக்கு யோவானே மீண்டும் வந்துள்ளார் என்று நம்பினார். திருமுழுக்கு யோவானின் சொற்களை ஏற்றார். அதே வேளையில் அவரைச் சிறையிலும் அடைத்தார். இதுவா அதுவா என்னும் குழப்பநிலையில் இருக்கிறார் இவர்.
(ஆ) கொலை – திருமுழுக்கு யோவான் ஓர் இக்கட்டான சூழலை ஏரோதுவுக்கு உருவாக்குகிறார். ஏரோதியா அந்தச் சூழலைத் தனக்கு ஏற்றாற்போலப் பயன்படுத்திக்கொள்கிறார். நம் சூழல் பல நேரங்களில் நம் வாழ்வின்மேல் ஆட்சி செலுத்துகிறது என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். ஏரோது அரசன் 6-ஆம் மற்றும் 9-ஆம் கட்டளைகளுக்கு எதிராகக் குற்றம் (பாவம்) செய்ததால் அவரைக் கண்டிக்கிறார் திருமுழுக்கு யோவான். நீதிக்காக துன்புறுகிற திருமுழுக்கு யோவான் இயேசு கொலை செய்யப்படுதலுக்கு முன்நிழலாக நிற்கிறார்.
(இ) தொடர்ச்சி – யோவானின் சீடர்கள் வந்து அவருடைய உடலை அடக்கம் செய்கிறார்கள். யோவான் இறந்தாலும் அவருடைய சீடர்கள் அவருடைய பணியைத் தொடர்வார்கள். இயேசுவும் யோவானின் அடிச்சுவடுகளில் துணிவுடன் தம் பணியைத் தொடர்கிறார். அவருக்குப் பின்னர் அவருடைய சீடர்கள் பணியைத் தொடர்வார்கள்.
இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் பாடம் என்ன? நாம் நல்லது செய்வதால் நமக்குக் கெட்டது நேராது என்று நினைப்பது தவறு. வாழ்வின் நிகழ்வுகள் பலவற்றை நாம் நம் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. பல நிகழ்வுகளில் நாம் வலுவிழந்து நிற்கிறோம்.
முதல் வாசகத்தில், சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் தாவீது அரசருக்கு புகழாரம் சூட்டுகிறார். தாவீது அடைந்த வெற்றிகள், அவர் இயற்றிய பாடல்கள் என அனைத்துக்கும் மேலாக அவர் ஆண்டவரோடு கொண்டிருந்த உறவைச் சுட்டிக்காட்டுகிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment