இன்றைய இறைமொழி. சனி, 25 அக்டோபர் ’25. மனமாற்றத்திற்கான நேரம்

இன்றைய இறைமொழி
சனி, 25 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் வாரம், சனி
உரோமையர் 8:1-11. லூக்கா 13:1-9

மனமாற்றத்திற்கான நேரம்

இயேசுவின் சமகாலத்தில் ஒருவர் செய்த பாவத்திற்கு அவர் உடனடியாகத் தண்டிக்கப்படுவார் என்றும், ஒருவருக்கு நேர்கின்ற விபத்து மற்றும் ஆபத்துகளுக்கு அவருடைய பாவச் செயல்களே காரணம் என்றும் மக்கள் புரிந்துகொண்டனர். இதே புரிதலை முன்வைத்து சில இடங்களில் இன்றும் போதகர்கள் போதிக்கின்றனர். கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை என்ற புரிதல் நமக்கு அவசியம்.

இயேசுவைப் பொருத்தவரையில், விபத்துகள் மற்றும் ஆபத்துகள் இயல்பாக நடக்கக் கூடியவை. மேலும், அவற்றால் ஒருவர் பலியானார் என்றால் அதற்குக் காரணம் அவர் பாவி என்பது அல்ல. அதே வேளையில், நமக்கு விபத்தும் ஆபத்தும் எந்த நேரமும் வரலாம் என்ற நிலையில் உடனடியாக மனமாற்றம் அடைய வேண்டும்.

இரண்டாம் பகுதியில், மூன்று ஆண்டுகளாகக் கனி கொடாத அத்தி மரத்திற்கு மீண்டும் ஒரு வருடம் அவகாசம் கேட்கின்றார் தொழிலாளர். இது உருவகமாக இயேசுவின் போதனையைக் கேட்டு மனம் மாறாதவர்களைக் குறித்தாலும், இன்னொரு பக்கம் கடவுளின் பொறுமையையும் காட்டுகின்றது. கடவுளின் பொறுமை நம் மனமாற்றத்திற்கான நேர அவகாசமே.

இன்றைய நற்செய்தி நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?

(அ) ஒருவரின் இல்லாமை மற்றும் இயலாமை கண்டு அவரைப் பாவி எனச் சாடுதல் தவறு.

(ஆ) மனமாற்றத்திற்கான வாய்ப்பு இன்றே, இப்போதே வழங்கப்படுகிறது என்ற நிலையில், நாம் உடனடியாக நம்மை மாற்றிக்கொள்வது.

(இ) கடவுள் நமக்கு எப்போதும் இரண்டாம் வாய்ப்பை வழங்குகின்றார். எப்படியாவது கொத்தி எருப்போட்டு நம்மைக் கனிகொடுக்க வைக்க முயற்சி செய்கின்றார். அந்த இரண்டாம் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நலம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

One response to “இன்றைய இறைமொழி. சனி, 25 அக்டோபர் ’25. மனமாற்றத்திற்கான நேரம்”

  1. charlesgp1953 Avatar
    charlesgp1953

    Good Recollection 👍

    Like

Leave a comment