இன்றைய இறைமொழி. வெள்ளி, 6 ஜூன் ’25. கைகளை விரித்துக் கொடுத்தல்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 6 ஜூன் ’25
பாஸ்கா காலம் ஏழாம் வாரம் – வெள்ளி
திருத்தூதர் பணிகள் 25:13-21. யோவான் 21:15-19

கைகளை விரித்துக் கொடுத்தல்

‘நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார் … என்னைப் பின் தொடர்!’

பேதுருவுக்கும் இயேசுவுக்குமான நெருக்கத்தை நற்செய்தி நூல்களில் நாம் ஐந்து இடங்களில் வாசிக்கிறோம்: (அ) இயேசு பேதுருவை அழைக்கும் நிகழ்வு. (ஆ) ‘நீரே மெசியா’ என இயேசுவை அறிக்கையிடும் நிகழ்வு. (இ) இயேசுவைப் போல கடலில் நடக்க முயற்சி செய்யும் நிகழ்வு. (ஈ) இயேசுவை மறுதலிக்கும் நிகழ்வு. (உ) இயேசுவின்மேல் உள்ள அன்பை அறிக்கையிடம் நிகழ்வு. ‘ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!’ என்று மொழியும் பேதுருவின் சொற்கள் அவருடைய சரணாகதியின், வெளிப்படைத்தன்மையின், அர்ப்பணத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. சொற்களால் பேதுரு அறிக்கையிட்டவுடன், இயேசு ‘நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்’ என்று சொல்லி அவரைப் பற்றிக்கொள்கிறார். தம்மைப் பின்தொடருமாறு அழைக்கிறார். ‘கைகளை விரித்துக்கொடுக்கும் ஒருவர்’ தன் உரிமையை இழக்கிறார் என நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, அவர் சுதந்திரம் பெறுகிறார். இனி தான் எங்கு செல்ல வேண்டும் என்பதை அவர் முடிவெடுக்கத் தேவையில்லை. கடவுளிடம் கரங்களை அவர் நீட்டிக்கொடுத்தாலே போதும். ‘மனிதர்களைப் பிடிப்பதற்காக’ அழைக்கப்பட்ட நம் கைகளை கடவுள் முதலில் பிடித்தால் அன்றி, நாம் மனிதர்களைப் பிடிக்க இயலாது.

துறவற சபைகள் மற்றும் திருத்தூது வாழ்வு நிறுவனங்களுக்கான வத்திக்கானின் திருப்பேராயம் 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘அதிகாரம் மற்றும் கீழ்ப்படிதலின் பணி’ என்னும் ஏடு, ‘கடவுளின் அதிகாரத்துக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தாத எவரும் மற்றவர்மேல் அதிகாரம் செலுத்த முடியாது’ எனக் குறிப்பிடுகிறது. பேதுரு திருஅவையின்மேல் கொண்டிருக்கிற அதிகாரம் இயேசுவுக்குக் கீழ்ப்படிதலில் – அவரிடம் தன் கைகளை விரித்துக் கொடுப்பதில்தான் அமைந்துள்ளது.

சாலையைக் கடக்கிறார்கள் குழந்தையும் தந்தையும். தந்தை இங்குமங்கும் பார்த்து வழிநடக்கிறார். வாகனங்கள் வருகை கண்டு பின்வாங்குகிறார். குழந்தை தந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டால் மட்டும் போதும். சாலையைக் கடத்தல் என்பது குழந்தைக்கு ஒரு விளையாட்டு. தந்தைக்கு அது பொறுப்புணர்வு. கடவுளின் விரலைப் பற்றிக்கொள்பவர்களுக்கு வாழ்க்கையும் இனிமையான விளையாட்டாக மாறுகிறது.

கைகளை மூடிக்கொண்டே பிறக்கும் நாம் கைகளை விரித்துக்கொடுக்கத் தயங்குகிறோம். கைகளை விரித்துக் கொடுத்தல் நமக்குப் பாதுகாப்பின்மையையும் பயத்தையும் தருகிறது. நம் தான்மை பாதிக்கப்படுவதாக நாம் உணர்கிறோம். நம் கைகளை விரித்துக்கொடுப்பது நமக்குச் சுதந்திரத்தைத் தருகிறது என்று நாம் உணரும்போது துணிவு பிறக்கிறது.

‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்’ (மத் 16:24)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

One response to “இன்றைய இறைமொழி. வெள்ளி, 6 ஜூன் ’25. கைகளை விரித்துக் கொடுத்தல்”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

Leave a comment