இன்றைய இறைமொழி
செவ்வாய், 31 டிசம்பர் ’24
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7-ஆம் நாள்
1 யோவான் 2:18-21. யோவான் 1:1-18
அனைத்தும் அவரால்
இன்று 2024 காலண்டர் ஆண்டின் இறுதி நாள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் மூன்று சொல்லாடல்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
(அ) ‘அவரிடம் வாழ்வு இருந்தது’
‘அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை.’
இந்த ஆண்டு முழுவதும் ஒளியும் இருளும் மாறி மாறி நம் வாழ்வில் கடந்து சென்றுள்ளன. ஆனாலும், ‘இருள் நம்மேல் வெற்றிகொள்ளவில்லை’ என்பதே நம் வாழ்வியல் அனுபவம். இருள் இல்லாமை பற்றி விவிலியம் வாக்குறுதி தரவில்லை. மாறாக, இருள் சூழ்ந்திருந்தாலும் அது நம்மை வெற்றிகொள்ளாது என்னும் எதிர்நோக்கைத் தருகிறது. இருளையும் இருள் சார்ந்த செயல்களையும் நாம் வெற்றிகொண்ட நேரங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.
(ஆ) ‘கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமை’
‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார் … அவர்கள் கடவுளால் பிறந்தவர்கள்.’
கடவுள் நம் வாழ்க்கை நிலையை ஒரு ஸ்டெப் உயர்த்துகிறார். இயேசு அவருடைய பணிவாழ்வில் அவர் சந்தித்த, அவரைச் சந்தித்த அனைவருடைய வாழ்வையும் ஒரு படி உயர்த்துகிறார். உடல் விருப்பத்தில் பிறந்த மனிதர்களுக்கு உள்ள ஆற்றலை விட கடவுளால் பிறந்தவர்கள் மிகுந்த ஆற்றல் கொண்டிருக்கிறார்கள். நம் எண்ணம், விருப்பம், செயல் அனைத்தும் மேன்மையை நோக்கியதாக இருக்க வேண்டும்.
(இ) ‘யாவரும் நிறைவாக’
‘இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.’
ஆண்டின் நிறைவில் நம் மனமும் அவருடைய நிறைவால் நிறைந்துள்ளது. ‘இது போதாது’ என்ற குறைவு மனப்பான்மை, நம்மை ‘இன்னும் இன்னும் வேண்டும்’ என்ற தேடலுக்கு உட்படுத்தியிருக்கலாம். உறவுகளில் நம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கலாம். தேவைகளை நாம் கூட்டிக்கொண்டே இருந்திருக்கலாம். அல்லது புதிய புதிய நிலைகளை எதிர்பார்த்திருக்கலாம். ‘போதாது என்றால் எதுவும் போதாது. போதும் என்றால் இதுவே போதும்!’ என்ற மனநிலையை நாம் பெற்றுக்கொள்வோம். ஏனெனில், நம் நிறைவாக இறைவன் இருக்கின்றார்.
‘அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை’ – இந்த ஆண்டின் நிகழ்வுகள் அனைத்தும் அவரால் நடந்தேறின. அவரால் நடந்தேறிய அனைத்தும் நன்றாக நடந்தேறின என்னும் மனப்பாங்கு கொண்டவர்களாக, ‘நன்றி’ என்னும் ஒற்றைச் சொல்லால் இந்த ஆண்டுக்கு விடைகொடுப்போம்.
எதிர்காலம் நமக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால், எதிர்காலத்தை நமக்காகத் தம் கைகளில் தாங்கி நிற்கிற கடவுளை நமக்குத் தெரியும். இந்த ‘எதிர்நோக்கு நமக்கு ஏமாற்றம் தராது.’
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment