இன்றைய இறைமொழி
ஞாயிறு, 18 ஜனவரி ’26
பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு
எசாயா 49:3, 5-6. 1 கொரிந்தியர் 1:1-3. யோவான் 1:29-34
கடவுளின் செம்மறி!
வரலாற்று இயேசு பற்றிய ஆய்வில் அடிக்கடி கேட்கப்படுகிற ஒரு கேள்வி: ‘தாம் யார் – கடவுளின் மகன், கடவுள் – என்று இயேசுவுக்கு தெரிந்திருந்ததா?’ ‘இத்தெளிவை அவர் எப்போது, யார் வழியாகப் பெற்றார்?’ இயேசு தம்மைப் பற்றிய அறிவில் இறுதிவரை வளர்ந்துகொண்டே சென்றார் என்பதுதான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்தில் வானத்திலிருந்து ஒலிக்கிற குரல், ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே!’ என்று அறிக்கையிடுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், தன்னிடம் வருகிற இயேசுவைக் காண்கிற திருமுழுக்கு யோவான், ‘இதோ, கடவுளின் செம்மறி!’ என்று அறிக்கையிடுகிறார். தம் பணிவாழ்வின் நடுவே தம் சீடர்களிடம், ‘மக்கள் நான் யார் எனச் சொல்கிறார்கள்?, நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று தம் திருத்தூதர்களிடம் கேட்கிறார்.
நம்மைப் போலவே வரலாற்று இயேசுவும், ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
‘நான் யார்?’ என்னும் கேள்வியின் மறுபக்கமாக இருப்பது ‘நான் யாருக்காக?’ என்னும் கேள்வி. இந்த இரண்டு கேள்விகளைப் பற்றி எழுதுகிற திருத்தந்தை பிரான்சிஸ், இளைஞர்கள் ‘நான் யார்’ என்னும் கேள்வியிலிருந்து ‘நான் யாருக்காக’ என்னும் கேள்விக்குக் கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறார் (காண். ‘கிறிஸ்து வாழ்கிறார்’, 286).
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வருகிற மூன்று ஞாயிறுகளும் ‘வெளிப்பாடு ஞாயிறுகள்’ என அழைக்கப்படுகின்றன. திருக்காட்சிப் பெருவிழாவில் ஆண்டவராகிய இயேசு புறவினத்தாருக்கு ஒளியாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். திருமுழுக்குப் பெருவிழாவில் வானகத் தந்தை தம் மகனை இந்த உலகுக்கு வெளிப்படுத்துகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவை, ‘கடவுளின் செம்மறி – உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்’ என வெளிப்படுத்துகிறார்.
இன்றைய நற்செய்திப் பகுதி திருமுழுக்கு யோவானுக்கும் இயேசுவுக்கும் உள்ள நெருக்கத்தையும் வேறுபாட்டையும் விளக்குவதாகவும் அமைந்துள்ளது. ‘உலகிற்கு வந்துகொண்டிருந்த ஒளி’ இயேசு, ‘அந்த ஒளிக்குச் சான்று பகர்கிறவர்’ யோவான். யோவானுக்குப் பின்னர் வந்தாலும் யோவானுக்கு முந்தையவராக இருக்கிறார் இயேசு – ‘கடவுளோடும் கடவுளாகவும் இருக்கிற வாக்கு’. யோவான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறார். இயேசு தூய ஆவியாரால் திருமுழுக்கு கொடுக்கிறார்.
‘இதோ, கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்!’
‘செம்மறி’ அல்லது ‘ஆட்டுக்குட்டி’ என்னும் சொல்லை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:
(அ) பாஸ்கா ஆட்டுக்குட்டி – இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறுமுன் பாஸ்கா கொண்டாடுகிறார்கள். ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு அதன் இரத்தத்தால் தங்கள் வீட்டு நிலைகளில் குறியிடுகிறார்கள் (காண். விப 12). பாஸ்கா கொண்டாட்டம் அவர்களுடைய விடுதலையின் அடையாளமாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசுவும் பாஸ்கா ஆடு போல பலியாகி நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தருகிறார். மேலும், எருசலேம் ஆலயத்தில் பாஸ்கா ஆடு பலியிடப்படும் நேரத்தில் இயேசு சிலுவையில் இறப்பதாகப் பதிவு செய்கிறார் நற்செய்தியாளர் யோவான்.
(ஆ) பாவக் கழுவாய் ஆடுகள் – இஸ்ரயேல் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பாவக் கழுவாய் (எபிரேயத்தில் ‘யோம் கிப்பூர்’) நாளைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள் (காண். லேவி 16). இந்த நாளில்தான் தலைமைக்குரு திருத்தூயகத்துக்குள் நுழைவார். அவர் தம் பாவத்துக்காக கன்றுக்குட்டி ஒன்றை ஒப்புக்கொடுப்பார். பின் இரண்டு செம்மறி ஆடுகள் அவர்முன்பாக கொண்டு வந்து நிறுத்தப்படும். அவற்றில் ஒன்றை மக்களின் பாவங்களுக்காகப் பலியிடுவார் குரு. மற்றொரு ஆடு ஊரின் நடுவே அனுப்பப்படும். அந்த ஆட்டின்மேல் மக்கள் தங்கள் பாவங்களைச் சுமத்துவார்கள். அதன் முடியைப் பிடுங்க, அடிக்க, அதன்மேல் எச்சில் உமிழ என்று அந்த ஆடு அனைத்து அவமானங்களையும் சுமந்துகொண்டு பாலைநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கே இறந்து போகும். இயேசு இவ்விரண்டு ஆடுகளையும் அடையாளப்படுத்துகிறார். மக்களின் பாவங்களுக்காகப் பலியாகிறார். சிலுவையைச் சுமந்துகொண்டு ஊருக்கு வெளியே செல்கிறார்.
(இ) நல்லாயன் – தம்மை ‘நல் ஆயன்’ என்று அடையாளப்படுத்துகிற இயேசு, ‘நல் ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கையளிக்கிறார்’ என்கிறார் (காண். யோவா 10:11).
‘உலகின் பாவத்தைப் போக்குபவர்’ என்று நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். ஆனால், திருப்பலியில், ‘உலகின் பாவங்களைப் போக்குபவர்’ என்று சொல்கிறோம். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? யோவான் நற்செய்தியில் ‘பாவம்’ என்பது ‘மானிட நிலை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தூரம். அலகை செயல்படும் இடம்.’ இந்த நிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறார் இயேசு. ‘பாவங்கள்’ என்று சொல்லும்போது நம் தனிப்பட்ட பாவங்களை மன்னிக்கிறவராக, அவற்றை நீக்குபவராக இருக்கிறார் இயேசு. ‘பாவங்களிலிருந்து’ விடுபட அல்ல, ‘பாவத்திலிருந்து’ விடுபடவே நாம் முயற்சி செய்ய வேண்டும்.
இன்றைய முதல் வாசகம், துன்புறும் ஊழியனின் இரண்டாவது பாடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ‘ஊழியர்’ என்னும் சொல் இஸ்ரயேல் மக்களை, இறைவாக்கினரை, மெசியா என்னும் அரசரைக் குறிக்கலாம். இங்கே பாரசீக மன்னன் சைரசுவையும் குறிக்கலாம். ஊழியரை ஆண்டவராகிய கடவுள் ‘உருவாக்குகிறார்,’ ‘தெரிந்துகொள்கிறார்,’ ‘மதிப்பளிக்கிறார்,’ ‘உடன் நிற்கிறார்.’ ‘பிற இனத்தாருக்கு ஒளியாக’ உன்னை ஏற்படுத்தினேன் என்று ஊழியரிடம் கூறுகிறார் ஆண்டவராகிய கடவுள். இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருஅவையை ‘மக்களித்தாரின் ஒளி’ (இலத்தீனில், ‘லூமன் ஜென்ஷியும்’) என்று அழைக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், கடவுளின் திருத்தூதனாக தன்னையே அறிமுகம் செய்கிற பவுல், அனைவரும் தூயவராக அழைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார். மேலும் கிறிஸ்துவை ‘அனைவருக்கும் ஆண்டவர்’ என்று அறிக்கையிடுகிறார்.
பதிலுரைப்பாடலில், ‘உம் திருவுளம் நிறைவேற்ற வருகிறேன்!’ என மொழிகிறார் பாடல் ஆசிரியர். கடவுளின் திருவுளம் நிறைவேற்றுவதற்காக நம் நடுவே வருகிறார் இயேசு.
இன்றைய நாள் இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நான் யார்? நான் யாருக்காக?
மேற்காணும் கேள்விகளுக்கான விடைகளை நாமும் தேடிக்கொண்டிருக்கிறோம். வானகத் தந்தையோ, திருமுழுக்கு யோவானோ இயேசுவுக்கு வெளிப்படுத்தியதுபோல, இவற்றுக்கான விடைகளை நமக்கு யாரும் வெளிப்படுத்துவதில்லை. நாமாகவே முட்டி மோதிக் கண்டுபிடிக்கிறோம். வாழ்வின் பாதியில்தான் பல நேரங்களில் நமக்கு விடை கிடைக்கிறது. அல்லது வாழ்வின் இறுதியில் நாமாகத் திரும்பிப் பார்த்து நம் புள்ளிகளை இணைத்துக்கொள்கிறோம். இவ்விரு கேள்விகளுக்கான விடைகளை நாம் தேர்ந்து தெளிய வேண்டும். கடவுளைப் பற்றி அறிக்கையிடும்போதெல்லாம் நாம் நம்மைப் பற்றி அறிக்கையிடுகின்றோம். அறிக்கையிடுதலுக்கு அடிப்படையாக இருப்பது அறிதல்.
(ஆ) என் அறிக்கை என்ன?
முதல் வாசகத்தில், ‘மெசியா மக்களித்தாரின் ஒளி’ என்று அறிக்கையிடப்படுகிறார். இரண்டாம் வாசகத்தில், ‘கிறிஸ்து நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஆண்டவர்’ என்று அறிக்கையிடுகிறார் பவுல். நற்செய்தி வாசகத்தில் இயேசுவை, ‘கடவுளின் செம்மறி, உலகின் பாவம் போக்குபவர்’ என்று அறிக்கையிடுகிறார் யோவான். இயேசுவைப் பற்றிய என் அறிக்கை என்ன? கடவுள் பற்றிய பேச்சு அல்லது ஒருவர் தன் கடவுளை அறிக்கையிடுதல் என்பது வெளிவுலகில் ஏற்புடையதாகக் கருதப்படுவதில்லை. கடவுள் தொடர்பான அடையாளங்களை வேகமாக நாம் அழித்துக்கொண்டே வருகிறோம். நம் கடவுளைப் பற்றிய அறிக்கை மற்றவர்களுக்கு இடறலாக இருக்கிறது. ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் இந்த அறிக்கை செய்ய வேண்டும். கடவுள் எனக்கு யார்? என்பதை நாம் கேட்போம். இந்தக் கேள்வியில் கடவுள் பற்றிய புரிதல் மட்டுமல்ல, நம்மைப் பற்றிய புரிதலும் அடங்கியுள்ளது.
(இ) ஆட்டுக்குட்டி!
இன்றைய உலகம் குதிரைகளையும், சிங்கங்களையும், யானைகளையுமே பெரிதாக முன்மொழிகிறது. நாம் அனைவரும் கடவுளின் குதிரைகளாக, சிங்கங்களாக, யானைகளாக இருக்க விரும்புகிறோமே தவிர, செம்மறி போல, ஆட்டுக்குட்டி போல இருக்க விரும்புவது கிடையாது. யாராவது ஒருவர் நம்மைப் பார்த்து, ‘நீ ஒரு சிங்கம்! குதிரை! யானை!’ என்று வாழ்த்தினால் மகிழ்கிற நாம், ‘நீ ஓர் ஆடு!’ என்று சொன்னால் மகிழ்வதில்லை. உலகின் பார்வையில் வலுவற்ற உயிரினமாக இருக்கின்ற ஒன்றோடு இயேசுவை அடையாளப்படுத்துகிறார் யோவான். காயம்பட்டு நிற்கிற ஆட்டுக்குட்டியே மக்களின் காயத்திற்குக் கட்டுப்போடுகிற பலிப்பொருளாக மாறுகிறது. இன்னொரு பக்கம், ‘பலி ஆடு’ என்னும் மனநிலை நம்மில் வரக் கூடாது. மற்றவர்களுடைய பலிப்பீடத்தில் பலியாகிற ஆடுகள் அல்ல நாம். மாறாக, ‘இதோ நான் வருகிறேன்!’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை நம் கரத்துக்குள் வைத்திருக்கிற ஆடுகள்! இயேசு எந்த நிலையிலும் தலைவராகவே இருந்தார். ‘நானாக அளித்தாலன்றி, என் உயிரை யாரும் என்னிடமிருந்து எடுத்துவிட முடியாது’ (காண். யோவா 10:18) என்கிறார் இயேசு. நம் வாழ்க்கை நகர்வுகளை நம் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
‘உலகின் பாவம் போக்கும் செம்மறியை’ நற்கருணையில் உட்கொள்கிற நாம் அவர் தருகிற விடுதலையைப் பெற்றுக்கொள்ள முன்வருவோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment