இன்றைய இறைமொழி. வெள்ளி, 16 ஜனவரி ’26. ஒருபோதும் கண்டதில்லையே!

இன்றைய இறைமொழி
வெள்ளி, 16 ஜனவரி ’26
பொதுக்காலம் முதல் வாரம், வெள்ளி
1 சாமுவேல் 8:4-7, 10-22அ. மாற்கு 2:1-12

ஒருபோதும் கண்டதில்லையே!

முடக்குவாதமுற்ற ஒருவருக்கு இயேசு நலம் தரும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். முடக்குவாதமுற்ற நபரைத் தூக்கிக்கொண்டு வந்த நால்வரின் நம்பிக்கை, கூரை ஏறுவதற்கான அவர்களுடைய துணிச்சல், கூரையைப் பிரிக்குமாறு அனுமதித்த வீட்டு உரிமையாளரின் தாராள உள்ளம் நமக்கு வியப்பளிக்கிறது. இவை யாவும் இணைந்து வல்ல செயலை நிகழ்த்துகின்றன. இதற்கு மாறாக, இயேசுவுக்கு அருகில் இருந்து அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அவருக்கு எதிராக, அவருடைய அதிகாரத்துக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள்.

மனிதர்கள் இணைந்து வரும் நிகழ்வில் கடவுளின் வல்ல செயல் நடந்தேறுகிறது. நிகழ்வில் காணும் நான்கு நபர்கள் தாங்களாகவே முன்வந்து முடக்குவாதமுற்றவரைத் தூக்கிச் சென்றார்களா என்பது நிகழ்வில் பதிவுசெய்யப்படவில்லை. ஆனால், தங்கள் ஊரில் தங்கள் நடுவே நலமில்லாத ஒருவர் நலம் பெறுவதற்கான முயற்சியை அவர்கள் செய்ய விரும்பினார்கள். அவர்களுடைய செயலாற்றும் திறன் நாம் கற்க வேண்டிய பாடம்.

வலுவற்ற நபர்மேல் அவர்கள் கொண்டிருந்த பரிவு. அந்தப் பரிவோடு கலந்த பொறுப்புணர்வு. பொறுப்புணர்வால் உந்தப்பட்ட செயல். முடக்குவாதமுற்றவரின் பாவம், பாவத்திற்கான மன்னிப்பு பற்றிய எந்தப் புரிதலும் அவர்களுக்கு இல்லை. தங்கள் நண்பருக்கு இயேசு நலம் தருவார் என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.

இவர்களுக்கு மாறான ஒரு குழுவை இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் இறையாண்மைமேல், இறைவாக்கினர் சாமுவேல் மற்றும் அவருடைய மகன்கள்மேல் நம்பிக்கை இழக்கிற இஸ்ரயேல் மக்கள் தங்களை ஆட்சி செய்யுமாறு அரசன் ஒருவனை வேண்டி நிற்கிறார்கள். அரசன் தனக்கென எடுத்துக்கொள்கிற உரிமைகளைச் சுட்டிக்காட்டுகிறார் சாமுவேல். இருந்தாலும் தங்களைப் போருக்கு இட்டுச்செல்ல அரசன் வேண்டுமெனக் கேட்கிறார்கள் மக்கள்.

இஸ்ரயேல் சமூகத்திற்கு இந்த நிகழ்வு ஒரு புதிய தொடக்கம். ஆண்டவராகிய கடவுள் அவர்கள் கேட்டவாறே சவுலை அவர்களுடைய முதல் அரசராக நியமிக்கிறார்.

இன்று நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?

நம் எண்ணங்கள் அல்ல, மாறாக, நம் செயல்களே மாற்றங்களை உருவாக்குகின்றன. நல்ல எண்ணங்கள் ஆயிரம் இருக்கலாம். அவை, செயல்வடிவம் பெறவில்லை என்றால் வெறும் கனவுகளாகவே நின்றுவிடுகின்றன.

‘காற்று தக்கவாறு இல்லையென்று காத்துக்கொண்டே இருப்போர் விதை விதைப்பதில்லை. வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக்கொண்டே இருப்போர் அறுவடை செய்வதில்லை’ என்கிறது ஞானநூல் (சஉ 11:4).

கூட்டமாக இருக்கிறது, வீடு நிறைந்து இருக்கிறது, தூக்குவதற்குக் கடினமாக இருக்கிறது என்று எந்தவொரு சாக்குப்போக்கும் சொல்லாமல் உடனடியாகச் செயலாற்றுகிறார்கள் பெயரில்லாத அந்த நான்குபேர். அவர்களுடைய செயல்பாட்டால் நிகழ்ந்தேறிய வல்ல செயலைக் காண்கிற மக்கள், ‘இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே!’ என்று வியக்கிறார்கள்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment