இன்றைய இறைமொழி. வெள்ளி, 18 ஜூலை ’25. நான் கடந்து செல்வேன்!

இன்றைய இறைமொழி
வெள்ளி, 18 ஜூலை ’25
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – வெள்ளி
விடுதலைப் பயணம் 11:10-12, 14. மத்தேயு 12:1-8

நான் கடந்து செல்வேன்!

இன்றைய முதல் வாசகம் மூன்று நிகழ்வுகளை ஒன்றாக இணைக்கிறது: ஒன்று, எகிப்து நாட்டில் உள்ள தலைப்பேறுகளை அழிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். இரண்டு, இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்து செல்லத் தயராகிறார்கள். மூன்று, பாஸ்கா விழாவும் புளியாத அப்ப விழாவும் தோற்றுவிக்கப்படுகின்றன. இம்மூன்று விடயங்களும் நடக்கக் காரணம் ஆண்டவராகிய கடவுள் (தூதர்) இரத்தம் பூசியிருந்த இஸ்ரயேல் மக்கள் வீடுகளைக் கடந்துசெல்கிறார். கடந்து செல்தல் என்பதைக் காப்பாற்றுதல் என்று இங்கே புரிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இரவு நேரத்தில் நகர்வலம் காவலர் நம் வீட்டைக் கடந்து செல்கிறார் என்றால், நம் வீட்டின்மேல் கவனமாக இருக்கிறார் அல்லது நம் வீட்டின்மேல் பொறுப்பாய் இருக்கிறார் என்று புரிந்துகொள்கிறோம். கடந்து செல்தல் என்பது மறத்தல் அல்ல, மாறாக, பொறுப்பேற்றல்.

இயேசுவும் அவருடைய சீடர்களும் ஓய்வுநாளில் வயல்வெளியைக் கடந்து செல்கிறார்கள். கடந்து செல்கிற சீடர்களின் கைகள் கதிர்களைத் தழுவிக்கொள்கிறது. மனிதர்கள் பசியாறினார்கள் என மகிழ்ந்திருப்பதற்குப் பதிலாக, மனிதர்கள் ஓய்வுநாளை மீறினார்கள் என்று குறை சொல்கிறார்கள் பரிசேயர்கள். பசியா அல்லது ஓய்வுநாளா? இவற்றில் எது முதன்மையானது என்பதைச் சுட்டிக்காட்டுகிற இயேசு, மானிட மகனாகிய தமக்கு ஓய்வுநாளும் கட்டுப்பட்டதே என்கிறார்.

எகிப்தில் பார்வோன் தனக்குக் கீழ் அனைத்தும் இருப்பதாக எண்ணி, இறுமாந்து, இஸ்ரயேல் மக்களை அனுப்ப மறுக்கிறார். ஆனால், ஆண்டவராகிய கடவுள் தம்மை மேன்மையானவர் என அவருக்குக் காட்டுகிறார். உயிர் என்பது தமக்குக் கட்டுப்பட்டது என்றும், தம்மால் உயிரைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று உணர்த்துகிறார். நம்மைக் கடந்துசெல்லும் ஆண்டவராகிய கடவுள் நம்மேல் கவனமாக இருக்கிறார் என்னும் செய்தி நமக்கு ஆறுதல் தருகிறது. நம்மைக் கடந்துசெல்லும் அவர் நம் முதன்மைகளைச் சரி செய்யுமாறு நம்மை அழைக்கிறார்.

கோவிலைவிடப் பெரியவர்

இயேசு தன் சமகாலத்தவர்கள்மேல் ஒரு பக்கம் பரிவு காட்டினாலும், இன்னொரு பக்கம் அவர்களை உரசிக்கொண்டும் இருந்தார்.

ஓய்வுநாள் பற்றிய சட்டத்தை இயேசுவும் அவருடைய சீடர்களும் மீறுவதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். மீறல் நடக்கும்போதுதான் மாற்றம் நடக்கிறது. எடுத்துக்காட்டாக, நம் மண்ணில் உள்ள சாதியப் பாகுபாடு. ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தங்களை உயர்வகுப்பினர் எனக் கருதி மற்றவர்களைத் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லி, அதை நியாயப்படுத்த புனித நூல்களைக் கையிலெடுக்கின்றனர். ‘ஆம்! நீங்கள் சொல்வது சரி!’ என்று சொல்லிக்கொண்டே மற்றவர்கள் இருந்தால் இன்னும் நாம் அடிமைத்தனத்தில்தான் இருந்திருப்போம். ‘ஏன் இப்படி இருக்க வேண்டும்?’ என்ற கேள்வி எழுந்தவுடன் மீறல் நடக்கிறது. மீறல் நடந்தவுடன் மாற்றம் வருகிறது.

இயேசுவின் சமகாலத்தில் சமயம் நிறைய அதிகாரம் கொண்டிருந்தது. இன்றுவரையும் அப்படியே.

அறிவியலைப் பொருத்தவரையில் ஒரு நாள் என்பது 24 மணி நேரங்கள் அல்லது, கோளின் சுழற்சி என்று இருந்தாலும், இத்தனை மணி நேரம் நல்ல நேரம், இத்தனை மணி நேரம் கெட்ட நேரம் என வரையறுப்பது சமயம். ஆண்டுக்கு இவ்வளவு நாள்கள் என அறிவியல் கணக்குச் சொன்னாலும், அவற்றில் சிலவற்றைப் புனித நாள்கள், திருநாள்கள், ஓய்வுநாள்கள் என சமயம் வரையறுத்து மனிதர்களில் ஒருவித அச்சத்தை உருவாக்குகிறது.

பசியாக இருந்த சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.

தங்கள் வயல்களிலிருந்து கதிர்களைக் கொய்தனரா? அல்லது இன்னொருவரின் வயல்களின் கதிர்களைக் கொய்தார்களா? என்று தெரியவில்லை. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் கிராமங்களிலும் யாரும் யார் வயலுக்குள்ளும் நுழைந்து தங்கள் வயிற்றுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. இப்போது வயலும் இல்லை, கதிரும் இல்லை, கிராமத்தில் ஆள்களும் இல்லை.

தாவீது செய்தார், தாவீதோடு இருந்தவர்கள் செய்தனர், குருக்கள் செய்தனர் எனச் சுட்டிக்காட்டுவதன் வழியாக, தன்னைத் தாவீதின் மகன் என இயேசு முன்நிறுத்துகின்றார்.

மேலும், அவர்கள் மேல் இரக்கம் காட்டுமாறும் அழைக்கின்றார்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment