இன்றைய இறைமொழி. திங்கள், 5 ஜனவரி ’26. நாசரேத்தை விட்டு அகன்று

இன்றைய இறைமொழி
திங்கள், 5 ஜனவரி ’26
திருக்காட்சிப் விழாவுக்குப் பின் திங்கள்
1 யோவா 3:22-4:6. மத் 4:12-17, 23-25

நாசரேத்தை விட்டு அகன்று

‘கரையோரத்தில் நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பானவை. ஆனால், கரையோரத்தில் நிற்பதற்காகக் கப்பல்கள் கட்டப்படவில்லை’ என நாம் அறிவோம்.

முப்பது ஆண்டுகளாக மறைந்த வாழ்க்கை வாழ்ந்த இயேசு நாசரேத்து என்னும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுகிறார். நாசரேத்திலும் இயேசுவுக்கு எதிர்ப்பு இருந்தது. அவருடைய ஊரார் அவரைப் பற்றி இடறல்பட்டார்கள். நாசரேத்தை விட்டு நகர்கிற இயேசு கப்பர்நாகும் சென்று அங்கே குடியிருக்கிறார். அங்கே போதிக்கிறார். வல்ல செயல்கள் செய்கிறார்.

தன் பணிவாழ்வின் தொடக்கமாக இயேசு விளிம்புநிலை இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அதிகமாக மக்கள் வாழும் எருசலேமை அல்ல, மாறாக, மிகவும் குறைவான மக்கள் வாழும், மிகவும் சாதாரணமான பின்புலம் கொண்டிருந்த மக்களிடமிருந்து தம் பணியைத் தொடங்குகிறார். நிறையப் பேர் நம்மைப் பார்க்க வேண்டும், என்மேல் எப்போதும் மக்களின் கண்கள் விழ வேண்டும் என முன்வைக்கும் இன்றைய கலாச்சாரத்திற்கு மாற்றாக இருக்கிறது இயேசுவின் தொடக்கம்.

இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கமாக இருக்கிற இன்னொரு நிகழ்வு திருமுழுக்கு யோவானின் கைது. இவ்வாறாக, யோவானின் இடத்தை நிரப்புபவராகவும் இருக்கிறார் இயேசு.

விண்ணரசு என்பது பெரிய கருத்துருவாக, கனவாக இருந்தாலும், செயல்பாட்டில் அது இல்லை என்றால் அது வெறும் எண்ணமாக மாறிவிடும் என்பதை அறிந்திருக்கிற இயேசு உடனடியாகச் செயல்படத் தொடங்குகிறார். போதனையும் வல்ல செயல்களும் அவருடைய செயல்பாடுகளாக இருக்கின்றன.

நாம் இந்தப் புதிய ஆண்டில் மேற்கொள்ளப்போகும் திட்டங்கள் அனைத்தும் செயல்பாடுகளாக மாறவில்லை என்றால், வெறும் எண்ணங்களாகவே நின்றுவிடும். நாம் நிறைய ஐடியாக்கள் வைத்திருக்கிறோம். நன்றாகத் திட்டமிடுகிறோம். செயல்பாடு என்று வரும்போது தயங்குகிறோம், பயப்படுகிறோம், தள்ளிப் போடுகிறோம்.

விண்ணரசுக்கான செயல்பாடு இயேசுவில் தொடங்கி இன்று நம்மில் தொடர்கிறது. நாம் செய்ய வேண்டியது என்ன? நம் பாதுகாப்பு வளையம் என்னும் நாசரேத்தைவிட்டு வெளியேற வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் அடையாளங்களைக் கண்டு அவற்றின் பொருளை உய்த்துணர வேண்டும். சிறியதாகத் தொடங்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்னும் கட்டளையை நினைவூட்டுகிற யோவான், கடவுளோடு இணைந்திருக்க நம்மை அழைக்கிறார். நம் ஸ்மார்ட்ஃபோன்கள் மின்சாரத்தோடு இணைந்திருக்கும்போது ஆற்றல் பெறுகின்றன. நமக்குப் பயனுள்ளவையாக மாறுகின்றன. கடவுளோடு இணைந்திருக்கும் நாமும் அவருடைய அன்பினால் ஆற்றல் பெற்று, நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளவர்களாக மாறுகிறோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment