இன்றைய இறைமொழி. வியாழன், 1 மே ’25. உழைப்பின் புனிதம்

இன்றைய இறைமொழி
வியாழன், 1 மே ’25
தொழிலாளரான புனித யோசேப்பு, விருப்ப நினைவு
தொடக்கநூல் 1:26-2:3 (அ) கொலோசையர் 3:14-15,17,23-24. மத்தேயு 13:54-58

உழைப்பின் புனிதம்

எருசலேம் பழைய நகரத்திற்கான ஒரு நுழைவாயிலின் பெயர் ‘சிங்கங்களின் வாயில்’. இந்த வாயிலுக்கு ‘ஆட்டு வாயில்’ என்றும் ‘ஸ்தேவான் (முடியப்பர்) வாயில்’ என்றும் பெயர் உண்டு. இந்த வாயிலுக்குள் நுழைந்தவுடன் நாம் காண்பது பெத்சதா குளம். அந்தக் குளத்தின் அருகில் கட்டப்பட்ட புனித அன்னம்மா ஆலயத்திற்குள் உள்ள புனித யோசேப்பு திருவுருவம் சற்றே வித்தியாசமானது (மேற்காணும் படம்). யோசேப்பு செய்துகொண்டிருக்கிற மேசை ஒன்றில் ஏறி நிற்கிறார் குழந்தை இயேசு. அவருடைய கையில் முள்முடி ஒன்று இருக்கிறது. முள்முடியைத் தன் தந்தை யோசேப்பை நோக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார். யோசேப்பின் பார்வை நேராக அவருக்கு முன்னால் இருப்பவரை நோக்கியதாக இருக்கிறது.

இயேசு தச்சரின் மகன் என்பதை மிக அழகாக விளக்குகிறது இத்திருவுருவம். கடவுள் மனிதர்கள்மேல் சுமத்திய முள்முடியே உழைப்பு என்பதுபோல இருக்கிறது இயேசுவின் பார்வை. உழைப்பு நமக்கு முள்முடிபோலத் தெரிந்தாலும், உழைப்பின் வழியாகவே நாம் நமக்கான மணிமுடி சூட்டுகிறோம் என்பதே உண்மை.

உழைப்பின் பாதுகாவலரான புனித யோசேப்பை தொழிலாளர் எனக் கொண்டாடி மகிழ்கிறோம். பல நாடுகளில் இன்றைய நாள் ‘மே தினம்’ அல்லது ‘உழைப்பாளர் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது.

இன்றைய முதல் வாசகம், கடவுளை ஓர் உழைப்பாளி அல்லது தொழிலாளர் என்று முன்மொழிகிறது. கடவுள் பற்றிய விவிலியத்தின் முதல் அறிமுகம் இதுவே என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது. கடவுளை தந்தையாகவோ, தாயாகவோ, நண்பராகவே, வழிபடு நபராகவோ, போர் வீரராகவோ காட்டாமல் ‘படைப்பவர்’ என முன்மொழிகிறது விவிலியத்தின் முதல் பக்கம்.

ஒழுங்கற்ற உலகை ஒழுங்குபடுத்துகிற ஆண்டவராகிய கடவுள், அதை அழகு செய்கிறார். பின் ஒவ்வொன்றும் அதனதன் வேலைகளைச் செய்யுமாறு அவற்றை நிர்ணயிக்கிறார். ஆக, ஒழுங்குபடுத்துதலும் அழகுபடுத்துவதும் மேம்படுத்துவதும் ஆண்டவராகிய கடவுளின் வேலைகளாக இருக்கின்றன. நாம் இன்று செய்கிற அனைத்து வேலைகளையும் – பொருள்கள் தயாரிப்பாக இருக்கலாம், அல்லது சேவைகள் வழங்குவதாக இருக்கலாம் – மேற்காணும் மூன்று செயல்களுக்குள் அடக்கிவிடலாம்: ஒழுங்குபடுத்துதல், அழகுபடுத்துதல், மேம்படுத்துதல். இம்மூன்றுமே உழைப்பின் நோக்கம் எனவும் சொல்லலாம்.

ஆறு நாள்கள் உழைக்கிற அல்லது வேலை செய்கிற கடவுள் ஏழாம் நாளில் ஓய்ந்திருக்கிறார். உழைப்பும் ஓய்வும் இணைந்தே செல்கின்றன.

மனித படைப்பின் நோக்கமே உழைப்பு என்கிறது விவிலியம். உழைக்கிற மாந்தர்களுக்கான ஓய்வையும் விவிலியம் வலியுறுத்துகிறது. ஓய்வு உழைப்புக்கான நம் ஆற்றலைப் புதுப்பிக்கிறது. உழைப்பின் வழியாக நம் படைப்பாற்றல் வெளிப்படுகிறது. உழைப்பின் வழியாக கடவுளுடைய படைப்புப் பணியில் நாம் பங்காற்றுகிறோம். உழைப்பு நம் தன்மதிப்பை, மாண்பை உயர்த்துகிறது. உழைப்பில் ஆண்-பெண் வேறுபாடு இல்லை. தொழிற்சாலைகளில் பணி செய்வது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் செய்யும் பணியும் உழைப்பு சார்ந்ததே. அதே வேளையில், உழைக்க இயலாத குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகளை ‘வேலையற்றவர்கள்’ என்று தீர்ப்பிடுவதும், உழைக்க இயலாத அவர்களை மாண்புக் குறைவாக நடத்துவதும் தவறானது.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் ஞானத்தைக் கண்டு வியக்கிற அவருடைய சமகாலத்து மக்கள், ‘தச்சருடைய மகன்’ இவருக்கு ஞானம் எப்படி வந்தது? என வியக்கிறார்கள். அன்று தொடங்கி இன்று வரை நாம் இத்தகைய முற்சார்பு எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். இத்தகைய எண்ணங்களைக் கொண்டே நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம். மற்றவர்களுக்கும் நமக்குமான சுவர்களை ஏற்படுத்திக்கொள்கிறோம். இயேசு மற்றவர்களுக்குத் தம்மை நிரூபித்துக்கொண்டிருக்கவில்லை. அவர் தம் வழியே செல்கிறார்.

‘தச்சர்’ என்று இங்கே வழங்குப்படுகிறவரையே நாம் ‘தொழிலாளரின் பாதுகாவலர்’ எனக் கொண்டாடுகிறோம். இயேசுவுக்கு இழைக்கப்பட்டதுபோல, யோசேப்புக்கும் இங்கே தவறு இழைக்கப்படுகிறது. அவரும் ‘தாழ்வானது’ எனக் கருதிய வேலையைச் செய்வதாக மக்கள் கருதுகிறார்கள். ஆனால், யோசேப்பு இதைக் கேள்விப்பட்டாலும் ஒன்றும் பெரிதாக எடுக்க மாட்டார்.

உழைப்பில் உயர்வு-தாழ்வு இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் உழைக்கிறோம். சிலர் உடல் உழைப்பின் வழியாக, சிலர் அறிவின் வழியாக, சிலர் சிறப்புப் பயிற்சி பெற்றதன் வழியாக என்று நாம் அனைவரும் ஏதோ ஒரு வேலையைச் செய்கிறோம்.

உழைப்பே உலகின் பசியை ஆற்றுகிறது!

இன்றைய நாளில் நம் புனிதர் நமக்குத் தருகிற பாடங்கள் எவை?

(அ) யோசேப்பின் முதல் உழைப்பு இயேசுவை வளர்ப்பதாக இருந்தது.

(ஆ) இரண்டாவதாக, அவர் தச்சுத் தொழிலின் வழியாக திருக்குடும்பத்திற்கு உணவு தந்தார்.

(இ) மூன்றாவதாக, இன்று புனிதராக நமக்காக இன்னும் உழைக்கிறார் – கடவுள் முன்னிலையில் பரிந்து பேசுகிறார் – புனிதர்கள் ஓய்வெடுப்பதில்லை!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. வியாழன், 1 மே ’25. உழைப்பின் புனிதம்”

  1. charlesgp1953 Avatar
    charlesgp1953

    Have a blessed day dear father.
    I love to read your Recollection daily, which helps me to grow in spiritual
    life.
    Regret to bring to your kind notice the following:-
    In DAILY DIVINE WORD, by SVD English book, today’s Gospel was incomplete,
    which gives wrong meaning to the readers
    Words john: 36 it should be read ” whoever believes in the son has eternal
    life; whoever disobeys the son will not have life, but will remain under
    God’s punishment”.

    Have a Blessed day and a new month.
    My prayers for your good health and happy long peaceful pastoral life 🙏

    God bless 👍 🙌 🙏

    Like

Leave a comment