இன்றைய இறைமொழி. சனி, 17 ஜனவரி ’26. என்னைப் பின்பற்றி வா!

இன்றைய இறைமொழி
சனி, 17 ஜனவரி ’26
பொதுக்காலம் முதல் வாரம், சனி
புனித பெரிய அந்தோனியார் – ஆதினத் தலைவர்

1 சாமுவேல் 9:1-4, 17-19, 10:1. மாற்கு 2:13-17

என்னைப் பின்பற்றி வா!

மாந்தர்கள் கடவுளோடு கைகோர்க்குமாறு விடுக்கப்படும் அழைப்பு நிகழ்வுகளில் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையே சில கவனிக்கத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பழைய ஏற்பாட்டில், (அ) ஒரு பிரச்சினை அல்லது தேவை இருக்கிறது. (ஆ) அந்தப் பிரச்சினை அல்லது தேவையைத் தீர்க்க கடவுள் ஒருவரை அழைக்கிறார். (இ) அழைக்கப்பட்டவர் தயக்கம் காட்டுகிறார். (ஈ) கடவுள் அவருக்கு ஓர் அறிகுறி தருகிறார். (உ) அழைக்கப்பட்டவர் உடனே ஆண்டவருடைய பணி ஏற்கிறார் அல்லது அவரைப் பின்பற்றுகிறார். எடுத்துக்காட்டாக, மோசே (விப 3), கிதியோன் (நீத 6) ஆகியோரின் அழைப்பு நிகழ்வுகள்.

ஆனால், புதிய ஏற்பாட்டில், (அ) மாந்தர்கள் தங்கள் அன்றாடச் செயல்பாட்டில் மூழ்கி இருக்கிறார்கள். (ஆ) யாரும் எதிர்பாராத நேரத்தில் இயேசு அங்கே வருகிறார். (இ) தம்மைப் பின்பற்றுமாறு இயேசு அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். (ஈ) இயேசு மட்டுமே உரையாடுகிறார், மற்றவர் அமைதி காக்கிறார். (உ) அழைக்கப்பட்டவர் அனைத்தையும் அனைவரையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். எடுத்துக்காட்டாக, முதற்சீடர் அழைப்பு (மாற் 1), லேவியின் அழைப்பு (இன்றைய நற்செய்தி வாசகம்).

இன்று அருள்பணி மற்றும் துறவற வாழ்வுக்கான இறையழைத்தலில் இன்னும் பழைய ஏற்பாட்டு அழைத்தல் முறைதான் பின்பற்றப்படுகிறது. ஆகையால்தான், இன்று இறையழைத்தல் வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. ஆண்டவர் இயேசு தங்கள் வாழ்வில் நுழைவதைக் கண்டுகொள்வதற்கான பயிற்சி இன்றைய இளவல்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் அவருடைய குரல் கேட்டு தகுந்த பதில் தருவார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவியை (மத்தேயு) அழைக்கிறார் இயேசு. தன் பணியில் மும்முரமாக இருந்த லேவி, ‘என்னைப் பின்பற்றி வா!’ என்னும் குரல் கேட்டவுடன் இயேசுவைப் பின்தொடர்கிறார். ‘உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன்!’ என்று இயேசு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. கட்டளை மட்டுமே இடுகிறார். இயேசுவின் கட்டளைக்காகவே காத்திருந்ததுபோல உடனே புறப்படுகிறார் லேவி.

லேவியின் இந்தத் தயார்நிலை நமக்கு ஆச்சர்யம் தருகிறது. அங்கிருந்த பணம், காத்திருப்போர், மேலதிகாரிகள் என யாரையும் எதையும் பொருட்படுத்தவில்லை மத்தேயு. அந்நொடியில் தன் வாழ்வின் நோக்கம் அறிகிறார். கணக்கு வழக்குகளை எழுதிக்கொண்டிருந்தவர் நற்செய்தியை எழுதும் அளவுக்கு உயர்கிறார். காலத்தைக் கடந்தவராகிறார். நம் வாழ்வின் நோக்கமும் கடவுளின் அழைப்பும் இணையும் புள்ளியில் நம் வாழ்க்கை மாற்றம் பெறுகிறது.

அதே நாள் மாலையில், தன் இல்லத்தில் இயேசுவுக்கு விருந்தளிக்கிறார் இயேசு. ‘நான் இவ்வளவுதான்!’ என்று இயேசுவுக்குத் திறந்துகாட்டுகிறார் மத்தேயு. ‘நான் உங்களுக்காக!’ என்று தம் பணி வாழ்வின் நோக்கம் அறிவிக்கிறார் இயேசு.

கடவுளின் வார்த்தைக்கு உடனடியாகப் பதில் தருகிறார் மத்தேயு.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக சவுல் தேர்ந்துகொள்ளப்படும் நிகழ்வை வாசிக்கிறோம். உயரமாகவும் அழகாகவும் அவர் இருப்பவராகப் பதிவு செய்கிறார் ஆசிரியர். தன் தந்தையின் காணாமற்போன கழுதைகளைத் தேடிக்கொண்டு வருகிற சவுலை எதிர்கொள்கிற சாமுவேல் அவரை அரசராகத் திருப்பொழிவு செய்கிறார். வியப்புகளின் இறைவனாக இருக்கிறார் கடவுள். சவுல் கழுதைகளைத் தேடிக் கொண்டிருக்க, கடவுளோ சவுலைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

மூன்று கேள்விகள்:

(அ) ‘நகர்ந்துகொண்டே இரு!’ என்று வாழ்க்கை நமக்கு விடுக்கிறது. இயேசு நகர்ந்துகொண்டே இருக்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்ற மத்தேயு நடக்கத் தொடங்குகிறார். சவுல் நகர்ந்துகொண்டே இருக்கிறார்.

(ஆ) ‘இவன் இப்படித்தான். அவள் அப்படித்தான்!’ என்று நம் உள்ளம் தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறது – தான் யார் என்பதை இயேசுவின் முன் துணிச்சலோடு அறிக்கையிடுகிறார் மத்தேயு. மற்றவர்கள் தரும் தீர்ப்பை அவர் கண்டுகொள்ளவில்லை.

(இ) இறைவனின் குரலை நான் கேட்க இயலாதவாறு எனக்குத் தொந்தரவாக இருக்கும் இரைச்சல்கள் எவை?

இன்று நாம் பெரிய (வனத்து) அந்தோனியாரை நினைவுகூர்கிறோம். மேற்கத்தேய துறவு வாழ்க்கையின் நிறுவுநர் என அழைக்கப்படுகிற இவர், ‘போய் உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின் என்னைப் பின்தொடர்க!’ என்னும் நற்செய்திப் பகுதியைக் கேட்டவுடன் உடனடியாகச் செயல்பட்டார். இவருடைய வாழ்க்கை வரலாறு புனித அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்கான தொடக்கப்புள்ளியாக இருக்கிறது. நம் வாழ்க்கை நம்மை அறியாமலேயே யாரோ ஒருவருடைய வாழ்க்கைப் பாதை மாற்றத்துக்குக் காரணமாக அமைகிறது. நம் செயல்கள் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment