இன்றைய இறைமொழி
திங்கள், 22 டிசம்பர் ’25
கிறிஸ்து பிறப்பு நவநாள் – 6
1 சாமுவேல் 1:24-28. லூக்கா 1:46-56
அரசரே, வாரும்!
ஓ மக்களினங்களின் அரசரே, அவர்களின் மேலான விருப்பமே,
இரு திசைகளை இணைக்கிற மூலைக்கல்லே,
வாரும்! நீர் களிமண்ணிலிருந்து உருவாக்கிய மானுடத்தை மீட்டருளும்!
‘இப்பையனுக்காகவே நான் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.’
‘ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.’
குழந்தைப்பேறில்லாத அன்னா ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்து சாமுவேலைப் பெற்றெடுக்கிறார். தனிப்பெரும் இறைவாக்கினராகவும் தலைவராகவும் திகழ்ந்த சாமுவேல் வழியாகவே இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய முதல் அரசரான சவுலைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆண்டவரிடமிருந்து தாம் பெற்றதை ஆண்டவருக்கே அளிக்கிறார் அன்னா.
இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கையில் அரசாட்சி என்ற ஒன்று சவுல் வழியாகத் தொடர்கிறது. மக்கள் விரும்பிக் கேட்ட அரசர்கள் அவர்களை சிலைவழிபாட்டுக்கு இட்டுச் சென்றதன் வழியாக அனைவரும் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். அரசர்களின் தன்னலமான செயல்களை இறைவாக்கினர்கள் கண்டித்தார்கள். நீதியும் நேர்மையும் கொண்ட அரசை, தங்களுக்கு அமைதியைத் தருகிற அரசரை மக்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். மெசியா வாசிப்பில், கிறிஸ்துவே அந்த அரசர் என நாம் புரிந்துகொள்கிறோம்.
எலிசபெத்து தம்மை வாழ்த்தியபோது அவரை நோக்கிப் பதில்மொழி கூறாத மரியா ஆண்டவராகிய கடவுளை நோக்கித் தம் உள்ளத்தை எழுப்புகிறார். கடவுள் தம் மகன் வழியாக இந்த உலகில் நிகழ்த்தவிருக்கிற மீட்புத் திட்டத்தை முன்மொழிகிறார்.
ஆண்டவராகிய கடவுள் ஆட்சி செய்யும்போது அனைத்தையும் புரட்டிப் போடுகிறார். வலுவின்மை வல்லமையாகவும், வல்லமை வலுவின்மையாகவும் மாறுகிறது. எளியோர் ஏற்றம் பெறுகிறார்கள். வறியோர் நிறைவு அடைகிறார்கள்.
இனியவர்களே, அனைத்தையும் அனைவரையும் ஆளுகை செய்யும் நம் கடவுள் நம் வலுவின்மையில் நம்மோடு உடன் நிற்கிறார்.
மக்களினங்களின் அரசரே, நீர் ஆளுகை செய்யுமாறு நாங்கள் உள்ளங்களை உமக்கே அர்ப்பணிக்கிறோம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment