இன்றைய இறைமொழி. வெள்ளி, 14 பிப்ரவரி ’25. எத்துணை நன்றாக!

இன்றைய இறைமொழி
வெள்ளி, 14 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 5-ஆம் வாரம் – வெள்ளி
தொடக்கநூல் 3:1-8. திருப்பாடல் 32. மாற்கு 7:31-37

எத்துணை நன்றாக!

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இயேசுவின் வல்ல செயலும், இரண்டாவது பகுதியில், அந்த வல்ல செயலுக்கான பதிலிறுப்பும் தரப்பட்டுள்ளது.

காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவருக்கு இயேசு நலம் தருகிறார். இந்த வல்ல செயல் நடைபெறும் விதம் சற்றே வித்தியாசமாக உள்ளது. அந்த நபரைத் தனியான இடத்துக்கு அழைத்துச் செல்கிற இயேசு, சமகாலத்து ரபிக்கள் அல்லது மருத்துவர்கள்போல செயல்கள் செய்து, இறுதியில், ‘எப்பத்தா!’ (‘திறக்கப்படு!’) என மொழிகிறார்.

அவருடைய காதுகள் மற்றும் வாயோடு மக்களின் வாய்களும் திறக்கப்பட, அவர்கள் அனைவரும், ‘இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்!’ எனப் பாராட்டுகிறார்கள்.

இயேசு யார்? என்னும் கேள்விக்கான விடை விரைவில் வெளிவரப்போகிறது என்பதன் முன்னோட்டமாக அமைகிறது இந்த நிகழ்வு.

இன்றைய முதல் வாசகத்தில், ‘விலக்கப்பட்ட கனியைத் தின்றால் உங்கள் கண்கள் திறக்கப்படும்’ என்று பாம்பு பெண்ணிடம் சொல்கிறது.

பெண் கனியைப் பார்த்தாள், ஒன்றும் நடக்கவில்லை. கனியைத் தொட்டாள், ஒன்றும் நடக்கவில்லை. தின்றாள், ஒன்றும் நடக்கவில்லை. தன் கணவனுக்குக் கொடுத்தாள், ஒன்றும் நடக்கவில்லை. கணவன் தின்றவுடன், ‘அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன!’ என எழுதுகிறார் ஆசிரியர்.

ஆணுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையை ஆண் மீறியவுடன் குற்றமும் நடந்தேறுகிறது. இங்கே ஆணே நிகழ்வின் பொறுப்பாளராக இருக்கிறார்.

கண்கள் திறக்கப்பட்ட அவர்கள் கடவுளைக் காண அஞ்சி தங்களையே மறைத்துக்கொள்கிறார்கள்.

கடவுள் நம் வாயைத் திறந்தால் நாம் அவரைப் புகழ்கிறோம்.

நாமே நம் கண்களைத் திறக்க முற்பட்டால் – விலக்கப்பட்ட கனியை உண்டதன் வழியாக – நாம் அவரிடமிருந்து விலகி ஓட வேண்டிய நிலை வருகிறது.

ஆண்டவர்தாமே நம் கண்களையும் காதுகளையும் வாயையும் திறக்குமாறு நாம் முடிவெடுப்போம்.

‘அவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்துவருகிறார்!’ என்று மக்கள் இயேசுவைப் பாராட்டியதுபோல நம் சொற்களையும் செயல்களையும் கண்டு அவர்கள் போற்றுமாறு நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்வது நலம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment