இன்றைய இறைமொழி
புதன், 19 மார்ச் ’25
புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர், பெருவிழா
2 சாமுவேல் 7:4-5அ, 12-14அ, 16. திருப்பாடல் 89. உரோமையர் 4:13, 16-18, 22. மத்தேயு 1:16, 18-21, 24அ
அவர் கணவர் யோசேப்பு
இன்று புனித யோசேப்பை கன்னி மரியாவின் கணவர் என்று கொண்டாடி மகிழ்கிறோம். அன்னை கன்னி மரியா மற்றும் இயேசு பற்றிய குறிப்புகளோடு மட்டுமே யோசேப்பு நற்செய்தியாளர்களால் முன்மொழியப்படுகிறார்.
திருவழிபாட்டு ஆண்டில், புனித யோசேப்பு இரண்டு நாள்களில் கொண்டாடப்படுகிறார்: இன்று (19 மார்ச்), புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர், மற்றும் மே 1, புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர்.
ஒன்று, குடும்பம் சார்ந்தது. மற்றொன்று, தொழில் அல்லது பணி சார்ந்தது. மனிதர்களாகிய நாம் அனைவருமே இந்த இரு துருவங்களைக் கொண்டிருக்கிறோம்: குடும்பம், பணி. குடும்பத்தின் வழியாக நாம் இவ்வுலகில் வேரூன்றி நிற்கிறோம். பணி வழியாக நாம் கிளை பரப்புகிறோம். திருமணம் முடிக்கிற நபர்கள் தாங்கள் பிறந்த குடும்பம் என்று ஒன்றையும், தாங்கள் அமைக்கும் குடும்பம் என்று ஒன்றையும் பெற்றுள்ளார்கள்.
கொஞ்சம் அமர்ந்து யோசித்தால், நமக்கு அவசியமானது நம் குடும்பமும் நாம் செய்கிற பணியும்தான். இதற்கிடையில் உள்ள அனைத்தும் நம்மைப் பெரிதாகப் பாதிப்பதில்லை.
இன்று நம் குடும்ப உறவையும் பணி வாழ்வையும் எண்ணிப் பார்ப்போம். கணவன்-மனைவி புரிதலின்மை, பெற்றோர்-பிள்ளைகள் உறவில் விரிசல்கள், நெருடல்கள், உராய்வுகள், சகோதர உறவுகளில் மனக்கசப்பு, பொறாமை, பகைமை என்று நம் குடும்பங்கள் இன்று பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. நாம் செய்கிற பணி சில நேரங்களில் நமக்கு நிறைவு தருவதில்லை. வேலையின்மை, வேலையில் பாதுகாப்பின்மை, ஊதிய குறைபாடு, போட்டி, சோர்வு, பணி மாற்றம், பணி நீக்கம், சுரண்டல் என்று நம் பணிவாழ்வில் நாம் நிறையப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம்.
நற்செய்தி நூல்கள் காட்டும் யோசேப்பின் நான்கு பரிமாணங்களின் பின்புலத்தில் அவர் நம் குடும்ப உறவு வாழ்வுக்கும் பணிவாழ்வுக்கும் தரும் பாடங்களைச் சிந்திப்போம்:
(அ) நேர்மையாளர் – இரக்கம் சார்ந்த நேர்மை
யோசேப்பை தன் குழுமத்துக்கும் வாசகருக்கும் அறிமுகம் செய்கிற நற்செய்தியாளர் மத்தேயு, ‘அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்’ எனப் பதிவு செய்கிறார். ‘நேர்மையாளர்’ என்னும் சொல் வாசகருக்கு இங்கே அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில், மரியா கருவுற்றிருப்பதாகக் கேள்வியுறுகிறார் யோசேப்பு. மோசே சட்டம் விபசாரம் பற்றியதாக இருந்ததே அன்றி, திருமணத்துக்கு முன் உறவு பற்றியதாக இல்லை. மரியா கருவுற்றிருப்பது அவருக்கு வானதூதர் வழியாகத் தெரிவிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு இது தெரியாது. ஆக, மறைவாக விலக்கிவிடலாம் என எண்ணுகிறார் யோசேப்பு. ஒருவேளை திருமணத்தை நிறுத்திவிடலாம் என நினைத்திருப்பார். இப்படித்தான் அவருடைய சமகாலத்து இளைஞர்கள் செய்தார்கள். ஆனால், யோசேப்பு அப்படிச் செய்ய இயலவில்லை. மரியாவை ஏற்றுக்கொள்கிறார். இங்கே, யோசேப்பு காட்டகிற நேர்மை சட்டம் சார்ந்ததாக, வழக்கம் சார்ந்ததாக இல்லாமல், இரக்கம் சார்ந்ததாக, இறைத்திருவுளம் நிறைவேற்றுதல் சார்ந்ததாக இருக்கிறது.
நாம் இன்று பல நேரங்களில் சட்டங்களையும் வழக்கங்களையும் பிடித்துக்கொண்டிருக்கிறோம். சட்டம் தன்னிலே நிறைவற்றது. எடுத்துக்காட்டாக, மணமக்கள் இணைந்து வாழவில்லை என்றால் அவர்களை விலக்கி வைப்பது, விலக்கி வைக்கும்போது பெண்ணுக்குக் கொடுக்க வேண்டியது ஆகியவற்றைப் பற்றிச் சட்டம் பேசுமே தவிர, அவர்களை இணைத்து வைப்பது பற்றி எதுவும் பேசாது. இணைத்து வைக்க முயற்சியும் செய்யாது. இருவருடைய கஷ்டத்தில் அவர்களுக்குத் துணைவராத சட்டம், மணவிலக்கு என்றவுடன் ஓடி வந்துவிடும். மானிட வழக்கங்களும் அப்படியே! இந்த ஊரும் உலகமும் நமக்கு ஆயிரம் வழக்கங்களை விதிக்கும். ஆனால், நமக்கு ஒரு தேவை என்றால் ஊரும் வராது உலகமும் வராது. மேலும், சட்டம் சார்ந்த நேர்மை என்பது கொடுக்கல்-வாங்கல் சார்ந்தது. ஆனால், இரக்கம் சார்ந்த நேர்மை சட்டத்தையும் தாண்டிச் செல்கிறது.
(ஆ) மௌனி
யோசேப்பு மொழிந்த ஒற்றைச் சொல்லாக நற்செய்தி நூல்கள் ‘இயேசு’ என்று மட்டுமே குறிப்பிடுகின்றன. குழந்தை பிறந்தவுடன், ‘அக்குழந்தைக்கு இயேசு எனப் பெயரிட்டார்’ என எழுதுகிறார் மத்தேயு. யூத மரபின்படி பெயரிடும் நிகழ்வில், குழந்தையின் தந்தை குழந்தையின் காதில் அதன் பெயரை உச்சரிக்க வேண்டும். வானதூதர் கனவின் வழியாக அறிவிக்கிற நிகழ்விலும் மற்ற நிகழ்விலும் மௌனியாகவே இருக்கிறார் யோசேப்பு. மௌனத்தின் வழியாக அவர் உரக்கப் பேசுகிறார்.
இன்றைய ஒலிமிகை உலகில் மௌனம் அல்லது அமைதி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. யோசேப்பு நினைத்தது போல அவருடைய வாழ்க்கை இல்லை. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் 180 டிகிரி திருப்பப்படுகிறார். வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது மௌனம் காத்தல் சிறப்பு. இன்று நம் குடும்பங்களிலும் பணித்தளங்களிலும் பெரும்பாலான சிக்கல்கள் வரக் காரணம் நம் சொற்களே. பொறுழையிழந்து, கோபத்தால் நாம் உதிர்த்த சொற்கள் ஆறாத புண்களை ஏற்படுத்துவதோடு, காலம் முழுவதும் நம்மை மௌனமாக்கிவிடுகிறது. குழந்தையாக இருக்கும்போது நாம் பேசக் கற்றுக்கொண்டோம். நாம் வளரும்போது மௌனமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(இ) செயல்படுநர்
யோசேப்பு பற்றிய நிகழ்வுகள் அனைத்திலும் அவர் அடுத்தடுத்து செயலாற்றிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். ‘மரியாவை எப்படி விலக்கிவிடுவது’ என்று எண்ணிக்கொண்டு இருந்தவர், தன் கேள்விக்கான விடை கிடைத்தவுடன் செயலாற்றத் தொடங்குகிறார். மரியாவை ஏற்றுக்கொள்கிறார். பெத்லகேம் செல்கிறார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்கவில்லை. அடுத்த என்ன? என்று யோசித்து உடனடியாக அடுத்த இடத்திற்கு நகர்கிறார். அங்கிருந்து எகிப்து நோக்கி, எகிப்திலிருந்து யூதேயா நோக்கி, யூதேயாவிலிருந்து நாசரேத்து நோக்கி, நாசரேத்திலிருந்து எருசலேம் நோக்கி என்று அவருடைய கால்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
எண்ணுவது திட்டமிடுவது அனைத்தும் நலமே. ஆனால், அவை செயல்களாக மாறவில்லை என்றால் கனவுகளாகவே அவை முடிந்துவிடும். ‘என் அறை தூய்மையாக இருக்க வேண்டும்!’ என்பது என் எண்ணமாக இருக்கிறது என்றால், நான் உடனயாக என் அறையைத் தூய்மைப்படுத்த வேண்டும். என் எண்ணம் மட்டுமே அறையைத் தூய்மையாக்கிவிடாது. எண்ணத்திற்கும் செயலுக்கும் உள்ள குறுகிய இடைவெளியே வெற்றி. நாம் வெற்றி அடையாமல் போவதற்குக் காரணம் நம் எண்ணத்திற்கும் செயலுக்குமான இடைவெளி அதிகமாக இருப்பதால்தான்.
(ஈ) வியந்து பார்ப்பவர்
வாழ்வின் கேள்விகளுக்கு விடைகள் தெரியாதபோது ஒரு பதிலிறுப்பு மௌனம் என்றால், இன்னொரு பதிலிறுப்பு ‘வியந்து பார்ப்பது.’ இயேசு பன்னிரு வயதில் கோவிலில் காணாமற்போய் கண்டுபிடிக்கப்படும் நிகழ்வில், யோசேப்பின் வியந்து பார்க்கும் திறனைக் காண்கிறோம். லூக்கா பின்வருமாறு நிகழ்வைப் பதிவு செய்கிறார்: ‘அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ‘மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே!’ என்கிறார். அவர் அவர்களிடம், ‘நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்றார். அவர் சொன்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.’
தந்தையின் அலுவல் என்பது தச்சு வேலை இல்லையா? என்னும் கேள்வி யோசேப்புக்கு எழுகிறது. ஆனால், யோசேப்பு மௌனம் காக்கிறார். ‘இவர் ஏன் இப்படிப் பேசுகிறார்?’ என்று குழந்தையைக் கேட்கவில்லை. மாறாக, ‘இவர் எப்படிப் பேசுகிறார்!’ என வியக்கிறார். கேள்விக்குறியிலிருந்து ஆச்சர்யக்குறிகள் நிறைந்த வாழ்வுக்கு நகர்வதே முதிர்ச்சி.
யோசேப்பின் மேற்காணும் நான்கு பரிமாணங்களை அவர் எப்படிப் பெற்றார்?
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடை அளிக்கிறது: நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு.
முதல் வாசகத்தில், தாவீது அரசர் ஆண்டவராகிய கடவுளுக்கு கோவில் ஒன்றைக் கட்டியெழுப்ப விரும்புகிறார். தாவீதோடு உரையாடுகிற ஆண்டவர் அவருடைய நம்பிக்கைப் பார்வையை அகலமாக்குகிறார். ஆண்டவரே தாவீதுக்கு ஓர் இல்லம் கட்டவதாக வாக்களிக்கிறார். அந்த இல்லத்தை தாவீது நம்பிக்கைக் கண்கள் கொண்டு பார்க்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், ஆபிரகாமின் நம்பிக்கை பற்றிய கருத்துருவை முன்மொழியுமுன், ‘அவர் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோலத் தோன்றினாலும் எதிர்நோக்கினார்!’ என்று எழுதுகிறார் பவுல். காத்திருத்தல், பொறுமை ஆகியவற்றைக் கொண்டிருக்கிற ஒருவரே எதிர்நோக்க இயலும்.
நற்செய்தி வாசகத்தில், ஐயம் விடுத்து மரியாவை ஏற்றுக்கொள்கிறார் யோசேப்பு. அவர் கடவுள்மேல் கொண்டிருந்த, மரியாவின்மேல் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாக இருக்கிறது. கடவுள் அன்பில் மனித அன்பை இணைத்துப் பார்க்கிறார்.
இன்று நாம் கொண்டாடும் நல்தந்தை யோசேப்பு, நாம் நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் அன்பிலும் வளர நமக்காக பரிந்து பேசுவாராக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment