இன்றைய இறைமொழி
திங்கள், 6 ஜனவரி ’25
திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின் திங்கள்
1 யோவான் 3:22-4:6. திபா 2. மத்தேயு 4:12-17, 23-25.
நாசரேத்தைவிட்டு அகன்றார்!
இயேசு பன்னிரு வயதில் எருசலேம் கோவிலில் காணாமற்போகும் நிகழ்வுக்குப் பின்னர், அவர் பணிவாழ்க்கையை அல்லது பொது வாழ்க்கையைத் தொடங்கியது வரை நடந்த நிகழ்வுகளை நற்செய்தியாளர்கள் (ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செய்தி நூல்கள்) பதிவு செய்யவில்லை.
இயேசு நாசரேத்தைவிட்டு அகன்று கலிலேயாவில் உள்ள கப்பர்நாகுமில் தங்கினார் எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. கப்பர்நாகுமில் இயேசு ஆற்றிய போதனையையும் வல்ல செயல்களையும் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் காண்கிறோம்.
(அ) எளியவர்களைத் தேர்ந்துகொள்தல்.
இயேசுவின் சமகாலத்து பாலஸ்தீனம் வடக்கே கலிலேயா, நடுவில் சமாரியா, தெற்கே யூதேயா என்று மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது. எருசலேம் யூதேயாவில் இருந்தது. அங்கேதான் இஸ்ரயேல் மக்களின் ஆலயம் இருந்தது. ஆளுநரும் தலைமைக்குருக்களும் பெரும்பான்மையான மேட்டுக்குடி மக்களும் வாழும் இடம் அது. தம் பணித்தளமாக இயேசு வலியவர்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக வறியவர்களையும் எளியவர்களையும் தேர்வு செய்கிறார். இதன் வழியாக தம் பணி யாருக்குரியதை இயேசு தொடக்கமுதல் வெளிப்படுத்துகிறார்.
(ஆ) இறைவாக்கு நிறைவு.
‘காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்’ என்னும் எசாயாவின் இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுவதாகப் பதிவிடுகிறார் மத்தேயு. முதல் ஏற்பாட்டு இறைவாக்குகளின் நிறைவு இயேசு என்பதை தொடர்ந்து மத்தேயு வலியுறுத்துகிறார்.
(இ) விண்ணரசு பற்றிய போதனை.
பத்துக்கட்டளைகளையோ, பெரிய கட்டளையையோ (ஷெமா கட்டளை) இயேசு தம் போதனைக்கருவாக எடுக்கவில்லை. மாறாக, மக்கள் ஆவலோடு காத்திருந்த விண்ணரசு என்னும் கருதுகோளை எடுக்கிறார். இயேசுவின் வருகை விண்ணரசை மக்கள் நடுவே கொண்டுவந்துள்ளது.
(ஈ) வல்ல செயல்கள்.
இயேசுவின் போதனையோடு வல்ல செயல்கள் இணைந்து செல்கின்றன. சொல்லிலும் செயலிலும் இயேசு வல்லவராக இருந்தார் என்பது இதன் வழியாகத் தெளிவாகிறது.
(உ) பின்தொடர்தல்.
இயேசுவின் போதனையும் வல்ல செயல்களும் பலரை ஈர்க்க அவர்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள்.
சிந்தனை: இயேசு எளியவர்களைத் தெரிவு செய்கிறார். அவர்கள் அவருக்கு பதிலிறுப்பு செய்கிறார்கள். இன்று நம் தெரிவாக இருப்பவர்கள் யார்? இயேசுவின் சொற்களுக்கான நம் பதிலிறுப்பு என்ன?
உணர்வு: வலுவற்றும், வறுமையுற்றும், இருளிலும் நாம் வாழும்போது நம்மை ஒளிக்கு நடத்திச் செல்ல வருகிறார் இயேசு.
செயல்: ஏதோ ஒரு நிலையில் வலுவற்று நிற்பவர்களைத் தேடிச் சென்று, அவர்களுக்கு நம் சொல் அல்லது செயலால் ஆறுதல் மொழி கூறுதல் நலம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment