இன்றைய இறைமொழி. புதன், 3 டிசம்பர் ’25. மறைப்பணி புனிதர்

இன்றைய இறைமொழி
புதன், 3 டிசம்பர் ’25
திருவருகைக்காலம் முதல் வாரம், புதன்
புனித பிரான்சிஸ் சவேரியார், பெருவிழா (இந்தியா)
எசாயா 61:1-3. 1 கொரிந்தியர் 9:16-19, 22-23. மாற்கு 16:15-20

மறைப்பணி புனிதர்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் இன்று கொண்டுள்ள நம்பிக்கையை நம் மூதாதையரின் உள்ளத்தில் விதைத்த பெரிய தகப்பன், ஞானத் தகப்பன், புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

அருள்பணியாளர்களின் கட்டளை செபத்தில், இன்றைய நாளின் இரண்டாம் வாசகம், புனித பிரான்சிஸ் சவேரியார் புனித இஞ்ஞாசியாருக்கு (தன் சபை நிறுவுனருக்கு) எழுதிய கடிதத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அன்று அவர் சந்தித்த சவால்கள், நம் நாட்டில் நிலவிய வறுமை மற்றும் எழுத்தறிவின்மை, மறைபரப்புப் பணியாளர்களின் ஆர்வம் ஆகியவற்றை இக்கடிதத்திலிருந்து நாம் உணர முடிகிறது.

சவேரியார் காலத்தில் இருந்த சூழல் இப்போது இல்லைதான். அன்று, கத்தோலிக்கத் திருஅவையில் மட்டும்தான் மீட்பு உண்டு என்று திருஅவை நம்பியது. இன்று, எல்லா சமயங்களிலும் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் என்று நம்புகிறது. அன்று, மறைத்தூதுப் பணிக்கு திருஅவை முக்கியத்துவம் கொடுத்தது. அதாவது, நிறைய இடங்களுக்குச் செல்ல வேண்டும். தன் இருத்தலை நிறைய ‘இடத்தில்’ பரப்ப வேண்டும். காலனியம் என்பது இடம் பரப்பலின் எச்சமே. இன்று, நாம் மறைக்குச் சான்று பகர்ந்தால் போதும் என்றும், யாரையும் நம்மிடம் இழுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும், ‘நேரம் இடத்தைவிடப் பெரியது’ என்றும் கற்பிக்கின்றது. அன்று, கிறிஸ்தவம் என்பது திருமுழுக்கு, நம்பிக்கை அறிக்கை, கர்த்தர் கற்றுக்கொடுத்த செபம், அருள் நிறைந்த மரியே என்று மட்டும் இருந்தது. இன்று, கிறிஸ்தவம் என்றால் ஆலயம், பங்குத்தந்தை, ஆயர், திருத்தந்தை, சங்கம், மாமன்றம், திருஅவைச் சட்டம், பங்குப் பேரவை, பக்த சபைகள், அமைப்புகள், இயக்கங்கள், அருள்பணியாளர்கள், துறவியர்கள், கல்வி நிறுவனங்கள், பணம், சொத்து என்று மாறி நிற்கிறது. கிறிஸ்தவத்திற்கு வெளியேயும் நிறைய மாற்றங்கள். அன்று சவேரியார் திருமுழுக்கு கொடுத்தது போல, இன்று நாம் ஆயிரக்கணக்கில் திருமுழுக்கு கொடுக்க முடியாது. எல்லா சமயங்களும் தங்கள் சமயத்தின்மேல் அடிப்படைவாத நம்பிக்கை கொண்டிருக்கின்றன. மதமாற்றத்தை இன்று யாரும் விரும்புவதில்லை. அன்று சவேரியார் தெருவில் நின்று போதித்ததுபோல இன்று நாம் போதிக்க முடியாது. சட்ட, ஒழுங்கு பிரச்சினை வந்துவிடும். மேலும், கிறிஸ்தவத்திற்குள்ளேயே இன்று பல பிரிவுகளாகி நிற்கின்றோம். நம்மில் யாருடைய சபை உண்மையான சபை என்று நிரூபிக்கவே நமக்கு நேரம் சரியாகப் போய்விடுகிறது. ஒரே கத்தோலிக்கத் திருஅவை என்று ஓரளவுக்கு ஒத்துக்கொண்டாலும், வழிபாட்டு ரீதி அடிப்படையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன.

சவேரியாரைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நம் சிந்தனையைச் சுருக்க இயலாது. இன்று கிறிஸ்தவம் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளவே பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. கூட்டொருங்கியக்கம், மாமன்றம், இணைந்து பயணித்தல், யூபிலி 2025, எதிர்நோக்கு, திருப்பயணம் என்று சொல்லித் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறது. ஏனெனில், இப்போது இருப்பது தொடர்ந்தால் கிறிஸ்தவம் மறைந்துவிடும் அல்லது பொருந்தாதது ஆகிவிடும் என்னும் ஐயத்தையும் பயத்தையும் கொண்டிருக்கிறது. நிறுவனம் மட்டுமல்ல, தனிநபரும் மாற்றம் பெறாவிட்டால் பொருந்ததாகி விடுவார்.

சவேரியாரின் திருநாள் நமக்கு முன்மொழியும் சவால்கள் மூன்று:

(அ) அருள்பொழிவை உணர்வது

‘ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்’ என்று முதல் வாசகத்தில் மொழிகிறார் எசாயா. திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும், பணிக்குருத்துவத்தின் வழியாக திருநிலையினரும் அருள்பொழிவு பெற்றுள்ளனர். அதாவது, ஒரு சிறப்பு அழைப்பை நாம் பெற்றுள்ளோம். இந்த அழைப்பை நாம் இன்று நினைவில்கொள்ள முன்வருவோம். ‘இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து, அக்கறையற்றவனாய் இராதே’ (1 திமொ 4:14) என அறிவுறுத்துகின்றார் பவுல்.

(ஆ) எல்லாருக்கும் எல்லாம் என ஆதல்

தன் நற்செய்தி அறிவுப்பணி பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற பவுல், ‘ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்’ என்கிறார். சவேரியார் பேராசிரியராகப் பணி செய்கின்றார். இஞ்ஞாசியாரின் சொல் கேட்டு தன் பாதையை மாற்றுகின்றார். தன் பணி முழுவதிலும் மற்றவர்களை மட்டுமே நினைக்கின்றார். ‘மற்றவர்கள் என்னைப் போல ஆக வேண்டும்’ என எண்ணுவதற்குப் பதிலாக, குழந்தைக்கு குழந்தையாக, இளவலுக்கு இளவலாக, பெரியவருக்குப் பெரியவராக என்று மாறுகின்றார். மொழி அறிதல், உணவுப் பழக்கம் கற்றல், தூக்கம் மறத்தல் என அவர் ஏற்ற துன்பங்கள் ஏராளம்.

(இ) ஆண்டவர் உறுதிப்படுத்துகிறார்

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் உடனிருந்து நிகழ்ந்த அரும் அடையாளங்களால் சீடர்களின் வார்த்தையை உறுதிப்படுத்தினார் எனப் பதிவு செய்கின்றார் மாற்கு. ஆண்டவரின் உடனிருப்பை சவேரியார் என்றும் உணர்ந்தார். இறைவேண்டலில் நிலைத்திருந்தார். சில நேரங்களில் நம் பணியில் நாம் மற்றவர்களைக் கண்முன் நிறுத்திக்கொண்டே இருந்துவிட்டு ஆண்டவரை மறந்துவிடுகிறோம். ஆண்டவர் இல்லை என்றால் நம் பணி வெறும் சமூக மேம்பாட்டுப் பணி என்று ஆகிவிடும். ஆவியாரால் இயக்கப்படுகின்ற ஆன்மிகப் பணி என்பதை நாம் என்றும் நினைவில் கொள்தல் வேண்டும்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment