இன்றைய இறைமொழி. செவ்வாய், 13 மே ’25. பாத்திமா அன்னை

இன்றைய இறைமொழி
செவ்வாய், 13 மே ’25
பாஸ்கா நான்காம் வாரம் – செவ்வாய்
புனித பாத்திமா அன்னை – விருப்ப நினைவு

திருத்தூதர் பணிகள் 11:19-26. யோவான் 10:22-30
(வாசகங்கள் நாளுக்குரியவை)

பர்னபா

இன்றைய முதல் வாசகத்தின் முதன்மையான கதைமாந்தராக இருப்பவர் பர்னபா. ‘ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்’ என்று தொடக்கத் திருஅவையில் அறியப்பட்ட இவர் தானாகவே முன்வந்து புதிய நெறியை ஏற்கிறார். மேலும், திருஅவைக் குழுமம் எங்கெல்லாம் தன்னை அனுப்பியதோ அங்கே செல்வதற்குக் காத்திருக்கிறார்.

பேதுருவும் பவுலும் ஆண்டவர் இயேசுவால் நேரடியாக அனுப்பப்பட்டவர்கள். பர்னபாவுக்கு அப்படிப்பட்ட காட்சி எதுவும் கிடைக்கவில்லை. குழுமத்தின் குரலே கடவுளின் குரல் என்று செவிமடுக்கிறார். பவுல் திருத்தூதர்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவதற்கும், பவுலின் பணிகள் வெற்றி அடைந்ததற்கும் பர்னபாவே முதன்மையான காரணம். இவர் ஒருவர் மற்றவரை இணைக்கக்கூடிய இணைப்பாளராக இருந்தார்.

இவருடைய நேர்முக ஆற்றல் நமக்கு வியப்பளிக்கிறது.

அந்தியோக்கியாவுக்கு அனுப்பப்படுகிற இவர், அந்தப் பணி முடிந்தவுடன் தானாகவே பயணம் செய்து சவுலைத் தேடிச் செல்கின்றார். ஒருவர் மற்றவரைத் தேடிச் செல்லும் போக்கு, ஒருவர் மற்றவருடைய நலம் விரும்பும் எண்ணம் இப்போது வேகமாகக் குறைந்துவருகிறது.

பர்னபா என்னும் நபர் நம்மில் உள்ள நேர்முக ஆற்றலையும் தூண்டி எழுப்புவாராக!

இன்று நாம் அன்னை கன்னி மரியாவை, ‘புனித பாத்திமா அன்னை‘ என்று கொண்டாடி மகிழ்கிறோம். ‘பாத்திமா’ என்ற பெயர் திருக்குரானிலும் வருகின்றது. திருக்குரானில், ‘பாத்திமா’ என்பவர் முகமது நபிகள் அவர்களுடைய மகள். திருக்குரான் நான்கு பெண்களை நிறைவானவர்கள் என அழைக்கிறது. அவர்களில் ஒருவர் பாத்திமா. மற்றவர்கள், மரியா, காதிஜா, மற்றும் ஐய்ஷா.

‘பாத்திமா அன்னை’ என்னும் பெயர் போர்த்துகல் நாட்டில் உள்ள பாத்திமா என்னும் நகரின் பெயர். அன்னை கன்னி மரியாவின் தலைப்புகள் அவர் காட்சியளித்த இடங்களின் பெயர்களோடு இணைந்தும் வழங்கப்படுகின்றன. லூர்து அன்னை, வேளாங்கண்ணி அன்னை போல, பாத்திமா அன்னை.

1917ஆம் ஆண்டு 13 மே முதல் 13 அக்டோபர் வரை ஆறு முறை அன்னை கன்னி மரியா பாத்திமாவில் லூசியா, பிரான்சிஸ்கோ, மற்றும் ஜெசிந்தா என்னும் மூன்று இளவல்களுக்குக் காட்சி தந்துள்ளார்.

‘கதிரவனை விட அதிகமாக ஒளிவீசிய பெண் ஒருவர் உலக அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்’ – இதுவே இளவல்கள் தங்களுக்குக் காட்சியில் சொல்லப்பட்டது என வெளிப்படுத்தினார்கள்.

13 அக்டோபர் 1917 அன்று நடந்த கதிரவன் அற்புதம் (சுழன்று சென்ற கதிரவன்) முக்கிய நிகழ்வாகப் பேசப்படுகிறது.

இளவல் லூசியா சில வருடங்கள் கழித்து ‘பாத்திமாவின் மூன்று இரகசியங்கள்’ பற்றிப் பேசத் தொடங்கினார். முதல் இரகசியம், நரகம் பற்றியதாகவும், இரண்டாம் இரகசியம், அமல உற்பவ அன்னைக்கு அர்ப்பணித்தல் பற்றியதாகவும், மூன்றாம் இரகசியம் இஷ்யாவை அர்ப்பணம் செய்தல் பற்றியதாகவும் இருக்கிறது. மூன்றாவது இரகசியத்தில் திருத்தந்தை ஒருவரின் இறப்பு பற்றி இருந்ததால் இன்னும் அது முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதும் சிலரின் கருத்து.

1984ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அனைத்துலகையும் அன்னை கன்னி மரியாவுக்கு அர்ப்பணம் செய்தார். இதற்கு முன்னதாக திருத்தந்தையர் 12ஆம் பயஸ் மற்றும் 6ஆம் பவுல் ஆகியோர் அன்னை கன்னி மரியாவுக்க உலகை அர்ப்பணம் செய்தனர்.

அன்னை கன்னி மரியா, பாத்திமா அன்னையாக நமக்குத் தரும் செய்திகள் மூன்று:

(அ) செபமாலை செபியுங்கள். அதாவது, செபம் மாலை போல முடிவின்றித் தொடரட்டும்.

(ஆ) அமைதி ஒன்றே நம் இலக்கு. அமைதி நம் அகத்தே உள்ளது.

(இ) எல்லாம் ஒருநாள் மறைந்துவிடும். ஒளிகொடுக்கும் சூரியனும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. செவ்வாய், 13 மே ’25. பாத்திமா அன்னை”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    திருநாள் வாழ்த்துகள் தந்தையே

    Like

Leave a comment