இன்றைய இறைமொழி. திங்கள், 7 ஏப்ரல் ’25. இருளில் நடக்கமாட்டார்!

இன்றைய இறைமொழி
திங்கள், 7 ஏப்ரல் ’25
தவக்காலம் ஐந்தாம் வாரம் – திங்கள்
தானியேல் (இ) 2:1-9, 15-17, 19-30, 33-62. யோவான் 8:12-20

இருளில் நடக்கமாட்டார்!

இன்றைய முதல் வாசகம் தானியேல் நூலின் இணைப்பு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் மட்டுமே உள்ள இந்த இணைப்பு பகுதியில் மூன்று கதையாடல்கள் உள்ளன: (அ) சூசன்னா காப்பாற்றப்படுதல். (ஆ) இளைஞர் மூவரின் பாடல். (இ) பேல் (பாகால்) தெய்வம்.

சூசன்னா காப்பாற்றப்படுதல் நிகழ்வே இன்றைய நாளின் முதல் வாசகமாக உள்ளது. திருமணமான இவர்மேல் விருப்பம் கொள்கிற இரு முதியவர்கள் அவர்மேல் விபச்சாரம் என்னும் பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள். குற்றம் சுமத்தியவர்கள் நீதி வழங்கக்கூடிய பெரியவர்கள் என்பதாலும், விபச்சாரம் என்னும் சட்டத்தின்படி அவர் கொல்லப்பட வேண்டியவர் என்பதாலும், சுற்றியிருக்கிற மக்கள் கூட்டமும் முதியவர்கள் பக்கம் நிற்பதாலும் கதையின் முடிச்சு இறுகுகிறது. ஆண்டவரின் ஆவியால் குறுக்கிடுகிற தானியேல் ஞானத்தோடு நீதி வழங்கி சூசன்னாவைக் காப்பாற்றுகிறார். நிகழ்வின் இறுதியில் குற்றம் சுமத்திய பெரியவர்கள் கொல்லப்படுகிறார்கள். எளிய சூசன்னா காப்பாற்றப்படுகிறார்.

வலுவற்றவர்களுக்குக் கடவுள் துணை நிற்கிறார் என்னும் கருத்துருவே வாசகர் கற்கிற பாடமாக இருக்கிறது. மேலும், தகுந்த நேரத்தில் ஒருவர் ஞானத்தோடு செயல்படும்போது நீதிமான் காப்பாற்றப்படுகிறார் என்ற கருத்துருவும் காணக் கிடக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், ‘விபசாரத்தில் பிடிபட்ட பெண்’ நிகழ்வைத் தொடர்ந்து வரும் பகுதியில், ஆண்டவராகிய இயேசு, ‘நானே உலகின் ஒளி!’ என்று தம்மை வெளிப்படுத்துகிறார். இத்தகைய சான்று செல்லாது என்று குற்றம் சுமத்துகிறார்கள் பரிசேயர்கள். ஆனால், இயேசு தனியாக அல்ல, மாறாக, தந்தையோடு இணைந்து சான்று பகர்கிறார். இருவரின் சாட்சியம் செல்லும் என்பது எபிரேயப் புரிதல். இயேசுவைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் மக்கள் இடறல்படுகிறார்கள்.

சூசன்னா போல வலுவற்ற நிலையில் இருக்கிறார் இயேசு. நீதிமானாகிய இயேசுவை தந்தையாகிய கடவுள் மூன்றாம் நாளில் உயிர்த்தெழச் செய்கிறார்.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) வலுவற்றவர்களின் துன்பத்தில், நீதிமான்களின் துன்பத்தில் ஆண்டவராகிய கடவுள் அவர்களோடு துணை நிற்கிறார். இது நமக்கு உத்திரவாதம் அல்ல. மாறாக, நாம் கொண்டிருக்கிற எதிர்நோக்கு. ஏனெனில், இன்றும் பல நேரங்களில் வலுவற்றவர்களுக்கு நீதியும் இரக்கமும் மறுக்கப்படுகிறது.

(ஆ) தானியேலும் இயேசுவும் தங்களுக்கு அருளப்பட்ட ஞானத்தின் அடிப்படையில் செயலாற்றுகிறார்கள். சரியான நேரத்தில் சரியான விதத்தில் செயல்படுவதற்கு ஞானம் துணை செய்கிறது.

(இ) வலுவற்றவர்கள்மேல் நீதிமான்கள்மேல் இன்றும் நாம் சந்தேகத்தின்பேரில் அல்லது நம் முற்சார்பு எண்ணத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்துகிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது இருளில் நடக்கிறோம். ‘உலகின் ஒளி நானே!’ என்று தம்மைக் குறித்து சான்று பகர்ந்த இயேசு, ‘நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்!’ என்று தம் சீடர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment