இன்றைய இறைமொழி. சனி, 3 ஜனவரி ’26. பெயரும் பொருளும்

இன்றைய இறைமொழி
சனி, 3 ஜனவரி ’26
இயேசுவின் திருப்பெயர்
1 யோவான் 2:29-3:6. யோவான் 1:29-34

பெயரும் பொருளும்

‘நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார் … ஏனெனில், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.’ (திப 4:10-12)

திருச்சங்கத்தின்முன் விசாரிக்கப்படுகிற பேதுரு இயேசுவுடைய பெயரின் ஆற்றலை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.

‘கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே, இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 9:10)

இயேசுவின் மனுவுருவாதல் நிகழ்வு வழியாக அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயரின் மேன்மையை விளக்குகிறார் பவுல்.

இன்று இயேசுவின் திருப்பெயரைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

‘பெயர்’ என்பதன் விவிலிய முக்கியத்துவம் என்ன?

(அ) பெயர் ஒருவருடைய தான்மையைக் குறிக்கிறது. அவருடைய அடையாளமாக இருக்கிறது. எ.கா. ‘ஈசாக்கு’ (‘அவன் சிரித்தான்’).

(ஆ) பெயர் ஒருவருடைய பணியைக் குறிக்கிறது. எ.கா. ‘மோசே’ (‘நீரிலிருந்து எடுக்கப்பட்டவர்,’ ‘நீரிலிருந்து மக்களை எடுப்பவர்.’

(இ) பெயர் ஒருவருடைய புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. எ.கா. ‘சவுல்’ என்றழைக்கப்பட்டவர் ‘பவுல்’ என்று மாறியவுடன், அவர் புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப் புறப்படுகிறார் (காண். திப 9).

இயேசு என்னும் பெயர் நாசரேத்து இயேசுவுக்கு அடையாளமாக இருக்கிறது. ‘இயேசு’ (யோசுவா – அவர் மீட்பார்) என்னும் பெயர் அவருடைய மீட்கும் பணியைக் குறிக்கிறது. அவர் வழியாக மானுடம் அடைந்த புதிய தொடக்கத்தையும் நிறைவையும் குறிக்கிறது.

ஆண்டவராகிய கடவுளின் பெயர், ‘யாவே’, எருசலேம் ஆலயத்தில் குடியிருந்ததாக இஸ்ரயேல் மக்கள் நம்பினார்கள். ”என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்’ என்று இக்கோவிலைப் பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதை நோக்கி இருப்பனவாக’ என்று எருசலேம் ஆலயத்தில் இறைவேண்டல் செய்கிறார் அரசர் சாலமோன்.

இன்றைய திருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) இயேசுவின் பெயரைக் கொண்டு நாம் இறைவேண்டல் செய்யும்போது நாம் கேட்பது கிடைக்கிறது. இயேசுவே இதை மொழிகிறார்: ‘நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்’ (யோவா 14:13).

(ஆ) இயேசுவின் பெயரில் ஒன்றுகூடுகிற நாம் அவருடைய அடையாளத்தையும் பணியையும் தொடர வேண்டும். பெயர் என்பது நினைவு. நாம் ஒருவரை நினைவுகூரும்போது முதலில் அவருடைய பெயரையே நினைவுகூர்கிறோம். பெயரை நாம் மறக்கும்போது அந்த நபரையும் மறக்கிறோம். இயேசுவின் பெயர் அவருடைய பணி, போதனை, பயணம் என அனைத்தையும் நம் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.

(இ) நம் ஒவ்வொருவருடைய பெயரும் – நமக்கு நாமே வழங்கிக்கொள்கிற, நமக்கு வழங்கப்பட்ட பெயரும்’ – நம் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. ‘திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்’ (நீமொ 22:1) என்கிறது விவிலியம். நம் பெயரை நற்பெயராக மாற்றுவதும் நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்வதும் அவசியம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment