இன்றைய இறைமொழி. செவ்வாய், 30 டிசம்பர் ’25. கடவுளின் இரக்கம்

இன்றைய இறைமொழி
செவ்வாய், 30 டிசம்பர் ’25
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை 6-ஆம் நாள்
1 யோவான் 2:12-17. லூக்கா 2:36-40

கடவுளின் இரக்கம்

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வில் சிமியோன், அன்னா என்னும் இரண்டு கதைமாந்தர்களை அறிமுகம் செய்கிறார் லூக்கா. சிமியோன் ஆலயத்திற்குள் நின்று குழந்தையைக் கைகளில் ஏந்துகிறார். அன்னா அந்த நேரத்தில் – தன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு வருகிறார்.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண் ஒருவர் (சிமியோன்) குழந்தை இயேசுவைத் தன் கைகளில் ஏந்தினார். அதன் இணையாக இன்றைய நற்செய்தியில் பெண் ஒருவர் (அன்னா) குழந்தை இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் அறிவிக்கின்றார்.

ஆசேர் குலம் செழுமையான குலம் (காண். தொநூ 49:20, இச 33:24). இந்தக் குலத்திலிருந்து வந்தவர் அன்னா. செழுமை இழந்து காணப்படுகின்றார் இவர். மணமாகி ஏழு ஆண்டுகள் (நிறைவைக் குறிக்கும் எண்) கணவரோடு வாழ்கின்றார். இவருக்கு வயது எண்பத்து நான்கு (ஏழு முறை பன்னிரண்டு – நிறைவிலும் நிறைவு).

வாழ்வின் பயணம் மாறுகிறது இவருக்கு.

மணவாழ்க்கை என்ற இருந்த இவருடைய பயணம் கணவருடைய இறப்புக்குப் பின்னர் கடவுளுடைய ஆலயத்தில் வாழ்க்கை என்று மாறுகிறது இவருக்கு. வாழ்வின் பயணம் மாறினாலும் இனிமையாகப் பயணம் செய்கின்றார் அன்னா.

அன்னாவைப் பற்றி ஆறு குறிப்புகளை வழங்குகிறார் லூக்கா: (அ) ‘பானுவேலின் மகள்,’ (ஆ) ‘இறைவாக்கினர்,’ (இ) ‘வயது முதிர்ந்தவர்,’ (ஈ) ‘கைம்பெண்,’ (உ) ‘எண்பத்து நான்கு வயதுடையவர்,’ (ஊ) ‘நோன்பு இறைவேண்டல் திருப்பணி செய்தவர்’.

மேற்காணும் ஆறு குறிப்புகளில் முதல் குறிப்பை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்: ‘பானுவேலின் மகள் அன்னா.’ ‘பானுவேல்’ என்றால் ‘கடவுளின் முகம்.’ முதல் ஏற்பாட்டில், ஆடவரோடு மற்போரிடுகிற யாக்கோபு, நிகழ்வின் இறுதியில், ‘நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டேன்’ என்று சொல்லி, அந்த இடத்திற்கு ‘பெனியேல்’ என்று பெயரிடுகிறார் (தொநூ 32:30). தொடர்ந்து, ஏசாவைச் சந்திக்கிற யாக்கோபு, ‘உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தையே காண்பதுபோல் இருக்கிறது’ என்கிறார் (33:10).

‘பானுவேல்-அன்னா’ என்னும் பெயர்களை மொழிபெயர்த்தால், ‘கடவுளின் இரக்கம்’ அல்லது ‘கடவுளுடைய முகமே இரக்கம்’ என்று பொருள் வருகிறது.

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் அவருடைய மனுவுருவாதலில் நாம் கடவுளின் முகத்தையே காண்கிறோம். கடவுளின் முகம் இரக்கம் என்பதைத் தம் போதனையாலும் வல்ல செயல்களாலும் பணிகளாலும் நமக்கு எடுத்துரைத்தார் இயேசு.

கடவுளின் முகத்தைக் காண்கிற அனுபவம் பெற்ற யாக்கோபின் வாழ்க்கை மாறுகிறது.

கிறிஸ்து அனுபவம் பெற்ற நம் முகம் மாற வேண்டும். அன்னா கடவுளின் முகத்தைக் கண்டதால்தான், மனித முகங்கள் அவரை விட்டு விலகினாலும் தன் வாழ்வின் நிறைவைக் கண்டார். அவர் அனுபவித்த நிறைவு உணர்வை ’84’ என்னும் எண் (ஏழு முறை பன்னிரண்டு அல்லது பன்னிரண்டு முறை ஏழு) உணர்த்துகிறது.

தன் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் தன்னை எதிர்மறையான நிலைக்குத் தள்ளியிருந்தாலும், தன் வாழ்வின் தலைவி என எழுந்து நின்று குழந்தையைக் கையில் ஏந்துகிறார் அன்னா. குழந்தையைப் பற்றி அறிவிக்கத் தொடங்குகிறார்.

வாழ்வில் இழப்புகளை நாம் சந்திக்கும்போது, பல நேரங்களில் நம் உள்ளம் மற்றவர்களுக்கான கதவை மூடிக்கொள்ளவே நம்மைத் தூண்டுகின்றது. ஆனால், கதவுகள் மூடப்பட்டால் இழப்பின் சோகம் அதிகமாகிறது. கதவுகள் திறந்து நாம் மற்றவர்களை நோக்கத் தொடங்கினால், வாழ்க்கை ரம்மியமாக மாறுகிறது.

அன்னா எல்லாரிடமும் குழந்தையைப் பற்றிப் பேசுகின்றார்.

தன் மகிழ்ச்சியை அவர் தன்னகத்தே வைத்துக்கொள்ளவில்லை.

வயது, தன் மணவாழ்க்கை நிலை என எதுவும் அவரைத் தடுக்க இயலவில்லை.

ஒருவர் மற்றவரிடம் நாம் நிறைவை மட்டும் கண்டாலே, அந்த நிறைவை மட்டும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னாலே வாழ்க்கை இனிமையாகும்.

அன்னா பாட்டியைப் பற்றி ஊரார் எப்படிப் பேசினாலும், அவர் என்னவோ அனைவரையும் பற்றி நன்மையானவற்றையே பேசினார். ஏனெனில், ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ளதைத்தானே மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment