இன்றைய இறைமொழி
செவ்வாய், 6 ஜனவரி ’26
திருக்காட்சிப் விழாவுக்குப் பின் செவ்வாய்
1 யோவான் 4:7-10. மாற்கு 6:34-44
பரிவால் பாடம்
இயேசுவுடைய பணித் தொடக்கத்தில் அவரை பரிவுநிறை மனிதராக முன்மொழிகிறார் மாற்கு நற்செய்தியாளர். கடற்கரையில் இறங்குகிற இயேசு அங்கு நின்ற மக்கள்கூட்டத்தைப் பார்த்து பரிவு கொள்கிறார். அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். போதனை முடிந்தவுடன் அவர்களுக்கு உணவு தருகிறார்.
இயேசுவின் சீடர்கள் இயேசுவின் மனநிலைக்கு முரணான மனநிலை கொண்டிருக்கிறார்கள். ‘மக்களை அனுப்பிவிடும்!’ ‘இருநூறு தெனாரியங்களுக்கு அப்பம் வாங்க வேண்டுமா?’ என்று எதிர்கேள்விகள் கேட்கிறார்கள்.
இயேசுவின் பொறுமையும் பொறுப்புணர்வும் நமக்கு வியப்பாக இருக்கிறது.
‘இவருக்கு நான் இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?’ எனக் கேட்பது வியாபாரம். ‘இவருக்கு நான் இதைச் செய்யாவிட்டால் அவருக்கு என்ன ஆகும்?’ எனக் கேட்பது பரிவு. சீடர்களின் மனநிலை வியாபார மனநிலையாக இருக்கிறது. இயேசுவின் மனநிலை பரிவு மனநிலையாக இருக்கிறது.
இறுதியில் பரிவே வெல்கிறது.
‘அதிகாரம் கொண்டிருப்பதால் பொறுப்புணர்வு வருகிறது’ என்று பல நேரங்களில் நாம் நினைக்கிறோம். ‘பொறுப்புணர்வினால்தான் அதிகாரம் வருகிறது’ என்று நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம். இயேசு மக்கள்மேல் காட்டுகிற பொறுப்புணர்வு அவர்கள்மேல் அவருக்கு அதிகாரம் அளிக்கிறது.
இயேசுவின் பரிவு சீடர்களுக்கும் மக்களுக்கும் பாடமாக அமைகிறது.
வாழ்வின் எதிர்மறையான நிகழ்வுகளுக்கு நாம் பதிலிறுப்பு செய்ய பொறுமையும் பொறுப்புணர்வும் அவசியம். ‘பதறிய காரியம் சிதறிப் போகும்’ என்று நாம் அறிந்திருந்தாலும் பதற்றமும் பொறுமையின்மையுமே நம் வாழ்வியல் அனுபவங்களாக இருக்கின்றன. இவற்றால் பல நேரங்களில் நாம் எதிர்வினை ஆற்றுகிறோம். கொஞ்சம் பரிவு, நிறைய பொறுமை, பொறுப்புணர்வு என்று நாம் மாறினால் வாழ்வின் எதிர்மறையான நிகழ்வுகளுக்கு நம்மால் பதிலிறுப்பு செய்ய முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘கடவுள் அன்பாய் இருக்கிறார்’ என மொழிகிற யோவான், கடவுளுடைய தற்கையளிப்பில் அவருடைய அன்பின் தன்மை விளங்குகிறது என்கிறார்.
அன்பு, தற்கையளிப்பு, பரிவு ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவற்றை நம் வாழ்வின் அணிகலன்களாக ஏற்போம். திக்கற்றவர்களுக்கும் பசியிலிருப்பவர்களுக்கும் நம்மால் உதவ இவை நமக்கு வழிசெய்கின்றன.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment