இன்றைய இறைமொழி. வியாழன், 9 ஜனவரி ’25. சுமை ஏற்கும் சுகம்!

இன்றைய இறைமொழி
வியாழன், 9 ஜனவரி ’25
திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின் வியாழன்
1 யோவான் 4:19-5:4. திபா 72. லூக்கா 4:14-22

சுமை ஏற்கும் சுகம்!

இன்றைய முதல் வாசகத்தில், அன்புக் கட்டளையைத் தொடர்ந்து மற்ற கட்டளைகள் பற்றிப் பேசுகிற யோவான், ‘அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில், கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே’ என எழுதுகிறார்.

சிறுவன் ஒருவன் நடக்க இயலாத தன் தம்பியைத் தூக்கிக்கொண்டு விளையாட்டு மைதானத்துக்குச் சென்றான். அதைக் கண்ட பெரியவர் ஒருவர், ‘தினமும் இப்படி இந்தச் சுமையைத் தூக்கிக்கொண்டு வருகிறாயே, உனக்கு வலிக்கவில்லையா?’ என்றார். ‘இவன் சுமையல்ல, என் தம்பி’ என்று பதில் தந்தான் சிறுவன்.

அன்பு சுமைகளைச் சுகமானதாக மாற்றுகிறது. அல்லது அன்பில் சுமை சுகமாகிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பணித்தொடக்கத்தை லூக்காவின் சொற்களில் கேட்கிறோம். இங்கே மூன்று விடயங்கள் கவனிக்கத்தக்கவை: (அ) இயேசு நாசரேத்தூரில் தம் பணியைத் தொடங்குகிறார். அறிமுகம் உள்ள இடத்திலிருந்து அறிமுகம் இல்லாத இடம் நோக்கி நகர்கிறது இயேசுவின் பணி. இங்கே இயேசு தம் வேர்களை ஊன்றிக்கொள்கிறார். இங்கேதான் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார். இங்கேதான் அவர் நிராகரிக்கப்படுவார். (ஆ) இயேசுவின் பணி இறைமையம் கொண்டதாக இருக்கிறது. தொழுகைக்கூடம், மக்களின் கூடுகை, இறைவார்த்தை வாசிப்பு என அனைத்தும் இறைவனை மையப்படுத்துகின்றன. இறையாட்சிப் பணியின் மையம் இறைவனே என்பதை இயேசு தொடக்கமுதல் தெளிவுபடுத்துகிறார். (இ) தச்சரான இயேசு ஒரு ரபி (போதகர் அல்லது ஆசிரியர்) போல இறைவார்த்தையை வாசிக்கிறார், அறிவிக்கிறார், விளக்கம் தருகிறார். ‘நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று!’ – இயேசுவின் இந்த ஒற்றை வரி மறையுரை நாசரேத்தூர் மக்களையும் நம்மையும் வியப்புக்கு உள்ளாக்குகிறது.

தங்கள் சுமைகளைச் சுமக்க ஒரு தோள் கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ்கிறார்கள் நாசரேத்து மக்கள். ‘இவர் யோசேப்பின் மகனல்லவா?’ என்று ஆச்சர்யம் கொள்கிறார்கள்.

எளிய பின்புலம், ஆனால் நிறையப் பொறுப்புணர்வு – இதுவே மக்களின் வியப்புக்குக் காரணம்.

இயேசு வெறுமனே எசாயாவின் சொற்களை வாசிக்கவில்லை. மாறாக, அவற்றைத் தம் பணி வாக்கியங்களாக மாற்றுகிறார். அவருடைய சொற்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் இவற்றை நோக்கியதாகவே இருக்கும். ஆண்டவருடைய ஆவியில் வேரூன்றி, ஆண்டவருடைய மக்களின் வாழ்வில் கிளைபரப்புகிறார்.

ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் விடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை, ஆண்டவர் அருள்தரும் ஆண்டு அறிவிப்பு ஆகியவை இயேசு முன்மொழியும் பணிகளாக இருக்கின்றன. இதுவரை சுமை என்று இயேசுவின் சமகாலத்து அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள் கருதியதை, ‘இனி சுகம்!’ என்கிறார் இயேசு.

நம் வாழ்வின் சுமைகளைச் சுமக்க ஒரு தோள் இருக்கிறது என்னும் ஆறுதலை இயேசு நமக்குத் தருகிறார். மற்றவர்களின் சுமைகளைச் சுமக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்னும் அழைப்பும் தரப்படுகிறது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. வியாழன், 9 ஜனவரி ’25. சுமை ஏற்கும் சுகம்!”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

Leave a comment