இன்றைய இறைமொழி
வியாழன், 15 ஜனவரி ’26
பொதுக்காலம் முதல் வாரம், வியாழன்
1 சாமுவேல் 4:1-11. மாற்கு 1:40-45
கைப்பற்றப்பட்ட பேழை
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியர்களின் கைகளில் தோற்றுப் போகிறார்கள். இதற்கான காரணம் தங்களிடையே கடவுளின் பேழை இல்லாதது என நினைத்து அந்தப் பேழையைக் கொண்டு வருகிறார்கள். பேழை தங்கள் நடுவே வந்த பின்னர் அவர்கள் தழுவும் தோல்வி முந்தையை தோல்வியை விடக் கொடுமையானதாக இருக்கிறது.
இஸ்ரயேல் மக்களின் தோல்விக்குக் காரணம் என்ன?
(அ) கடவுளின் பிரசன்னம் தானாக நமக்கு வெற்றி தராது. அந்த வெற்றிக்கு நாம் நம்மையே தகுதிப்படுத்த வேண்டும். நீதித் தலைவர்களுக்குப் பின்னர் இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு உகந்ததை மட்டுமே தேடி கடவுளுக்குரியதைப் புறக்கணித்தார்கள்.
(ஆ) பேழைக்கு அருகில் பணி செய்த ஏலியின் மகன்கள் ஒப்னியும் பினகாசும் ஆண்டவருக்குப் பலியிடுவதில் பிறழ்வுபட்டார்கள். கூடார வாயிலில் பணி செய்த பெண்களோடு தகாத உறவில் இருந்தார்கள். அவர்களுடைய தந்தை ஏலி அவர்களை எச்சரித்தும் அவர்கள் தங்கள் வாழ்வைத் திருத்திக்கொள்ளவில்லை. ஆக, தகுதியற்ற நிலையில் பணி செய்கிற அருள்பணியாளர்கள் அவர்களைச் சார்ந்திருக்கும் மக்களுக்குத் தோல்வியை வருவிக்கிறார்கள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டபோது இரண்டு குருக்களும் கொல்லப்படுகிறார்கள்.
(இ) தலைமை இல்லை. இஸ்ரயேல் மக்கள் சாமுவேல் வழியாக ஆண்டவரிடம் முறையிடும்போது, ‘தங்களை போரில் வழிநடத்த அரசன் இல்லை’ என்று முறையிடுகிறார்கள். இஸ்ரயேல் மக்களை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து காப்பாற்றக் கூடிய, அவர்களுக்கு வழிகளைக் கற்பிக்கக்கூடிய அரசர் அல்லது தலைவர் அவர்கள் நடுவே இல்லை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுநோய் பிடித்த ஒருவருக்கு நலம் தருகிறார். கடவுளுக்கும் சமூகத்துக்கும் தூரமானவர் என்று வரையறுக்கப்பட்ட அவரை மீண்டும் கடவுளோடும் சமூகத்தோடும் ஒப்புரவாக்குகிறார் இயேசு. தொழுநோய் பிடித்தவரைத் தொட்டு குணமாக்கியதன் காரணமாக இயேசு தனிமைப்படுத்தப்படுகிறார்.
கடவுளின் பேழை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது. இயேசு தனிமைப்படுத்தப்படுகிறார்.
ஆண்டவர் தம் திருமுகத்தை மக்களிடமிருந்து மறைத்துக்கொள்ளும்போது மக்கள் திகிலடைகிறார்கள். நாம் கொண்டிருக்கும் விவிலியமும், நற்கருணையும், திருஅவையும் தாமாகவே நமக்கு நலம் தராது. நாம் கடவுளோடு ஒன்றித்திருக்கும்போதே நலம் பெறுகிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment