இன்றைய இறைமொழி. ஞாயிறு, 27 ஏப்ரல் ’25. பூட்டிய கதவுகளும் திறக்கப்பட்ட இதயங்களும்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 27 ஏப்ரல் ’25
பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு
இறைஇரக்கத்தின் ஞாயிறு

திருத்தூதர் பணிகள் 5:12-16. திருவெளிப்பாடு 1:9-11அ, 12-13, 17-19. யோவான் 20:19-31

பூட்டிய கதவுகளும் திறக்கப்பட்ட இதயங்களும்

பழைமையான ஓவியம் ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கதவு ஒன்றின் அருகில் நிற்கிற இயேசு கையில் ஓர் விளக்கை ஏந்தியவராக நிற்கிறார். அந்தக் கதவை வெளியிலிருந்து திறப்பதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது. அந்தக் கதவு உள்ளிருந்தே திறக்கப்பட வேண்டும் என்கிறார் ஓவியர்.

பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் நின்ற தம் திருத்தூதர்களை இயேசு இரண்டு முறை சந்திக்கிறார். முதல் முறை சந்திப்புக்குப் பின்னரும் அவர்கள் கதவுகளைப் பூட்டியே இருக்கிறார்கள். அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே அவர்களுடைய வீட்டுக்குள் நுழையும் இயேசு அவர்களை வெளியே அழைத்து வருகிறார். அவர்களுடைய இதயங்களை, குறிப்பாக தோமாவின் இதயத்தைத் திறக்கிறார் இயேசு.

‘இயேசுவைக் காணவில்லை’ என்னும் நிலையிலிருந்து, ‘ஆண்டவரைக் கண்டோம்’ என்னும் நிலைக்குக் கடந்து செல்கிறார்கள் திருத்தூதர்கள். தோமா இன்னும் ஒரு படி போய், ‘நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்’ என்று நம்பிக்கை அறிக்கை செய்கிறார்.

ஆண்டவர் இயேசு தாமாகவே முன்வந்து திருத்தூதர்களைத் தேடிச் செல்கிறார். ஆனால், நாம் அனுமதிக்காமல் அவர் நம் இதயங்களைத் திறப்பதில்லை.

அச்சத்திலிருந்து மகிழ்ச்சியை நோக்கி, ஐயத்திலிருந்து நம்பிக்கை நோக்கி என்று இரண்டு பயணங்களைத் திருத்தூதர்கள் மேற்கொள்கிறார்கள்.

இன்றைய ஞாயிறை இறைஇரக்க ஞாயிறு எனக் கொண்டாடுகிறோம். இறைவனின் இரக்கத்திற்கு நம் இதயங்களைத் திறக்க வேண்டுமெனில், அவருடைய திறந்த இதயத்திற்குள் நாம் பயணம் செய்ய வேண்டும் என்பதே நாம் கற்கிற பாடம்.

முதல் வாசகத்தில், ‘நம்பிக்கை கொண்டோரின் எண்ணிக்கை பெருகுவதை’ நாம் வாசிக்கிறோம். இவர்கள் அனைவரும் இயேசுவைக் காணாமலேயே அவரை நம்பியவர்கள். இறந்த செம்மறி என்றென்றும் வாழ்வதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் காட்சியாகக் காண்கிறார் யோவான்.

ஆண்டவராகிய இயேசுவின் இரக்கத்தைப் பெறுவதற்கான ஒரே வழி அவருடைய இரக்கத்தை வழங்குவதற்கான இதயமாக நம் இதயம் மாறுவதே.

உயிர்த்த ஆண்டவர் தருகிற அமைதியைப் பெற்றுக்கொள்கிற நாம், இரக்கம் நிறை உள்ளத்தோடு நம் கதவுகளைத் திறந்து வைப்போம் – ஆண்டவருக்கும் மற்றவர்களுக்கும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

One response to “இன்றைய இறைமொழி. ஞாயிறு, 27 ஏப்ரல் ’25. பூட்டிய கதவுகளும் திறக்கப்பட்ட இதயங்களும்”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    திருநாள் வாழ்த்துகள்

    Like

Leave a comment