இன்றைய இறைமொழி. புதன், 23 ஏப்ரல் ’25. என்ன நிகழ்ந்தது?

இன்றைய இறைமொழி
புதன், 23 ஏப்ரல் ’25
பாஸ்கா எண்கிழமை – புதன்
திருத்தூதர் பணிகள் 3:1-10. லூக்கா 24:13-35

என்ன நிகழ்ந்தது?

உயிர்த்த இயேசு எம்மாவு செல்லும் வழியில் இரு சீடர்களைச் சந்தித்ததையும் அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தியதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கின்றோம்.

‘கண்கள் மறைக்கப்பட்டிருந்தன’ என்னும் சொல்லாடல் தொடங்கி, ‘கண்கள் திறந்தன’ என்னும் சொல்லாடல் நோக்கி நகர்கின்றது நிகழ்வு.

இந்த நிகழ்வைப் பற்றி நிறையக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இரண்டை மட்டும் கருத்தில் கொள்வோம். ஒன்று, ‘எம்மாவு’ என்ற ஊர். எம்மாவு என்ற ஊர் விவிலியத்தில் குறிக்கப்பட்டுள்ளதே தவிர, உண்மையில் அது இல்லை. ‘எம்மாவு’ என்று லூக்கா எழுதியதாகச் சொல்லப்படும் இரு ஊர்களின் பெயர்களை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. இவ்விரண்டு ஊர்களும் எருசலேமிலிருந்து ஏறக்குறைய 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளன. இரண்டு, எம்மாவு சீடர்கள் அப்பம் பிட்கும்போது இயேசுவைக் கண்டுகொள்கின்றனர். இயேசு மூன்று நாள்களுக்கு முன்புதான், அதாவது, வியாழன் அன்று, நற்கருணையை ஏற்படுத்துகின்றார். அப்பம் பிட்டுத் தன் சீடர்களுக்குக் கொடுக்கின்றார். மூன்று நாள்களில் அது எல்லாச் சீடர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்த நிகழ்வில் பன்னிரு திருத்தூதர்கள் மட்டுமே இருந்தனர். மேலும், இந்த மூன்று நாள்களும் திருத்தூதர்கள் மற்றவர்களுக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்தனர். இப்படி இருக்க, ‘அப்பம் பிட்குதல்’ நிகழ்வு இயேசுவை அடையாளப்படுத்துவதாக எம்மாவு சீடர்கள் உணர்ந்துகொண்டது எப்படி? என்ற கேள்வி எழுகின்றது. ஆக, லூக்கா தான் நற்செய்தியை எழுதுகின்ற காலத்தில் வழக்கத்தில் இருந்த அப்பம் பிட்குதல் நிகழ்வை எடுத்து இங்கே சேர்த்திருக்கலாம் என்பது லூக்கா நற்செய்தி மற்றும் திருத்தூதர் பணிகள் நூல் ஆய்வாளர்களின் கருத்து.

இன்றைய நற்செய்தியில் மூன்று குழுவினர் பேசுகின்றார்கள்:

(அ) வழியில் சீடர்கள் பேசுகின்றனர்.

(ஆ) எருசலேம் முழுவதும் இயேசுவைப் பற்றிப் பேசுகின்றது.

(இ) இயேசு சீடர்களோடு பேசுகின்றார்.

(அ) சீடர்கள் எதைப் பற்றிப் பேசுகின்றனர்?

‘நாசரேத்து இயேசுவைப் பற்றிப் பேசுகின்றனர்.’ என்ன பேசுகின்றனர்? ‘அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் … ஆனால் அவர் சிலுவையில் அறையப்பட்டார் … மூன்று நாள்கள் ஆகின்றன … அவர் உயிரோடிருப்பதாகச் சொல்கிறார்கள்’

சீடர்கள் இயேசுவைப் பற்றிப் பேசினாலும், அவர்களுடைய வார்த்தைகளில் குழப்பமும் கலக்கமும் இருக்கின்றன.

(ஆ) எருசலேம் முழுவதும் என்ன பேசிற்று?

நேரிடையாக இது கொடுக்கப்படவில்லை என்றாலும், இயேசுவுக்கு நிகழ்ந்தது பற்றி அவர்கள் பேசியிருக்கலாம் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

(இ) இயேசு என்ன பேசுகின்றார்?

அவர்களிடம் கேள்வி கேட்கின்றார்: ‘என்ன நிகழ்ந்தது?’

அவர்களைக் கடிந்துகொள்கின்றனர்: ‘மந்த உள்ளத்தினரே!’

தன்னை அழைக்குமாறு அவர்களைத் தூண்டுகின்றார்: ‘எங்களோடு தங்கும்!’

இயேசுவின் உரையாடல் அத்துடன் நிற்க, அவருடைய செயல் அங்கே பேசத் தொடங்குகிறது. அப்பம் பிட்குதலில் இயேசுவைக் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். உடனே அவர் மறைந்து போகின்றார். இறைமை என்பது உடனடியாக மறையக்கூடியது என்பதை நாம் நீதித்தலைவர்கள் நூலிலும் வாசிக்கின்றோம் (காண். நீத 6, 13).

இயேசுவைச் சந்தித்த சீடர்கள் உடனடியாக தாங்கள் புறப்பட்ட இடம் நோக்கிச் செல்கின்றனர்.

எந்த ஊரை விட்டு அவர்கள் தப்பி ஓட நினைத்தார்களோ, அதே ஊரான எருசலேமுக்குச் செல்கின்றனர்.

இனி அவர்களுடைய வாழ்க்கை முன்பு போல இருக்கப் போவதில்லை.

‘என்ன நிகழ்ந்தது?’

என்று இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கின்றார்.

இது விடை தேடும் கேள்வி அல்ல. மாறாக, ‘நான் இருக்கும்போது உனக்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமா!’ என்ற வாக்குறுதியும் ஆறுதலும் அவருடைய வார்த்தைகளில் இருக்கின்றன.

ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை நமக்கு.

ஒன்றும் நிகழ்ந்துவிடாது நமக்கு.

அவர் நம்முடன் வருகின்றார். நாம்தான் அவர் இல்லை என்று குறைபட்டுக் கொள்கின்றோம் பல நேரங்களில்.

அவர்களுள் கிளியோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ‘எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ?’ என்றார்.

சீடர்கள் பதற்றமாக, ‘இந்த நாள்களில் நடந்தவை உமக்குத் தெரியாதோ?’ என்று கேட்கின்றனர்.

‘என்ன நடந்தது?’ என ரொம்ப கூலாக கேட்கிறார்.

இந்தக் கேள்வியில் வாழ்க்கையின் ஞானம் இருக்கிறது என நினைக்கிறேன்.

ஒன்று, வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் நமக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. ‘அறியாமையே இன்பம்’ என்பது ஆங்கிலச் சொல்லாடல். நிறைய தெரிந்துகொள்வதால் நிறைய விரக்தி வரும். பல நேரங்களில் தெரியாமல் இருப்பதுதான் நம் நிம்மதியையும் குலைக்காமல் இருக்கும்.

இரண்டு, வாழ்வில் என்ன நிகழ்வு நடந்தாலும் நம் எதிர்வினை, ‘அப்படி என்ன நிகழ்ந்தது?’ என்று கேட்டுவிட்டால் நம் பிரச்சினை சின்னதாகிவிடுகிறது. அதாவது, ‘இதைவிட கொடுமையானது நடக்க வாய்ப்பிருந்தும் நடக்கவில்லையே’ என்று ஆறுதல்பட்டுக்கொள்தல் நலம்.

மூன்று, ‘என்ன நிகழ்ந்தது?’ என்ற கேள்விக்கான சீடர்களின் பதிலை வைத்து தனது உரையைத் தொடங்குகிறார் இயேசு. ஆக, ‘என்ன நிகழ்ந்தது?’ என்ற கேள்வி நம் வாழ்வையே மறுஆய்வு செய்ய நம்மைத் தூண்டுகிறது. ‘நேற்று என்ன நிகழ்ந்தது?’ ‘கடந்த வாரம்-மாதம்-ஆண்டு என்ன நிகழ்ந்தது?’ என்று நம்மையே கேட்கும்போது நாம் நம்மையே திறனாய்வு செய்துகொள்ளவும் முடிகிறது.

ஆக, இன்று நாம் முகவாட்டத்தோடும் கவலையோடும் ஏமாற்றத்தோடும் இழப்போடும் எம்மாவு என்னும் வாழ்வின் பாதி வழியில் நிற்கும் போது அவரின் கேள்வி, ‘என்ன நிகழ்ந்தது?’ என்றே இருக்கிறது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

2 responses to “இன்றைய இறைமொழி. புதன், 23 ஏப்ரல் ’25. என்ன நிகழ்ந்தது?”

  1. Mary Vinila Avatar
    Mary Vinila

    nice explanation father.

    Like

  2. dreamily1a8c17ff52 Avatar
    dreamily1a8c17ff52

    Dear fr.
    Very good morning.
    Thanks for the reflection.
    I could not understand the எம்மாவு, எண்ர இடம் புரியவில்லை,
    Thanks fr.
    Chandramanipg

    Like

Leave a comment