இன்றைய இறைமொழி. ஞாயிறு, 29 டிசம்பர் ’24. எதிர்நோக்கின் திருக்குடும்பம்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 29 டிசம்பர் ’24
இயேசு, மரியா, யோசேப்பு திருக்குடும்பம் விழா
மறைமாவட்டங்களில் யூபிலி 2025 கொண்டாட்டங்கள் தொடக்கம்

1 சாமுவேல் 1:20-22, 24-28. 1 யோவான் 3:1-2, 21-24. லூக்கா 2:41-52

எதிர்நோக்கின் திருக்குடும்பம்

குடும்பங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். திருக்குடும்பம் கடவுளால் உருவாக்கப்படுகின்றது. இன்றைய நாள் இரண்டு நிலைகளில் முதன்மை பெறுகிறது: ஒன்று, இயேசு-மரியா-யோசேப்பு நாசரேத்தில் அமைத்த திருக்குடும்பத்தின் திருநாள். இரண்டு, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்னும் மையக்கருத்தில் அகில உலகத் திருஅவையில் நாம் தொடங்கியுள்ள யூபிலி 2025 கொண்டாட்டங்களை இன்று நம் மறைமாவட்டங்களில் தல ஆயர்களின் தலைமையில் தொடங்குகிறோம். ‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது’ (ஸ்பெஸ் நோன் கொன்ஃபுந்தித்) என்னும் தலைப்பில் யூபிலி 2025 அறிவிப்பு ஆணை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த ஆணையின் உள்கூறுகளைக் கொண்டு திருக்குடும்பத் திருவிழா பற்றிச் சிந்திப்போம்.

‘தேடுதல், காத்திருத்தல், அர்ப்பணித்தல்’ என்னும் மூன்று சொற்களைப் பயன்படுத்தி ‘எதிர்நோக்கு’ என்னும் சொல்லை வர்ணிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், எதிர்நோக்கு என்பது ஓர் இறையியல் மதிப்பீடு. நம்பிக்கையையும் அன்பையும் இணைக்கிற இந்த மதிப்பீடு, எதிர்காலம் நோக்கி நம் எண்ணத்தைத் திருப்புவதோடு பொறுமையையும் விடாமுயற்சியையும் கற்றுத் தருகிறது.

(அ) தேடுதல்

இளவல் இயேசு எருசலேமில் காணாமல்போகும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகமாக வாசிக்கிறோம். மேலோட்டமான வாசிப்பில், இயேசுவை அவருடைய பெற்றோர்கள் தேடுவதுபோலத் தெரிகிறது. ஆனால், சற்றே நிறுத்தி ஆழமாக வாசித்தால், நிகழ்வில் நாம் காணும் அனைத்துக் கதைமாந்தர்களும் ஏதோ ஒரு தேடலில் ஈடுபட்டுள்ளார்கள். இயேசுவின் தேடல் தந்தையை நோக்கியதாக, தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டியதாக இருக்கிறது. மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கண்டுபிடித்த தருணத்தில், தங்கள் வாழ்வின் நோக்கம் என்ன என்பதைத் தேடத் தொடங்குகிறார்கள். இறைத்திட்டத்தில் தங்கள் பங்கு என்ன என்பதைத் தேடுகிறார்கள். இயேசுவோடு உரையாடிய போதகர்கள் அவருடைய அறிவின் ஞானத்தின் ஊற்றைத் தங்கள் கேள்விகள் வழியாகத் தேடுகிறார்கள். தேடலின் நிறைவு வீடு திரும்புவதாக இருக்கிறது. தான் தேடியதைக் கண்டுபிடிக்கிற நபர் தன் இல்லம் திரும்புகிறார்.

(ஆ) காத்திருத்தல்

ஆபிரகாமை நம்பிக்கையின் தந்தை என்றே அறிகிறோம். ஆனால், உரோமையருக்கு எழுதுகிற திருமடலில் பவுல், ‘எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோலத் தோன்றினும் அவர் எதிர்நோக்கினார்’ என்று ஆபிரகாமின் எதிர்நோக்கு பற்றி எழுதுகிறார். எதிர்நோக்கு என்பது ஆபிரகாமைப் பொருத்தவரையில் காத்திருத்தல். பொறுமையுடன் இருப்பவரே காத்திருக்க முடிகிறது. ஆண்டவராகிய கடவுளிடம் வேண்டுதல் செய்த அன்னா அது நிறைவேறும் எனக் காத்திருக்கிறார். காத்திருத்தலின் இறுதியில் சாமுவேல் பிறக்கிறார். இன்று நாம் வாழும் உலகம் காத்திருக்க விரும்புவதில்லை. காத்திருத்தலை நேர விரயம் என்றும், பொறுமையை கையாலாகாத நிலை என்றும் நாம் கருதுகிறோம். காத்திருத்தல் என்பதை கடவுளோடு இருத்தல் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், கடவுள் மட்டுமே அனைத்து நேரத்தையும் தன்னிடம் உடையவராக இருக்கிறார். காத்திருக்கிற ஒருவர் கடவுளோடு இருக்கிறார்.

(இ) அர்ப்பணித்தல்

‘இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். அவனை நான் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவன்’ என்று கடவுள்முன் நிற்கிறார் அன்னா. இளவல் இயேசு பன்னிரு வயது நிறைவில் தம் தந்தையின் அலுவலில் ஈடுபடத் தொடங்கியவுடன் மௌனமாக அவரைக் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறார்கள் அவருடைய பெற்றோர்கள். கடவுளிடமிருந்து வருகிறவர் கடவுளுக்கே உரியவர் என்னும் நிலையில் தம் கைகளைத் திறந்து கொடுக்கிறார்கள் அன்னா, மரியா, யோசேப்பு. எதிர்நோக்கு கொண்டிருக்கிற ஒருவர் தன் வாழ்க்கையைக் கடவுளோடு இணைந்த நிலையில் வாழ்கிறார் என மொழிகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யூபிலி 2025-க்குள் நுழைதல்

கூட்;டியக்கத்துக்கான மாமன்றம்: தோழமை-பங்கேற்பு-பணி என்று கடந்த மூன்று ஆண்டுகள் பயணம் செய்த நாம், ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்று யூபிலி 2025-ஆம் ஆண்டுக்குள் நுழைகிறோம். உரோமையில் புனித கதவுகளைத் திறந்து வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். நம் தலத்திருஅவையில் திருச்சிலுவை யூபிலி 2025-இன் அடையாளமாகத் திகழ்கிறது. உயிர்ப்பு என்னும் எதிர்நோக்கை வழங்குகிறது திருச்சிலுவை. யூபிலி 2025-க்கான சொல்லோவியத்திலும் கூடிநிற்கிற மனித உருவங்கள் சிலுவையைப் பற்றியுள்ளன.

ஆக, தனி மனிதராக அல்ல, மாறாக, குழுமமாகவே நாம் திருப்பயணம் செய்கிறோம். நாம் அனைவருமே எதிர்நோக்கின் திருக்குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம். இயேசு கிறிஸ்து வழியாக நாம் பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்னும் நிலையைப் பெற்றிருக்கிறோம். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்’ என்று எழுதுகிறார் யோவான்.

கடவுளின் மக்கள் என்னும் நிலையில் திருக்குடும்பத்தின் உறுப்பினர்களாகத் திகழும் நாம் ஒருவர் மற்றவரை மதிக்கவும் மாண்புடன் நடத்தவும் வேண்டும்.

இன்றைய திருநாளும் யூபிலியும் நமக்கு விடுக்கும் அழைப்புகள் எவை?

(அ) சமத்துவத்தில் மகிழும் தோழமை

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்னும் உணர்வு ஒருவர் மற்றவரை மதிக்கவும் ஒருவர் மற்றவரைச் சமத்துவத்துடன் நடத்தவும் நம்மைத் தூண்டுகிறது. ‘நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?’ என்னும் காயின் உணர்வு மறைந்து, ‘இதோ, நான் உங்கள் சகோதரன்’ என்று சொன்ன யோசேப்பு உணர்வு நம்மில் பிறக்க வேண்டும்.

(ஆ) அனைவரையும் உள்ளடக்கிய பொறுப்புணர்வு

குடும்பம் என்னும் உணர்வு ஒருவர் மற்றவரின் முன்னேற்றத்துக்கான பொறுப்புணர்வை நமக்கு வழங்குகிறது. சாமுவேல் தன் இல்லம் கடக்கிறார். இயேசுவும் தம் இல்லம் கடக்கிறார். நாம் ஓர் இல்லம் அல்லது குடும்பத்தில் பிறந்தாலும் நம் பயணம் என்னவோ நமக்கு வெளியே நோக்கி, அனைவரையும் நோக்கியதாக, அனைவரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

(இ) நம்பிக்கையில் வேரூன்றி அன்பில் கனி தர

நம்பிக்கைக்கும் அன்புக்கும் இடையே நிற்கிற எதிர்நோக்கு என்னும் மதிப்பீடு, நாம் கடவுளில் வேரூன்றி, ஒருவர் மற்றவரை நோக்கி நகர்ந்து கனி தர நம்மைத் தூண்டுகிறது. கடவுள் இல்லாமல் நாம் அமைக்கும் குடும்பங்கள் வெறும் மனிதக் கூடுகையே. அனைத்தையும் அனைவரையும் கடவுளில் காண்கிற உள்ளம் எளிதாக அனைவரையும் தழுவிக்கொள்கிறது.

இன்று நம் மறைமாவட்டங்களில் நாம் தொடங்கும் யூபிலிக் கொண்டாட்டங்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக’ மட்டுமன்றி, எதிர்நோக்கின் திருக்குடும்பங்களாக, திருக்குழுமங்களாக மாற்ற வேண்டும். நம் பயணத்தில் இறைவன் நம்மை வழிநடத்துவாராக!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

2 responses to “இன்றைய இறைமொழி. ஞாயிறு, 29 டிசம்பர் ’24. எதிர்நோக்கின் திருக்குடும்பம்”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

  2. Lourdusamy.j Avatar
    Lourdusamy.j

    nice explanation about jubilee year

    Like

Leave a comment