இன்றைய இறைமொழி
சனி, 26 ஏப்ரல் ’25
பாஸ்கா எண்கிழமை – சனி
திருத்தூதர் பணிகள் 4:13-21. மாற்கு 16:9-15
அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்!
பேதுருவும் யோவானும் எருசலேமின் அழகுவாயிலில் நலம் தந்த நிகழ்வு பற்றிய விவாதம் யூதர்களின் தலைமைச் சங்கத்தில் நடந்தேறுகிறது (முதல் வாசகம்). இதே தலைமைச் சங்கம்தான் இயேசுவை இறப்புக்குத் தீர்ப்பிட்டது. இயேசுவைக் கொன்றாயிற்று என்று ஓய்ந்தவர்களுக்கு அடுத்த பிரச்சினை வருகிறது. இப்போது இயேசுவின் சீடர்கள் நலம் தருகிறார்கள். இயேசுவின் பெயர் நலம் தரும் பெயராக மாறுகிறது. ஆளைத் தடுத்துவிடலாம், பெயரை எப்படி நிறுத்துவது என்ற குழப்பத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
முதல் வாசகத்தின் தொடக்க வாக்கியத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:
‘பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர். அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர்.’
திருத்தூதர்களின் நம்பிக்கையையும் துணிவையும் காண்கிற தலைமைச் சங்கத்தார், அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.
நாம் இயேசுவோடு இருந்தோம் அல்லது இருக்கிறோம் என்பதை நம் சொற்களும், செயல்களும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இன்றைய முதல் வாசகத்தின் அழைப்பு ஆகும்.
நற்செய்தி வாசகத்தில், மாற்கு நற்செய்தியின் முதல் நிறைவுப் பகுதியை வாசிக்கிறோம். சீடர்களின் நம்பிக்கையின்மையைப் பதிவு செய்கிறார் மாற்கு. மேலும், அவர்களுடைய கடின உள்ளத்தை இயேசு கடிந்துகொள்வதாகவும் எழுதுகிறார். மாற்கு நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் இயேசுவின் சீடர்கள் அவரை நம்புவதற்குத் தயங்குகிறார்கள், அவரைப் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள், அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
இயேசுவோடு இருத்தல் மட்டுமே நம்பிக்கையைக் கொண்டு வராது. நம்பிக்கை என்பது இறைவனின் கொடை என்றாலும் அது நம் முயற்சியாகவும் மாற வேண்டும்.
இன்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நல்லடக்கம் செய்கிறோம். ‘அவர் இயேசுவோடு இருந்தார்!’ என்பதை அவருடைய எழுத்துகளும் உரைகளும் முயற்சிகளும் வெளிப்படுத்தின. கடவுளின் முகம் இரக்கம் என்பதை உலகறியச் செய்த நம் திருத்தந்தை அவர்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். நமக்கு முன்பாகத் தந்தையின் இல்லம் செல்லும் அவர், நாம் அங்கு செல்லும் வரை ஒருவர் மற்றவர்மேல் இரக்கம்காட்ட நம்மைத் தூண்டி எழுப்புவாராக!
என் சொற்கள், செயல்கள் ஆகியவற்றைக் காணும் எனக்கு அருகில் இருப்பவர் – அவர் எனக்கு எதிரியாக இருந்தாலும் – ‘அவர் இயேசுவோடு இருக்கிறார்!’ என்று கூறுமளவுக்கு நான் நடந்துகொள்வது நலம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment