இன்றைய இறைமொழி. சனி, 28 ஜூன் ’25. அருளின் தோட்டம்

இன்றைய இறைமொழி
சனி, 28 ஜூன் ’25
தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் – விருப்ப நினைவு
எசாயா 61:9-11. லூக்கா 2:41-51

அருளின் தோட்டம் அமைதியின் பள்ளி

இயேசுவின் தூய்மைமிகு இதயத்தைத் தொடர்ந்து வரும் நாளில் தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயத்தை நினைவுகூர்கிறோம். இந்த இதயம் அனைத்தையும் அமைதியாகத் தியானித்தது, அனைவரையும் அன்பு செய்தது, துன்பம் அனுபவித்தது, கடவுளில் மகிழ்ந்தது.

(அ) அருளின் தோட்டம்

இன்றைய முதல் வாசகத்தில், மகிழ்ச்சியின் மலர்தலின் காட்சியைக் காண்கிற எசாயா, ‘நிலம் முளைகளைத் தளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்’ என எழுதுகிறார்.

கன்னி மரியாவின் இதயம் அருளின் தோட்டமாக இருந்தது. ஆண்டவருடைய விருப்பத்துக்குத் தன்னையே கையளித்த மரியாவின் இதயம் இறையன்பால் பற்றி எரிந்தது. தன்மேல் விழுகிற மழைத்துளிக்குப் பதிலிறுப்பு செய்கிற மண் போல தன்மேல் இறங்கிய தூய ஆவியாருக்குப் பதில் தருகிறார் மரியா: ‘இதோ, நான் ஆண்டவருடைய அடிமை!’ இன்றைய நம் உலகத்தில் ஆணவமும் கோபமும் மேலோங்கி நிற்கிறது. நமக்கு மாற்று இதயத்தைத் தருகிறார் மரியா. அருள் நிறைந்த இதயம் தாழ்ச்சியுடன் இருக்கிறது.

(ஆ) அமைதியின் பள்ளி

காணாமற்போன தங்களுடை மகனைக் கண்டுபிடிக்கிறார்கள் மரியாவும் யோசேப்பும். இயேசுவின் சொற்களுக்குப் பதில் தராத மரியா, அவற்றைத் தன் உள்ளத்தில் பதித்து சிந்திக்கின்றார். சிதறிய படத் துண்டுகளை ஒன்றாகக் கோர்த்து அதன் பொருளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதுபோல அனைத்தையு; இணைத்துப் பார்க்கிறார் மரியா.

இன்றைய நம் உலகம் சத்தங்கள் நிறைந்ததாக இருக்கிறது. அமைதி அல்லது மௌனம் நமக்கு ஏற்புடையதாக இல்லை. வாழ்வின் எதார்த்தங்களை மௌனத்தால்தான் புரிந்துகொள்ள முடியும் எனக் கற்பிக்கிறார் மரியா.

இறுதியாக,

அருளும் அமைதியும் நிறைந்திருக்கிற இதயம் தூய்மையாகவும் கடவுளின் தாய்மைக்குத் தயார்நிலையிலும் இருக்கிறது எனக் கற்றுத் தருகிறார் மரியா.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment