இன்றைய இறைமொழி
ஞாயிறு, 11 ஜனவரி ’26
ஆண்டவரின் திருமுழுக்கு விழா
எசா 42:1-4, 6-7. திப 10:34-38. மத் 3:13-17
உம் கையைப் பிடித்து!
ஓர் அகலமான சாலை. சாலையின் இப்பக்கமிருந்து அப்பக்கம் கடந்து செல்ல வேண்டும். ஒரு தந்தையும் அவருடைய மகளும் சாலையின் இப்பக்கம் நின்றுகொண்டிருக்கிறார்கள். நிறைய வாகனங்கள் கடந்து செல்கின்றன. தன் கையை மகள் நோக்கி நீட்டுகிறார் தந்தை. மகள் தந்தையின் விரல்களை இறுகப் பிடித்துக்கொள்கிறாள். ஓர் அடி முன் ஓர் அடி பின், இப்பக்கம் அப்பக்கம் பார்வை என்று நகர்கிறார் தந்தை. குழந்தை தந்தையின் விரலை மட்டும் பிடித்து தந்தையுடன் நடக்கிறது. தந்தையைப் பொருத்தவரையில் சாலையைக் கடத்தல் என்பது பொறுப்பு. மகளைப் பொருத்தவரையில் அது ஒரு விளையாட்டு.
வாழ்க்கை என்ற சாலை கடத்தலில் – இப்பக்கமிருந்து அப்பக்கத்திற்கு – தந்தையைப் போல நம் கரம் பிடித்து வழிநடத்துகிறார் கடவுள். அவருக்கு இது பொறுப்பு. அவருடைய கரம் பிடித்திருக்கும் நமக்கு இது ஒரு விளையாட்டு.
இன்று ஆண்டவராகிய இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வு இயேசுவைப் பொருத்தவரையில் ஒரு வெளிப்படுத்துதல் நிகழ்வு. பெத்லகNமில் முதலில் இடையர்களுக்கு, பின்னர் ஞானியருக்கு தம்மை வெளிப்படுத்திய இயேசு, இந்த நிகழ்வில் தாம் இறைமகன் (‘நீரே எம் அன்பார்ந்த மகன்’) என்று உலகுக்கு வெளிப்படுத்துகிறார். இந்த அனுபவம் இயேசுவுக்கும் ஓர் அடித்தள அனுபவமாக மாறுகிறது. தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அனுபவம் நோக்கி நகர்கிறார் இயேசு.
இயேசுவைப் பொருத்தவரையில் அவருடைய திருமுழுக்கு பணிவாழ்வின் தொடக்கமாக அமைகிறது. நம்மைப் பொருத்தவரையில் திருமுழுக்கு என்பது புதுப்பிறப்பின், பாவமன்னிப்பின் அடையாளமாக இருக்கிறது. திருமுழுக்கு நிகழ்வு வழியாக இயேசு தம்மை மானிடரோடு ஒன்றித்துக்கொள்கிறார். மானுடமும் இறைமையும் ஒரே நேரத்தில் இங்கே வெளிப்படுகிறது. திருமுழுக்கு யோவானின் கைகளிலிருந்து திருமுழுக்கு பெறும் அதே வேளையில் வானகத் தந்தையின் குரலும் கேட்கிறது. மூவொரு இறைவனின் வெளிப்பாடு இங்கே நிகழ்கிறது.
‘உம் கரத்தைப் பற்றிப் பிடித்து’ என்னும் முதல் வாசகச் சொற்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இன்றைய முதல் வாசகம், எசாயா இறைவாக்கு நூலில், ‘ஊழியர் பாடல்’ என்றழைக்கப்படும் நான்கு பாடல்களில் முதல் பாடல் ஆகும். இங்கே கடவுள் தாம் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் மக்களை, இறைவாக்கினரை, மெசியாவை, அரசரை, ‘இதோ! என் ஊழியர்’ என அழைக்கிறார். இந்த ஊழியரால் தன் நெஞ்சம் மகிழ்வதாகவும் மொழிகிறார். தொடர்ந்து, ‘உம் கையைப் பற்றிப் பிடித்து உம்மைப் பாதுகாப்பேன்’ என்று சொல்லி தன் உடனிருப்பை அவருக்கு உறுதிப்படுத்துகிறார். இறைவனின் கரம் அவரோடு இருப்பதால் ஊழியர் தன் பணியை நன்றாகச் செய்ய முடியும்.
‘இதோ! என் ஊழியர்!’ என்னும் வாழ்த்து அரசர்களின் திருப்பொழிவில் அரசரைப் பார்த்து அறிவிக்கப்படுகிறது: ‘நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்’ (திபா 22:7). ‘இஸ்ரயேல் என் மகன். என் தலைப்பிள்ளை’ (விப 4:22. காண்.ஓசே 11:11) என்று இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை உறவு கொள்கிறார் ஆண்டவராகிய கடவுள். தாவீதின் வழியாக வரும் அரசரைப் பற்றிய அறிவிப்பில், ‘நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்’ (2 சாமு 7:14) என்று கூறுகிறார் ஆண்டவர்.
கிறிஸ்துவின்மேல் நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை கடவுளுடைய பிள்ளைகள் என்னும் உரிமைப்பேற்றை நமக்கு வழங்குகிறது: ‘கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால், ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்’ (உரோ 8:14-16. காண். கலா 4:4-7. 1 யோவா 3:1).
மேற்காணும் விவிலியப் பகுதிகளை வாசிக்கும்போது, (அ) ‘மகன்’ என்பது ஒரே நேரத்தில் அடையாளம் அல்லது தான்மையாகவும், பணி அல்லது பொறுப்பாகவும் இருக்கிறது. (ஆ) கடவுள்தாமே இச்செயலை முன்னெடுத்து மானிடர்களை – இஸ்ரயேல் மக்கள், அரசர், மெசியா, நம்பிக்கையாளர்கள் – பிள்ளைகள் என அழைக்கிறார். கடவுள் முன்மொழிகிற இச்செயலுக்கு நாம் பதிலிறுப்பு செய்ய வேண்டும்.
தம் சீடர்களை தாம் வாழ்ந்த காலத்தில் ‘நண்பர்கள்’ என அழைக்கும் இயேசு (காண். யோவா 15:15), தம் உயிர்ப்புக்குப் பின்னர் அவர்களை ‘சகோதரர்கள்’ (காண். மத் 28:10) என்றும் ‘பிள்ளைகள்’ (காண். யோவா 21:5) என்றும் அழைக்கிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், கொர்னேலியுவின் இல்லத்தில் உரையாற்றுகிற பவுல், இயேசு தம் பணிக்காலத்தில் நன்மை செய்துகொண்டே சென்றார் என்று மொழியும்போது, ‘கடவுள் அவரோடு இருந்தார்’ என்று அறிக்கையிடுகிறார். இயேசு கடவுளாகவும் இருந்தார். கடவுளும் அவரோடு இருந்தார். இந்த அடையாளம் அவருடைய பணியாக மாறுகிறது.
நற்செய்தி வாசகத்தில், இயேசு திருமுழுக்கு பெறும் நிகழ்வை வாசிக்கிறோம். இயேசுவுக்கும் திருமுழுக்கு யோவானுக்குமான உரையாடலோடு தொடங்குகிறது நிகழ்வு. இயேசுவின் திருமுழுக்கு அவருடைய அடித்தள அனுபவமாக மாறுகிறது. மோசேக்கு எரியும் முட்புதரில், சவுலுக்கு (பவுல்) தமஸ்கு வழியில் நடந்த அனுபவம் போல இயேசு பெற்றுக்கொண்ட இந்த அனுபவம் அவருடைய வாழ்வின் எல்லா வகையான நிகழ்வுகளுக்கும் அவரைத் தயாரிக்கிறது. தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தம் தந்தை தம் கரம்பிடித்து தம்மை வழிநடத்துவதை இயேசு உணர்கிறார்.
இன்றைய நாள் நமக்கு விடுக்கும் அழைப்புகள் எவை?
(அ) இறைவனின் கரம் பிடித்தல்
படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் நம் முதற்பெற்றோரைத் தம் பிள்ளைகள் எனப் பெற்றெடுக்கிறார். ஆனால், அவர்கள் பிள்ளைகளுக்குரிய இடத்தை மறுத்துவிட்டு தந்தைக்குரிய இடத்தைப் பிடித்துக்கொள்ள விரும்பினார்கள். இஸ்ரயேலின் முதல் அரசர் சவுலை ஆண்டவராகிய கடவுள் தன் மகனாக நினைக்கிறார். அவரோ இறுமாப்பு உணர்வால் தன்னையே கடவுளுக்கு இணையாக ஆக்கிக்கொள்கிறார். ‘பிள்ளை’ என்னும் உறவை இன்று நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். ‘நான் கடவுளின் மகன், மகள்’ என்பது ஒரே நேரத்தில் நம் அடையாளமாகவும் பணியாகவும் மாற வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய கரம் பிடித்து நடக்கும் பொறுப்பு நமக்கு வேண்டும்.
(ஆ) அனைவரையும் உள்ளடக்கியது
இஸ்ரயேல் மக்களுக்கும் இறைவாக்கினர்களுக்கும் அரசர்களுக்கும் என தனிப்பட்ட பரிசாக இருந்த ‘மகன் என்னும் நிலை’ இயேசு கிறிஸ்து வழியாக நம் அனைவருக்கும் கிடைக்கிறது. நாம் அனைவருமே கடவுளின் மக்கள். இதையே ‘மக்களினத்தாரின் ஒளி’ (லூமன் ஜென்சியும்) என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு, அனைத்து மக்களும் கடவுளின் மக்கள் என்று முன்மொழிகிறது. ‘நாம் – அவர்கள்’ என்னும் இரட்டை நிலையை விடுத்து, ‘நாம்’ என்றும் உள்ளடக்கிய நிலையை நாம் பெற வேண்டும். பிரிவினை எண்ணங்களை நாம் விட வேண்டும்.
(இ) இறைவேண்டலும் தெளிந்துதேர்தலும்
ஒவ்வொரு நாளும் இறைவேண்டல் வழியாக, ‘நான் கடவுளின் மகன், மகள்’ என்று நாம் தெளிந்து தேர்ந்து நடக்க வேண்டும். அடிமை அல்லது பணியாளர் என்னும் நிலையில் அல்ல, மாறாக, பிள்ளைகள் என்னும் நிலையில் வாழும்போது நாம் கட்டின்மையோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கிறோம். நாம் எடுக்கும் தெரிவுகள் நன்றாக அமைகின்றன. நம் உள்ளார்ந்த இறுக்கம் தளர்கிறது.
இயேசுவின் திருமுழுக்கை நினைவுகூறும் நாம் நம் திருமுழுக்கையும் நினைவுகூர்ந்து நம் பெற்றோருக்காகவும் ஞானப்பெற்றோருக்காகவும், நமக்கு திருமுழுக்கு அளித்த அருள்பணியாளர்களுக்காகவும் இறைவேண்டல் செய்வோம்.
கிறிஸ்த வாழ்வு என்பது கடவுளின் மகனாக மகளாக அவருடைய கரம் பிடிப்பதற்கான அழைப்பு என்று கற்றுக்கொள்வோம். நம் கரம் பிடித்திருக்கும் கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, வாழ்வை ஒரு விளையாட்டு போல எடுத்துக்கொண்டு மகிழ்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment