இன்றைய இறைமொழி
ஞாயிறு, 21 டிசம்பர் ’25
கிறிஸ்து பிறப்பு நவநாள் – 5
இபா 2:8-11. லூக் 1:39-45
விடியலே, வாரும்!
ஓ விடியலின் விண்மீனே, நிலையான ஒளிச்சுடரே, நீதியின் சூரியனே,
வாரும்! இருளிலும் இறப்பின் நிழலிலும் உழல்வோர்மேல் ஒளி வீசும்!
‘என் காதலர் குரல் கேட்கின்றது. இதோ, அவர் வந்துவிட்டார். மலைகள்மேல் தாவி வருகின்றார். குன்றுகளைத் தாண்டி வருகின்றார் … என் வெண்புறாவே! காட்டிடு உன் முகத்தை. எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!’
‘ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்’
இரவின் இருளில் இருந்த தலைவி, தன் இல்லத்தின் கதவுகளைத் திறந்து பார்த்தபோது அங்கே தலைவன் நிற்கிறான். தன் வாழ்வின் கிழக்கு எனத் தலைவனைக் கண்டுகொள்கிறாள் தலைவி. முற்காலத்தில் வீடுகள், கதிரவனின் ஒளியை உள்ளே வரவேற்கும் விதமாக, பெரும்பாலும் கிழக்கே வாசல் கொண்டதாகக் கட்டப்பட்டன. தன் வீட்டைத் திறக்கிற காதலி, கதிரவனுடன் சேர்ந்து தன் காதலனையும் காண்கிறாள்.
இரவு முடிந்து விடியற்காலையில் தன் வீட்டின் கதவைத் திறந்த எலிசபெத்து அங்கே மரியா நிற்கக் காண்கிறார். ‘ஓ கிழக்கே!’ ‘ஓ விடியலே!’ என்று அவரைத் தழுவிக்கொள்கிறார். மரியாவின் வாழ்த்தொலி எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தர, எலிசபெத்தோ தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்படுகிறார். ‘என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ எனக் கேட்கிறார் எலிசபெத்து.
இனியவர்களே, ஆண்டவராகிய கடவுள் வியப்புகளின் இறைவனாக இருக்கிறார். வீட்டின் கதவை நாம் திறக்கும் வரை வீட்டுக்கு வெளியே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. திறக்கும்போது அங்கே நாம் கடவுளைக் கண்டுகொள்கிறோம். அவர் நம்மேல் ஒளிர்கிறார். நம் வாழ்வின் முடிவு இது என்று நாம் கருதும் நேரங்களில், ‘இதுவே விடிவு!’ எனக் காட்டுகிறார் கடவுள்.
விடியலின் விண்மீனே, எம் வாழ்வின் இருள் போக்கும்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment