இன்றைய இறைமொழி. வியாழன், 27 நவம்பர் ’25. எருசலேம் மிதிக்கப்படும்

இன்றைய இறைமொழி
வியாழன், 27 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், வியாழன்
தானியேல் 6:11-27. லூக்கா 21:20-28

எருசலேம் மிதிக்கப்படும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று கருத்துருக்கள் உள்ளன: ஒன்று, எருசலேம் நகரின் அழிவு பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பு, இரண்டு, திருவெளிப்பாட்டு நடையில் முன்மொழியப்படுகின்ற உலகின் இறுதி நாள்கள், மற்றும் மூன்று, மானிட மகனின் வருகையின்போது நம்பிக்கையாளர்களின் பதிலிறுப்பு.

கிபி 70-இல் நடந்த எருசலேம் முற்றுகை வரலாற்றில் மிக முக்கியமானது. முதல் யூத-உரோமைப் போர் என அழைக்கப்படுகின்ற அந்தப் போரில் எருசலேம் நகரமும் ஆலயமும் உரோமையர்களால் அழிக்கப்படுகின்றது. தீத்து மற்றும் திபேரியு ஜூலியஸ் இந்தப் படையெடுப்பை முன்னெடுக்கின்றனர். இந்த முற்றுகை ஏறக்குறைய ஐந்து மாதங்கள் நீடித்தன. யூதர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றாலும், இறுதியால் உரோமைப் பேரரசு வெற்றிகொள்கின்றது.

இந்தப் போரின் கோர முகத்தை வரலாற்று ஆசிரியர் யோசேஃபுஸ் இப்படிப் பதிவு செய்கின்றார்: ‘அழிவின் காட்சி கொடூரமாக இருந்தது. மரங்களாலும் தோட்டங்களாலும் நிறைந்திருந்த இடங்கள் பாலைவனமாகக் காட்சி அளித்தன. யூதேயாவின் அழகைப் பார்த்து வியந்த எந்த அந்நியரும் இப்போது அதைப் பார்த்தால், அதன் பரிதாப நிலை கண்டு புலம்புவார். அழகின் அடையாளங்கள் அனைத்தும் குப்பையாகக் கூட்டித் தள்ளப்பட்டன. இதற்கு முன்னர் இந்த நகரைப் பார்த்த ஒருவர் அதைப் போல இன்னொரு முறை காண இயலாது. இந்த நகரில் தங்கியிருந்தவரும் இந்நகரை அடையாளம் காண இயலாது.’

எருசலேம் முற்றுகை நடைபெற்ற பின்னர், கிபி 80-90 ஆண்டுகளுக்குள் லூக்கா தன் நற்செய்தியை எழுதியிருப்பார். ஆக, எருசலேம் முற்றுகையை அவர் நேரடியாகக் கண்டவராகவோ, அல்லது எருசலேம் அழிவின் எச்சத்தைக் கண்டவராகவும் இருந்திருப்பார். முற்றுகை நடந்த வேளையில் பெண்களும், குழந்தைகளும் அனுபவித்த இன்னல்களை அவர் அறிந்திருப்பார். தன் காலத்திலும் எருசலேம் பிறஇனத்தார் கையில் இருப்பதைக் கண்டிருப்பார். தான் கண்ட அனைத்தையும் இயேசுவே முன்னுரைத்தாக அவர் பின்நோக்கிப் பதிவு செய்திருப்பார். இந்த இலக்கிய நடைக்குப் பெயர் ‘ரெட்ரோஜெக்ஷன்’ என்பதாகும்.

மேலும், உலக முடிவு பற்றிய ஆவல் மேலோங்கி இருந்ததால், உலக முடிவு பற்றிய கருத்துகளும் இயேசுவால் முன்னுரைக்கப்படுவதாக எழுதப்படுகின்றன. இயேசுவின் சமகாலத்து ஸ்தாயிக்கியர்கள் பிரபஞ்சம் 3000 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அதன் பின்னர் அது மீண்டும் தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் என்றும் கருதினர். தங்கள் காலத்தில் அது நிகழ்வதாக அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

மானிட மகனின் இரண்டாம் வருகையும் கிறிஸ்தவ குழுமத்தால் எதிர்நோக்கப்பட்டது. மானிட மகனின் வருகையின்போது தங்கள் துன்பம் அனைத்தும் மறைந்துபோகும் என்று எண்ணினர். ஏனெனில், அவர்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக மிகவும் துன்புறுத்தப்பட்டனர்.

ஆக, லூக்கா என்னும் வரலாற்று ஆசிரியர், தன் சமகாலத்து நிகழ்வுகளை, இயேசு முன்னறிவித்த நிகழ்வுகளாகப் பதிவு செய்கின்றார். அல்லது இயேசுவே இதை முன்னுரைத்திருக்கலாம்.

இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

ஒன்று, மாட்சியும் வீழ்ச்சியும் தொடர்ந்து நிகழக் கூடியவை. எருசலேமை வீழ்த்திய உரோமை பின்நாள்களில் தானும் வீழ்கிறது. பாவத்திற்கான தண்டனை என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஏனெனில், பாவமே செய்யாத பச்சிளங் குழந்தைகள் அழிக்கப்பட்டது ஏன்? நாம் பிறப்பது போலவே இறக்கிறோம். அப்படி மட்டும் நிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இரண்டு, இறுதி நாள்கள் பற்றிய அச்சம். நம் தனிப்பட்ட வாழ்வின் இறுதி நாள்கள் பற்றிய அச்சம் நமக்கு இயல்பாகவே நம்மில் இருக்கிறது. ‘இதுதான் நடக்கும்’ என்று ஏற்றுக்கொள்கின்ற மனம் அச்சத்தைக் களையும்.

மூன்று, ‘தலைநிமிர்ந்து நில்லுங்கள்.’ இது படைவீரருக்கான சொல்லாடல். தலைநிமிர்ந்து நிற்கின்ற படைவீரர் தயார்நிலையில் இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலைக் காப்பாற்றுகின்றார். தீமை ஒருபோதும் நன்மையை வெல்ல இயலாது என்பதற்குச் சான்றாக இந்நிகழ்வு உள்ளது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

One response to “இன்றைய இறைமொழி. வியாழன், 27 நவம்பர் ’25. எருசலேம் மிதிக்கப்படும்”

  1. arputhasamy23 Avatar
    arputhasamy23

    Dear Fr. Yesu,

    Thank you sincerely for your gospel reflection today and for yesterday’s session, “Tracing Grace: The Genealogies of Jesus in Matthew and Luke,” shared during the Wednesday evening Zoom gathering on 26th November. Your insights were uplifting and deeply enriching.

    With gratitude,Arputhasamy

    Like

Leave a comment