இன்றைய இறைமொழி. திங்கள், 20 ஜனவரி ’25. பசியும் மகிழ்ச்சியும்

இன்றைய இறைமொழி
திங்கள், 20 ஜனவரி ’25
பொதுக்காலம் இரண்டாம் வாரம் – திங்கள்
புனித செபஸ்தியார் – நினைவு

எபிரேயர் 5:1-10. திபா 110. மாற்கு 2:18-22

பசியும் மகிழ்ச்சியும்

சுற்றுலாப் பயணிகள் சிலர் பேருந்து புறப்பட்டதும் ஆடிப் பாடத் தொடங்கினார்கள். ஆடல், தொடர்ந்து பாடல், சிரிப்பு, கேலிப் பேச்சுகள் உரையாடல்கள் என பேருந்து ஆரவாரமாக இருந்தது. சற்று நேரத்தில் காலை உணவு நேரம் வந்தது. எல்லாருக்கும் பசி. ஆடியவர்கள் அமர்ந்தார்கள். பாடியவர்கள் மௌனம் காத்தார்கள். வழியில் உணவகம் எதுவும் இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினார்கள். அன்று பொங்கல் விடுமுறை என்பதால் பெரும்பாலான சாலைஓர உணவகள் பூட்டியிருந்தன. பயணிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த பிஸ்கட், முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகளாலும் தண்ணீராலும் வயிற்றை நிரப்பினார்கள். பசி விட்டபாடில்லை. ஏறக்குறைய இரண்டு மூன்று மணி நேர பயணத்திற்குப் பின்னர்தான் ஓர் உணவகம் கிடைத்தது. அது வரை பேருந்தில் அமைதி, தூக்கம், சோர்வு. உணவகம் இறங்கியவர்கள் வேகமாக ஆர்டர் செய்து உண்டார்கள். ‘இப்பதான் உயிரே வருது!’ என்று சொல்லிக்கொண்டார்கள்.

உணவுக்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் நோன்பு பற்றியும் மகிழ்ந்திருத்தல் பற்றியும் உள்ளது. இயேசுவின் சீடர்கள் நோன்பு ஏற்பதில்லை என்பது பற்றிய கேள்வி இயேசுவிடம் கொண்டுவரப்படுகிறது.

‘நோன்பு’ என்பது ‘விரும்பி ஏற்கும் பசி.’ மருத்துவ, ஆன்மீக, தனிப்பட்ட வளர்ச்சிக்காக நாம் நோன்பிருக்கிறோம்.ஆனால், என்று நாம் நோன்பிருக்கிறோமோ அன்றுதான் நமக்கு அதிகமாக பசிக்கும் என்பது நம் வாழ்வியல் அனுபவமாக இருக்கிறது.

ஏறக்குறைய எல்லா சமயங்களும் நோன்பு இருத்தலை உற்சாசப்படுத்துகின்றன. திருநீற்றுப் புதன், பெரிய வெள்ளி, இரமலான், சாமிக்கு நேர்ச்சை, மாலையிடுதல் என்று பல நிலைகளில் பல்வேறு சமயத்தார்கள் நோன்பு இருக்கிறார்கள். நோன்பில் தன்விருப்பம், தெரிவு, விடாமுயற்சி இருக்கிறது.

பசி என்பது அனைத்து உயிர்களுக்குமான அடிப்படை உணர்வு. இந்த உணர்வு நம் நொறுங்குநிலையையும் நாம் மற்றவர்கள்மேல் சார்ந்திருத்தலையும் நமக்கு நினைவூட்டுகிறது.

பாவக் கழுவாய் நாள் அன்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் நோன்பு இருக்க வேண்டும் என்பது மோசேயின் சட்டம். மனமாற்றத்தின் அடையாளமாக இந்த நோன்பு அனுசரிக்கப்பட்டது. ஆனால், இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்கள் நோன்பு என்னும் செயலை சமயச் சடங்காக மாற்றி, வாரம் இருமுறை நோன்பு இருந்தார்கள். இதன் வழியாக தங்கள் தான்மையை வரையறுத்து மற்றவர்களைப் புறந்தள்ளினார்கள். மிகவும் சோகமாகக் காணப்பட்டார்கள்.

இந்தப் பின்புலத்தில்தான், திருமண விருந்து என்னும் உருவகத்தின் வழியாக இயேசு, ‘மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா?’ எனக் கேட்கிறார்.

மேலும், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியும் நாள் வரும் எனத் தம் இறப்பையும் இங்கே உரைக்கிறார் இயேசு. தொடர்ந்து ஆடை, திராட்சை ரசம் என்னும் சொல்லோவியங்கள் வழியாக பழையதற்கும் புதியதற்கும் உள்ள இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், கெத்சமேனி நிகழ்வை வேறு சொற்களில் பதிவு செய்கிற ஆசிரியர், இயேசுவின் கண்ணீர் அவரை நிறைவுள்ளவராக்கியது என எழுதுகிறார்.

நாம் அழுகிற கண்ணீர், ஏற்கிற துன்பம், ஏற்கிற பசி அனைத்தும் நம்மை நிறைவுள்ளவர் ஆக்குகிறது. ஆனாலும், அனைத்தையும் நிறைவுக்குக் கொண்டுவருகிற இயேசு நம்மோடு இருக்கும்போது நாம் துன்பத்தை, கண்ணீரை, பசியை ஏற்கத் தேவையில்லை.

மூன்று பாடங்கள்:

(அ) நாம் ஏற்கும் சமயம்சார் செயல்கள் – நோன்பு, இறைவேண்டல், தர்மம் செய்தல் – வெற்றுச் சடங்குகளாக மாறுதல் கூடாது.

(ஆ) எதை நாம் பசிக்கு உட்படுத்துகிறோமோ, அது மறைகிறது. எடுத்துக்காட்டாக, மது அல்லது போதை நமக்கு சோதனையாக இருக்கிறது எனில், அதைப் பசிக்கு உட்படுத்தும்போது – அதாவது, அதைக் கண்டுகொள்ளாதபோது, அதற்கு இடமும் நேரமும் தராதபோது – அது மறைகிறது.

(இ) நாம் கடவுளோடு இருக்கிறோம் என்பதை நமக்குக் காட்டுகிற உணர்வு மகிழ்ச்சி. ஆங்கிலத்தில், ‘என்த்துஸியாஸம்’ என்ற சொல் உண்டு. ‘உற்சாசம்’, ‘மகிழ்ச்சி’ என்று பொருள்படும் இச்சொல்லுக்கு, ‘கடவுளில் இருத்தல்’ என்பது பொருள். இயேசுவின் உடனிருத்தல் நமக்கு மகிழ்ச்சி தருகிறது.

புனித செபஸ்தியார்

இன்று நாம் புனித செபஸ்தியாரை நினைவுகூர்கிறோம். தன் துன்பத்தையும் தாண்டிய மகிழ்ச்சியை இவர் கடவுளில் கண்டார். அச்சம், நோய் அகற்றும் இப்புனிதர் நமக்காகப் பரிந்து பேசுவாராக!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment