இன்றைய இறைமொழி
வியாழன், 23 ஜனவரி ’25
பொதுக்காலம் இரண்டாம் வாரம் – வியாழன்
எபிரேயர் 7:25-8:6. திருப்பாடல் 40. மாற்கு 3:7-12
தம்மை நெருக்கிவிடாதவாறு!
இன்றைய நம் இருத்தல் பெரும்பாலும் அறிமுகத்தாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. நம்மை அதிகம்பேர் பார்த்தார்கள் என்றால், நம்மை அதிகம் பேர் அறிந்திருக்கிறார்கள் என்றால், நாம் இடும் வீடியோவை பலர் பார்க்கிறார்கள் என்றால் நாம் மகிழ்கிறோம். சில நேரங்களில் இது சற்றே அதிகமாகி, மற்றவர்கள் நம்மைப் பார்க்காதபோது, நாம் இடும் படங்கள் நிறைய விருப்பங்களைப் பெறாதபோது வருந்துகிறோம்.
இயேசு நம்மிலிருந்து சற்றே வேறுபாடுகிறார். ஒரு பக்கம் இயேசுவுக்கு அவருடைய எதிரிகள் பிரச்சினையைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் இயேசு தொடுவதெல்லாம் வெற்றியாக மாறுகிறது. அவருடைய போதனைகளும் வல்ல செயல்களும் வரவேற்கப்படுகின்றன. அவரைப் பின்பற்றிப் பலர் வருகிறார்கள். தம்மை மக்கள் நெருக்கிவிடாதவாறு தப்பித்துக்கொள்ளும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.
போதாதென்று தீய ஆவிகளும் அவரை அறிந்திருக்கின்றன.
‘இதை வெளிப்படுத்த வேண்டாம்!’ என்பதே இயேசுவின் கட்டளையாக இருக்கிறது.
‘இதுதான் நான்!’ என இயேசு அவசரப்பட்டுத் தம்மை வெளிப்படுத்தவில்லை. அமைதியும் பொறுமையும் காக்கிறார்.
பல நேரங்களில் நம் வாழ்க்கையை நாம் வேகமாகவும் அவசரமாகவும் வாழ்கிறோம். 100 மீட்டர் பந்தயத்தில் ஓடுவதுபோல ஓடினால் வேகமாகச் சோர்ந்துவிடுகிறோம். மாரத்தான் போல பொறுமையாக ஓடும்போது நம் வலிமையை நாம் காத்துக்கொள்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் தலைமைக்குருவாகிய இயேசு தம் உடலால் ஒரே பலியை நிறைவேற்றினார் என்று இறையியலாக்கம் செய்கிறார் ஆசிரியர்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment