இன்றைய இறைமொழி. ஞாயிறு, 5 ஜனவரி ’25. கடவுளைக் கண்டுகொள்தல்!

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 5 ஜனவரி ’25
திருக்காட்சிப் பெருவிழா
எசாயா 60:1-6. திருப்பாடல் 72. எபேசியர் 3:2-3, 5-6. மத்தேயு 2:1-12

கடவுளைக் கண்டுகொள்தல்!

கார்பன் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவிட்டு வெளியே வரும் தன் தந்தைக்காக தொழிற்சாலை வாயிலில் காத்திருந்தான் இளவல் ஒருவன். வாயிற்காப்பாளர் இளவலிடம், ‘பணி முடிந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வெளியே வருவர். அனைவருடைய முகமும் உடைகளும் கார்பன் படிந்து கறுப்பாக இருக்கும். உன் அப்பாவை நீ எப்படி அடையாளம் காண்பாய்?’ எனக் கேட்கிறார். ‘என்னால் அவரை அடையாளம் காண முடியாதுதான். ஆனால், நான் இங்கே நிற்கும் என்னை அவர் கண்டுகொள்வார்’ என்றான் இளவல்.

கீழைத்திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு பெருவிழா என்று அழைக்கப்படுகிற திருக்காட்சிப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

இத்திருவிழாவை மூன்று பின்புலங்களோடு புரிந்துகொள்வோம்:

(அ) இயேசு கிறிஸ்து அனைவருக்கும் மெசியா என்னும் இறையியல்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வுகளை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பதிவு செய்கிறார்கள். லூக்கா நற்செய்தியாளரின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு கேட்டு இடையர்கள் புறப்பட்டு வருகிறார்கள். அவர்கள் பெத்லகேமுக்கு அருகே ஆடுகள் மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்தேயு நற்செய்தியாளரின் கருத்துப்படி இயேசுவின் பிறப்பு பற்றிய அறிதல் புறவினத்தாரிடையே – கீழ்த்திசை நாட்டியர் – நடக்கிறது. புறவினத்தாருக்கும் இயேசு மெசியா என வெளிப்படுத்தப்படுகிறார். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நற்செய்தி வழியாக பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் உடன் உரிமையாளர்கள்’ என்னும் நிலையை அடைந்தார்கள் என எழுதுகிறார் பவுல்.

(ஆ) இயேசு நிராரிக்கப்படுதல் என்னும் கூறு

இயேசுவை அவருக்கு அருகில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவரைவிட்டுத் தூரமாக இருக்கிறவர்கள் கண்டுகொள்கிறார்கள், தேடி வருகிறார்கள். ஏரோது, மறைநூல் அறிஞர்கள், எருசலேம் நகரத்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஞானியர் அவரைக் கண்டுகொள்கிறார்கள். ஆக, சிலுவை என்பது நிழலாக இயேசுவின் பிறப்பிலேயே படிந்திருக்கிறது.

(இ) எகிப்துக்கு தப்பி ஓடுவதற்கான கட்டாயம்

குழந்தையை எகிப்துக்கு தப்பி ஓடச் செய்வதற்கான இலக்கியக் கூற்றாக ஞானியர் வருகை அமைகிறது. ஏரோதிடம் திரும்பிச் செல்லாமல் வேற வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள் ஞானியர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிற ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகிறார். குழந்தையை பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு நகர்த்த வேண்டுமெனில், ஞானியர் யூதேயாவுக்கு வர வேண்டும்.

‘புறவினத்தாருக்கு ஒளியாக கிறிஸ்து தம்மையே வெளிப்படுத்துகிறார்’ – இதுவே இன்றைய திருநாளின் மையக்கருத்து.

கடவுளை நோக்கிய தேடல் நமக்கு இருந்தாலும் அவர் நம்மைக் கண்டுகொண்டாலன்றி அவரை நாம் கண்டுகொள்ள இயலாது. அல்லது அவரைக் கண்டுகொள்ளுமாறு அவரே நமக்கு வெளிப்படுத்தினாலன்றி அவரை நாம் அறிந்துகொள்ள இயலாது.

நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் கீழ்த்திசை ஞானியர் (அ) கடவுளின் விண்மீனைக் கண்டுகொள்கிறார்கள், (ஆ) கடவுளின் மெசியாவைக் கண்டுகொள்கிறார்கள், (இ) கடவுள் தருகிற செய்தியைக் கண்டுகொள்கிறார்கள்.

(அ) கடவுளின் விண்மீனைக் கண்டுகொள்தல்

‘அவருடைய விண்மீன் எழக் கண்டோம்’ எனச் சொல்லித் தங்கள் இடங்களிலிருந்து புறப்பட்ட ஞானியர், மீண்டும் அந்த விண்மீனைக் காணும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். விண்மீனுக்காக காத்திருப்பவர்களும் விண்மீனைத் தேடுபவர்களும் மட்டுமே விண்மீனைக் கண்டுகொள்ள முடியும். எருசலேம் நகரத்தார் அதைக் கண்டாலும் தங்கள் அன்றாடக் கவலைகளில் இருந்ததால் அதைப் பின்பற்றித் தேடச் செல்லவில்லை. பெரிய ஏரோதுவைப் பொருத்தவரையில் அவருடைய அரண்மனைக் கூடாரம் விண்மீனை அவருடைய பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. விண்மீன் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அவர் கலக்கம் அடைகிறார். தன் அரியணைக்குப் போட்டி வந்துவிட்டதாக உணர்ந்து பிறந்திருக்கிற அரசரைப் பற்றி அச்சம் கொள்கிறார்;. ‘ஏரோது இதைக் கேட்டு என்ன செய்வானோ?’ என்ற எண்ணத்தில் ஒட்டுமொத்த எருசலேமும் கலக்கம் அடைகிறது.

(ஆ) கடவுளின் மெசியாவைக் கண்டுகொள்கிறார்கள்

ஏரோது குழந்தையில் குழந்தையை மட்டுமே கண்டான். ஆனால், ஞானியர் குழந்தையில் யூதர்களின் அரசரை, மெசியா, தங்கள் கடவுளைக் கண்டார்கள். நம்பிக்கைப் பார்வை கொண்டிருப்பவர்கள் மட்டுமே கடவுளைக் கண்டுகொள்கிறார்கள். சிறிதிலும் பெரிது காணத் தயாராக இருப்பவர்களே கடவுளைக் கண்டுகொள்கிறார்கள். ‘ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார். அவரது மாட்சி உன்மீது தோன்றும்!’ என இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார் எசாயா (முதல் வாசகம்). ஆண்டவரே வெளிப்படுத்தினாலன்றி அவரை நாம் கண்டுகொள்ள இயலாது.

(இ) கடவுள் தருகிற செய்தியைக் கண்டுகொள்கிறார்கள்

‘ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம்’ என்னும் கட்டளையைத் தங்கள் கனவில் கண்டுகொள்கிறார்கள். ஒரே நேரத்தில் தங்களுக்கு வெளியே உள்ள ‘விண்மீன்’ என்னும் அடையாளத்தையும், தங்களுக்கு உள்ளே ‘கனவு’ என்னும் அடையாளத்தையும் அறிந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள் ஞானியர். கடவுள் வெளிப்பாடு என்பது வெளியே காணக்கூடிய அடையாளங்களிலும் உள்ளுணர்வாகவும் நமக்குக் கிடைக்கிறது.

விண்மீன் கண்டு வந்தவர்கள் மெசியாவைக் கண்டுகொள்கிறார்கள். மெசியாவைக் கண்டுகொண்டவுடன் தங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றுகிறார்கள்.

நம் வாழ்விலும் மாற்றத்தின் விண்மீன்களாக பலர் வந்து செல்கிறார்கள். அவர்களைக் கண்டுகொள்ளும் நேரத்தில் நாம் கடவுளை நெருங்கத் தொடங்குகிறோம். கடவுள் அனுபவம் என்பது நம் வாழ்வைப் புரட்டிப் போடுகிற, மாற்றம் தருகிற அனுபவம்.

அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துமாறு இறைவார்த்தை நோக்கி, அருளடையாளங்கள் நோக்கி, அயலார் நோக்கி, படைப்பு நோக்கி நாம் நகர்வோம். அவரை நாம் அங்கே கண்டுகொள்வோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. ஞாயிறு, 5 ஜனவரி ’25. கடவுளைக் கண்டுகொள்தல்!”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

Leave a comment