இன்றைய இறைமொழி. வெள்ளி, 28 பிப்ரவரி ’25. மணஉறவும் நட்பும்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 28 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – வெள்ளி
சீராக்கின் ஞானம் 6:5-17. திருப்பாடல் 119. மாற்கு 10:1-12

மணஉறவும் நட்பும்

மானிடர்களாகிய நாம் உறவுக்காகப் படைக்கப்பட்டவர்கள். உறவுகொள்கிற நிலையே மானுடத்தின் தனித்துவமான பண்பாக இருக்கிறது. நம் உறவுகள் நம்மை உருவாக்குகின்றன, மேம்படுத்துகின்றன, வளப்படுத்துகின்றன. மூன்று வகையான உறவுகள் நமக்கு நெருக்கமாக இருக்கின்றன: (அ) தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி என்னும் இரத்த உறவு. (ஆ) கணவன், மனைவி என்னும் திருமண உறவு. (இ) நட்பு உறவு.

இன்றைய வாசகங்கள் இரண்டு வகை உறவுகளைப் பற்றிப் பேசுகின்றன: (அ) திருமண உறவு, (ஆ) நட்பு உறவு.

மணவிலக்கு பற்றிய பின்புலத்தில் மணஉறவு பற்றிப் பேசுகிறார் இயேசு. மாந்தர்களின் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே மணவிலக்கை அனுமதித்தார் என்று கூறுகிறார் இயேசு. படைப்பின் தொடக்கத்தில், ‘இருவரும் ஒரே உடலாய் இருப்பர்’ என்று ஆண்-பெண் இணைப்பை விரும்புகிறார் கடவுள். மணவிலக்கு என்பது விபசாரத்துக்கு வழிவகுக்கிறது என்பது இயேசுவின் போதனை. விபசாரத்தில் இருவர் இணைந்தாலும் அவர்கள் இரண்டு உடல்களாக இருக்கிறார்கள். அவர்களிடையே மண ஒன்றிப்பு இல்லை.

ஆண்-பெண் இணைப்பில் ஒருவர் மற்றவர்மேல் காட்ட வேண்டிய அர்ப்பணிப்பை இயேசு வலியுறுத்துகிறார். இன்றைய நாள்களில் திருமணத்துக்கு முன் உறவு, திருமணத்துக்குப் புறம்பே உறவு என்று உறவுநிலைகள் பிறழ்வுபடுகின்றன.

முதல் வாசகத்தில், நண்பர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார் பென் சீரா: (அ) தன்னலம் தேடும் நண்பர்கள், (ஆ) பகைவர்களாய் மாறும் நண்பர்கள், (இ) விருந்துண்ணும் நண்பர்கள், (ஈ) நம்பிக்கைக்குரிய நண்பர்கள். நம் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ஆராய்ந்து பார்ப்பதோடு, நாம் பாராட்டுகிற நட்பு எத்தகையது என்பதையும் ஆய்ந்து பார்த்தல் நலம்.

மண உறவும் நட்பு உறவும் இனிய உறவுகளாக அமைய வேண்டுமெனில், அர்ப்பணம் அவசியம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. வெள்ளி, 28 பிப்ரவரி ’25. மணஉறவும் நட்பும்”

  1. Fr Thomas Edison Avatar

    wonderful thought father

    Like

Leave a comment