இன்றைய இறைமொழி. வியாழன், 22 ஜனவரி ’26. இருவகை நெருக்கடி!

இன்றைய இறைமொழி
வியாழன், 22 ஜனவரி ’26
பொதுக்காலம் இரண்டாம் வாரம், வியாழன்
1 சாமு 18:6-9. 19:1-7. மாற் 3:7-12

இருவகை நெருக்கடி!

ஆண்டவராகிய கடவுள் தம் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை தந்தார் என மகிழ்கிறார் தாவீது. ஆனால், தாவீது பெற்ற வெற்றியை தன் வெற்றியாகக் கருதாத சவுல், தாவீதின்மேல் பொறாமைகொண்டு அவரைக் கொல்ல நினைக்கிறார். அவருக்கு நெருக்கடி கொடுக்கிறார். தாவீதுக்கு சார்பாகப் பேசுகிற யோனத்தான் சவுலின் கையிலிருந்து தாவீதை விடுவிக்கிறார்.

சவுலின் பொறாமையும் யோனத்தானின் பெருந்தன்மையும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. தாவீதின்மேல் பொறாமை கொள்ள வேண்டியவர் யோனத்தானே. ஏனெனில், சவுலுக்குப் பின்பாக அரசுரிமைக்கு உரிமையுடையவர் அவர். தம் அரசுரிமை பறிபோனதாக எண்ணவில்லை யோனத்தான். தான் இருந்தால் என்ன, தன் நண்பன் இருந்தால் என்ன என்று பெருந்தன்மையோடு செயல்படுகிறார்.

தாவீதுக்கு சவுல் தருகிற நெருக்கடி எதிர்மறையாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு ஒருவகையான நெருக்கடியைச் சந்திக்கிறார். அவருடைய போதனை மற்றும் வல்ல செயல்களைக் கேள்வியுறுகிற மக்கள் அவரை மொய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு படகு ஒன்றை முன்னேற்பாடு செய்கிறார் இயேசு. அவரைத் தொட வேண்டுமென்று மக்கள் அவர்மேல் வந்து விழுகிறார்கள்.

இது நேர்முகமான நெருக்கடி. இந்த நெருக்கடியால் மற்றவர்கள் பயன்பெறுகிறார்கள்.

நெருக்கடிகளால் சூழ்ந்து நகர்கிற நம் பயணம். பொறாமை, பெருந்தன்மை, தேடல் என நகர்கிறது வாழ்க்கை. எல்லா நெருக்கடிகள் நடுவிலும், திருப்பாடல் ஆசிரியர் போல, ‘கடவுளையே நம்பியிருக்கிறேன். எதற்கும் அஞ்சேன்’ என்று சொல்லிக்கொண்டே நாம் நகர வேண்டும்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment