இன்றைய இறைமொழி. திங்கள், 21 ஏப்ரல் ’25. அவர்களை எதிர்கொண்டு

இன்றைய இறைமொழி
திங்கள், 21 ஏப்ரல் ’25
பாஸ்கா எண்கிழமை – திங்கள்
திருத்தூதர் பணிகள் 2:14, 22-33. மத்தேயு 28:8-15

அவர்களை எதிர்கொண்டு

மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு அடக்கம் செய்யப்பட்ட வெற்றுக் கல்லறையை விட்டு இரு குழுவினர் புறப்பட்டுச் செல்கின்றனர். முதல் குழுவினர் பெண்கள். அவர்கள் திருத்தூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்க ஓடுகின்றனர். இரண்டாவது குழுவினர் போர் வீரர்கள். நடந்ததைத் தலைமைக் குருக்களுக்கு அறிவிக்கிறார்கள். முதல் குழுவினரை இயேசு எதிர்கொள்கின்றார். இரண்டாம் குழுவினர் தாங்களாகவே ஊருக்குள் சென்று ‘வதந்தியை’ பரப்புகின்றனர். இயேசுவின் சமகாலத்தவர் சிலருக்கு அவருடைய உயிர்ப்பு வெறும் வதந்தியாக மட்டுமே இருந்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் சொல்லாடல்கள் சில நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:

(அ) ‘காலடிகளைப் பற்றிக்கொண்டனர்’

நறுமணத் தைலம் பூச வந்த பெண்கள், இயேசுவை எதிர்கொண்டபோது, அல்லது இயேசு அவர்களை எதிர்கொண்டபோது, அவருடைய காலடிகளைப் பற்றிக்கொள்கின்றனர். இந்த நிகழ்வு இரண்டு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. முதலில், இதன் வழியாக இயேசுவுக்கு உடல் இருந்தது என்பதைப் பதிவு செய்கிறார் மத்தேயு. தொடக்கத் திருஅவையில் இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பின் உடல் பெற்றிருந்தாரா என்ற நிறைய கேள்விகள் எழுந்ததால், நற்செய்தியாளர்கள் இயேசுவின் உடலைப் பற்றிய குறிப்பை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதுகின்றனர். இரண்டாவதாக, ‘காலடிகளைப் பற்றிக்கொள்வதன்’ வழியாக இயேசுவைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகின்றார் நற்செய்தியாளர். ஏனெனில், காலடிகளில் பணிதல் என்பது கடவுளுக்கு மட்டுமே செய்யப்படும் ஒரு பணிவிடைச் செயல் ஆகும்.

(ஆ) ‘என் சகோதரர்களிடம் சென்று’

இங்கு தன் திருத்தூதர்களை, ‘சகோதரர்கள்’ என அழைக்கின்றார் இயேசு. யோவான் நற்செய்தியில் இயேசு தன் சீடர்களை, ‘நண்பர்கள்’ என அழைக்கின்றார். ‘சகோதரர்கள்’ என்பது தொடக்கத் திருஅவையில் திருத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு காரணப்பெயராக இருந்தது. மேலும், இச்சொல்லாடலை இயேசு பயன்படுத்துவதன் வழியாக, இயேசு தன்னைவிட்டு ஓடிப்போன திருத்தூதர்கள்மேல் எந்தவித கோபமும் பாராட்டவில்லை என்பதும், அவர் அவர்களுடைய வலுவின்மையை ஏற்றுக்கொண்டதோடு, அவர்கள்மேல் தொடர்ந்து உரிமை கொண்டாடினார் என்பதும் தெரிகிறது.

(இ) ‘கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்’

கலிலேயா என்பது இயேசுவின் பணி தொடங்கப்பட்ட இடம். மீண்டும் கலிலேயாவுக்கு அவர்களை அனுப்புவதன் வழியாக, மறுபடியும் முதலிலிருந்து தொடங்க விழைகின்றார் இயேசு. எருசலேம் இயேசுவின் இறுதியாக இருந்தது. எருசலேம் நிகழ்வுகள் இன்னும் சீடர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன. அவர்களின் உள்ளத்தை ஆற்றுவதற்காக, அவர்களுடைய வாழ்வின் முதன்மையான மற்றும் இனிமையான பொழுதுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்கின்றார் இயேசு.

இன்று நாம் எந்தவொரு வலுவற்ற நிலையில் இருந்தாலும், கடவுள் நம்மேல் கொண்டிருக்கின்ற உரிமையை விட்டுத்தருவதில்லை. இன்னும் அதிகமான நெருக்கத்தை நம்மோடு ஏற்படுத்திக்கொள்ளவே அவர் விரும்புகின்றார். மேலும், நம் வாழ்வு ஏதோ ஒரு நிலையில் தடைபட்டு நிற்கும்போது, மீண்டும் நம் கலிலேயா நோக்கிச் செல்தல் நலம்.

தலைமைக் குருக்களும், மூப்பர்களும், காவல் வீரர்களும் வதந்தியைப் பரப்புவதில் மும்முரமாய் இருந்து, பணம், இலஞ்சம், மற்றும் பொய்க்கு விலை போயினர்.

உயிர்ப்பு அனுபவம் பெற்றவர்கள் தங்கள் வாழ்வைப் புதிதாகத் தொடங்கச் சென்றனர் கலிலேயாவுக்கு.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

One response to “இன்றைய இறைமொழி. திங்கள், 21 ஏப்ரல் ’25. அவர்களை எதிர்கொண்டு”

  1. Antonycru? Avatar
    Antonycru?

    After resurrection of our Lord Jesus two types of people reacted intheir own way. Thehow of it is wellexplained.it is

    is beautiful.

    Like

Leave a comment