இன்றைய இறைமொழி
ஞாயிறு, 4 ஜனவரி ’26
திருக்காட்சிப் பெருவிழா
எசாயா 60:1-6. எபேசியர் 3:2-3, 5-6. மத்தேயு 2:1-12
கடலின் திரள் செல்வம்
சிற்றூர் ஒன்றுக்கு இளைஞன் ஒருவன் வந்தான். ஊருக்கு வெளியிலிருந்த ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருந்த அவனைப் பற்றி ஊரார் ஒவ்வொரு விதமாக ஊகித்தார்கள். அந்த இளைஞன் தன்னைப் பற்றி யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. ‘அவன் ஒரு ஞானி, பித்துப் பிடித்தவன்’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொன்னார்கள். ஒரு நாள் மாலையில் அந்த இளைஞனிடம் சிறுமி ஒருத்தி வருகிறாள். ‘உன் பையில் என்ன வைத்திருக்கிறாய்?’ என்று சிறுமி இளைஞனிடம் கேட்டாள். பழைய அந்தப் பையைத் திறந்த இளைஞன் அதிலிருந்த வைரக்கல்லை எடுத்து சிறுமியிடம் நீட்டினான். மாலை வெயில் பட்டு வைரம் மின்னியது. ‘இதை எனக்குத் தருவாயா?’ எனக் கேட்டாள் சிறுமி. ‘எடுத்துக்கொள்!’ என்று சொல்லி சிறுமியிடம் வைரக் கல்லைக் கொடுத்தான் இளைஞன். வைரக்கல்லின் பிரமாண்டம் கண்டு வியந்தாள் சிறுமி. மறுநாள் காலையில் துயில் எழுந்த இளைஞன் தன் அருகே அதே சிறுமி நிற்கக் கண்டான். ‘என்ன ஆயிற்று?’ என விசாரித்தான். தன் கையை விரித்து இளைஞனை நோக்கி நீட்டிய சிறுமி, ‘இந்தா உன் வைரம்!’ என்றாள். ஆச்சர்யத்துடன் இளைஞன், ‘உனக்கு இது வேண்டாமா?’ என்று கேட்டான். ‘இந்த வைரக் கல்லை அப்படியே எனக்குத் தரத் தூண்டிய உன் உள்ளத்தைத் தா!’ என்றாள் சிறுமி.
கீழ்த்திசையிலிருந்து வந்து தாங்கள் பெற்றிருந்த அறிவை, தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைத் தந்துவிட்டு வெறுங்கையராய் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பிய மூன்று ஞானியரை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
இறையியல் அடிப்படையில், திருக்காட்சிப் பெருவிழா ஆண்டவராகிய இயேசுவை புறவினத்தாருக்கு வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இலக்கிய அடிப்படையில், ஞானியரின் வருகை குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வுக்கான தொடக்கமாக இருக்கிறது.
விண்மீன், ஒளி, பயணம், மகிழ்ச்சி, அன்பளிப்புகள் ஆகியவை இன்றைய வாசகங்கள் முழுவதும் நிறைந்திருக்கின்றன.
(அ) ஒரு திடீர் நிகழ்வு
ஏரோதுவுக்கும் எருசலேம் வாழ் மக்களுக்கும் ஞானியரின் வருகை ஒரு திடீர் நிகழ்வாக இருக்கிறது. திடீரென ஊருக்குள் நுழைகிற ஞானியர், ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்’ என்று கூறுகிறார்கள். ஏரோதுவும் அவருடன் சேர்ந்த எருசலேமும் கலக்கம் அடைகிறது.
(ஆ) ஒரு நீடித்த நிகழ்வு
ஞானியர் நீண்ட பயணம் செய்து எருசலேம் வருகிறார்கள். அவர்கள் புறப்பட்ட இடமும் அவர்களுடைய அடையாளமும் நமக்கு மறைவாக இருக்கின்றன. ஆனால், ‘வானங்கள் கடவுளின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன’ என்பதை அறிந்தவர்களாகவும் நம்புகிறவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். கடவளின் வெளிப்பாட்டை தங்கள் உள்ளுணர்வாலும் வெளிப்புற அடையாளத்தாலும் அறிகிற அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
(இ) ஒரு தொடர் நிகழ்வு
எருசலேமுக்குள் நுழைந்த இவர்கள் தங்கள் பயணத்தைத் பெத்லகேம் நோக்கியும், பின்னர் தங்கள் வாழ்விடம் நோக்கியும் தொடர்கிறார்கள். எருசலேமும் பெத்லகேமும் அவர்களுடைய இலக்கு அல்ல. தங்கள் வாழ்வே இவர்களுடைய இலக்கு. ஒவ்வொருவரும் தாம் தொடங்கிய புள்ளி நோக்கியே நகர வேண்டும் என்னும் பெரிய வாழ்வியல் தத்துவத்தை இவர்கள் நமக்கு எடுத்துரைக்கிறார்கள். ‘பாதை மாறுவதே பயணம்’ என்று கற்றுத் தருகிறார்கள்.
இந்த நாளின் பொருள் என்ன?
(அ) பயணம்
நாம் அனைவருமே பயணிகள், திருப்பயணிகள். நகர்ந்துகொண்டே இருக்கும்போதுதான் நாம் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். கீழ்த்திசை ஞானியர் தொடக்கமுதல் இறுதி வரை பயணிகளாகவே காட்டப்படுகிறார்கள். இவர்களுடைய பயணத்தின் இலக்கு மாறிக்கொண்டே இருக்கிறது – எருசலேம், ஏரோதுவின் அரண்மனை, பெத்லகேம், சொந்த ஊர். ஆனாலும் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எந்தவொரு பாதுகாப்பு வளையத்தையும் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு வழிகாட்டியைக் கைக்கொள்கிறார்கள்: விண்மீன், மறைநூல் அறிஞர்களின் செய்தி, கனவில் எச்சரிக்கை. வாழ்வின் அழைப்புகள் எப்போதும் எங்கிருந்தும் வரலாம் என்று நினைக்கிற அவர்கள், தங்களுக்கு வெளியே தங்களுக்கு உள்ளே என அனைத்தையும் பற்றிக் கருத்தாக இருக்கிறார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் மீண்டும் நாடு திரும்பக் கூடிய பயணத்தை முன்னுரைக்கிறார் எசாயா. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் எருசலேம் திரும்புகிறார்கள். இழுத்துச் செல்லப்பட்டவர்கள் தூக்கி வரப்படுகிறார்கள். இருளும் அழுக்கும் அழுகையும் நிறைந்த இடம் ஒளியும் தூய்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக மாறுகிறது.
இன்று நாம் மேற்கொள்கிற அனைத்துப் பயணங்களையும் எண்ணிப்பார்ப்போம். பயன் தராத பயணங்கள் எல்லாம் நேர விரயமே. இலக்குகள் இல்லாத பயணங்கள் எல்லாம் ஆற்றல் விரயமே.
(ஆ) ஒளி
நற்செய்தி வாசகத்தில் விண்மீனின் ஒளி கீழ்த்திசை ஞானியருக்கு வழி காட்டுகிறது. ஏரோதுவின் அரண்மனை விட்டு வெளியே வருகிற ஞானியர் மீண்டும் ஒளியைக் கண்டுகொள்கிறார்கள். இன்றைய முதல் வாசகத்தில் எருசலேம் நகரமே ஒளிர்கிறது. இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் நற்செய்தி வழியாக புறவினத்தார் பெற்ற வெளிப்பாட்டை எடுத்துரைக்கிறார் பவுல். ஏரோதுவும் எருசலேம் மக்களும் விண்மீனைக் கண்டுகொள்ளவில்லை. தம்மைத் தேடுகிறவர்களுக்கே கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். நம் ஒவ்வொருவரும் ஒளியை நோக்கி வர வேண்டும் என்பதே கடவுளின் அழைப்பாக இருக்கிறது.
(இ) கொடை
கீழ்த்திசை ஞானியர் வெறும் பரிசுப் பொருள்களை மட்டும் குழந்தைக்குக் கொடுக்கவில்லை. மாறாக, யூதர்களுடைய அரசர் பிறந்திருக்கிறார் என்னும் செய்தியை ஏரோதுவுக்கும் எருசலேம் மக்களுக்கும் அறிவிக்கிறார்கள். தாங்கள் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். ஞானியர் தாங்கள் பெற்ற ஞானத்தைத் தங்களுக்குள் வைத்துக்கொள்வதில்லை.
இறுதியாக,
ஞானியரை நோக்கிய ஓர் இறைவேண்டலோடு நம் சிந்தனையை நிறைவு செய்வோம்:
‘தாமதமாக வருபவர்களின் பாதுகாவலர்கள் நீங்கள்!
உண்மையை நோக்கி நீண்ட பயணம் செய்கிறவர்களுக்கு!
அறிதலையும் கற்பனைiயும் குழப்பிக்கொள்பவர்களுக்கு!
தங்களை அறியாமலேயே தங்கள் நல்லுள்ளத்தால் மற்றவர்களுக்குத் துயரம் ஏற்படுத்தக் காரணமாக இருப்பவர்களுக்கு!
அறிவும் திறன்களும் இருப்பதால் எப்போதும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு!
நீங்கள் பாதுகாவலர்கள்!’
பெயரில்லாக் கீழ்த்திசை ஞானியர்களின் தேடல் தொடர்கிறது. தங்களுடைய தேடலில் தங்களை முழுவதுமாகக் கரைத்துக்கொள்கிறார்கள் இவர்கள்.
இவர்கள் கொண்டு வந்த பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் அல்ல, மாறாக, இவர்களுடைய தற்கையளிப்பு இதயமே நம்மை அவர்கள் நோக்கி இழுக்கிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment