இன்றைய இறைமொழி
செவ்வாய், 20 ஜனவரி ’26
பொதுக்காலம் இரண்டாம் வாரம், செவ்வாய்
1 சாமு 16:1-13. மாற் 2:23-28
சட்டமும் மனிதரும்
‘சாப்பிடாமல் இருப்பது’ (நோன்பு இருப்பது) நேற்றைய நற்செய்தியில் பிரச்சினையாக நின்றது. ‘சாப்பிடுவது’ இன்றைய நற்செய்தி வாசகத்தின் பிரச்சினையாக இருக்கிறது. ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து சாப்பிடுகிறார்கள். ஓய்வுநாள் சட்டத்தை அவர்கள் மீறியதாக பரிசேயர்கள் இயேசுவிடம் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிகழ்வின் பின்புலத்தில் சட்டத்திற்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை எடுத்துரைக்கிறார் இயேசு. மேலும், இந்த நிகழ்வில் பழைய ஏற்பாட்டில் தாவீது அர்ப்பண அப்பங்களை உண்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிற இயேசு, தாமே தாவீதின் மகன் என்பதை மறைமுகமாக எடுத்துரைக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் சாமுவேல் வழியாக இளவல் தாவீதை திருப்பொழிவு செய்கிறார். ‘மனிதர் முகத்தைப் பார்க்கிறார்கள். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார்.’ மனிதர்களின் பார்வையில் உயரமாகவும் அழகாகவும் தெரிந்த சவுல் ஆண்டவரின் பார்வையில் சிறியவராக மாறுகிறார். மக்களின் பார்வையில் சிறியவராக இருக்கிற தாவீது ஆண்டவரின் திருப்பொழிவால் உயர்வு அடைகிறார். திருமுழுக்கு வழியாகவும் உறுதிப்பூசுதல் வழியாகவும் நாம் அனைவரும் ஆண்டவரின் அருள்பொழிவைப் பெற்றுள்ளோம். ஆண்டவரின் பார்வையில் நாம் உயர்வு அடைந்துள்ளோம். உயர்வு பெற்ற இந்த நிலையில் நாம் நிலைத்திருப்போம்.
மூன்று விடயங்களை நாம் கற்றுக்கொள்வோம்:
(அ) சட்டங்கள், புனித புத்தகங்கள், மரபுகள் ஆகிய அனைத்துமே மனிதர்களாகிய நாம் உருவாக்கியவை. நாம் உருவாக்கியவற்றுக்கு ஆற்றல் அளித்தவுடன் அவை நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன. நாமே இவற்றை உருவாக்கினோம், நமக்காகவே சட்டங்கள், புனித நூல்கள் என்பதை நாம் அடிக்கடி நினைவுகூர்வது நல்லது. பரிசேயர்கள் சட்டம் மீறுதலைப் பார்க்கிறார்கள், இயேசுவோ தம் சீடர்கள் பசியாறுவதைப் பார்க்கிறார். ஒரே நிகழ்வுதான். ஆனால், நிகழ்வின் குவியம் மாறுகிறது. பரிசேயர்களின் குவியமாக சட்டம் இருக்கிறது. இயேசுவின் குவியமாக மனிதர்கள் இருக்கிறார்கள்.
(ஆ) பிலாத்துவோடு மக்கள் உரையாடுகிற நிகழ்வில், ‘எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அந்தச் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும்!’ என்று இயேசுவைக் குறித்துச் சொல்கிறார்கள். பல நேரங்களில் சட்டத்தைக் கொண்டு நாம் அன்பையும் இரக்கத்தையும் கொன்றுவிடுகிறோம். ஒருவர் செய்த தவற்றை நம் சட்டம் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அவர் செய்கிற நன்மையைச் சட்டம் பாராட்டுவதில்லை. அன்றாட மனித உறவு நிலைகளில் நாம் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்களும் மரபுகளும்கூட மற்றவர்களை நெருக்குகின்றன.
(இ) ஆண்டவராகிய கடவுள் நம் அகத்தைப் பார்க்கிறார். பரிசேயர்கள் இயேசுவுடைய சீடர்களின் புறச் செயலைப் பார்த்து அவர்களைக் கடிந்துகொள்கிறார்கள். ஆனால், இயேசுவோ சீடர்களின் அகத்தைக் கருத்தில் கொள்கிறார். ஒருவரின் புறத்தைக் கண்டு வியந்து நிற்கும் நிலையிலிருந்து அகத்தைக் காண்பதற்கான துணிச்சலை நாம் பெறுவோம்.
இன்று நாம் திருத்தந்தை பபியானையும், புனித செபஸ்தியாரையும் கொண்டாடுகிறோம். இவர்களுடைய மனத்திடமும் துணிவும் நமக்குத் தூண்டுதலாக அமைகின்றன.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment