இன்றைய இறைமொழி. வியாழன், 2 ஜனவரி ’25. நானும் அவரும்

இன்றைய இறைமொழி
வியாழன், 2 ஜனவரி ’25
கிறிஸ்து பிறப்புக் காலம்
1 யோவான் 2:22-28. யோவான் 1:19-28

நானும் அவரும்

நம் இருத்தல் மற்றும் இயக்கத்தின் நோக்கம் இறைவனுக்குச் சான்றுபகர்வதற்கே!

திருமுழுக்கு யோவான் தான் யார் அல்ல என்பதையும், தான் யார் என்பதையும், இயேசு யார் எனச் சொல்வதையும் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

(அ) ‘நான் யார் அல்ல?’ தான் மெசியா அல்ல, எலியா அல்ல, இறைவாக்கினர் அல்ல என வெளிப்படையாக உரைக்கிறார் திருமுழுக்கு யோவான். தன்னை அறிந்தவராகவும் தன் வரையறை அறிந்தவராகவும் மற்றவருக்கு உரியதை தனக்கென எடுத்துக்கொள்ளாத பெருந்தன்மை கொண்டவராகவும் இருக்கிறார் யோவான்.

(ஆ) ‘நான் யார்?‘ ‘பாலைநிலத்தில் ஒலிக்கும் குரல்’ என்று தன்னை அடையாளப்படுத்துகிறார் திருமுழுக்கு யோவான். இந்த அருள்வாக்கியத்துக்கு விளக்கம் தருகிற புனித அகுஸ்தினார், ‘குரல்’ மற்றும் ‘வார்த்தை’ என்னும் இரு சொற்களை இணைத்துப் பார்க்கிறார். ‘குரல்’ யோவானையும், ‘வார்த்தை’ இயேசுவையும் குறிக்கிறது. நாம் பேசும்போது எழும் வார்த்தையை முன்மொழிவது நம் குரலே. ஆனால், வார்த்தையைக் கேட்டவுடன் நாம் குரலை மறந்துவிடுகிறோம். குரல் மறைந்துவிடுகிறது, வார்த்தை தங்கிவிடுகிறது. வார்த்தையாக இயேசுவை இந்த உலகுக்கு அறிவித்து, அந்த வார்த்தையை நிலைக்கச் செய்துவிட்டு, தான் மறைந்துவிடும் குரலாக நிற்கிறார் திருமுழுக்கு யோவான்.

(இ) ‘இயேசு யார்?’ மக்களிடையே நிற்கிற ஒருவரை, அவர்கள் அறிந்துகொள்ளாத ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார் யோவான். ‘மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை’ எனும் வாக்கியத்தை, இச 25:7, ரூத் 4 ஆகிய பாடங்களின் பின்புலத்தில், ‘மற்றவரின் பொறுப்பைப் பிடுங்கிக் கொள்வதற்கு எனக்குத் தகுதியில்லை’ என யோவான் அறிக்கையிடுவதாகப் புரிந்துகொள்ளலாம். மறைமுகமாக இயேசுவே ‘பொறுப்புக்குரியவர்’ (‘மெசியா’) என முன்மொழிகிறார் யோவான்.

யோவான் மெசியா அல்ல, ஆனால், மெசியாவுக்கு முன்னோடி. எலியா அல்ல, ஆனால், எலியாவின் உளப்பாங்கைப் பெற்றிருந்தவர். இறைவாக்கினர் அல்ல, ஆனால், இறைவாக்கினர்களின் நிறைவாக நிற்பவர். திருமுழுக்கு யோவானின் இருத்தலும் இயக்கமும்; இயேசுவின் இருத்தலையும் இயக்கத்தையும் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

இறைவனிடமிருந்து கற்றுக்கொள்கிற நபர், அவரோடு இணைந்து வாழுகிறார் எனத் தன் குழுமத்துக்கு எழுதுகிறார் யோவான் (முதல் வாசகம்). இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்கிற அருள்பொழிவே நமக்குக் கற்றுத்தருகிறது. நம் இருத்தல் மற்றும் இயக்கத்தின் நோக்கம் இறைவனுக்குச் சான்றுபகர்வதற்கே!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. வியாழன், 2 ஜனவரி ’25. நானும் அவரும்”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

Leave a comment