இன்றைய இறைமொழி. புதன், 25 டிசம்பர் ’24. இறைவனின் மலரடி!

இன்றைய இறைமொழி
புதன், 25 டிசம்பர் ’24
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா – பகல் திருப்பலி
எசாயா 52:7-10. திருப்பாடல் 98. எபிரேயர் 1:1-6. யோவான் 1:1-18

இறைவனின் மலரடி!

‘புலர்ந்தது நமக்குப் புனித நாள். பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர். ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே!’ மேற்காணும் சொற்கள் இன்றைய நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியாக இருக்கின்றன.

‘நற்செய்தியை உரைக்கும் பாதங்கள் மலைமேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!’ எனப் புகழ்கிறார் எசாயா (முதல் வாசகம்). நற்செய்தியே குழந்தையாகப் பிறந்திருக்க, அவருடைய பாதங்கள் இன்னும் அழகாய் இருக்கின்றன. இறைவெளிப்பாட்டின் நிறைவாக வந்திருக்கிறார் கிறிஸ்து என அறிவிக்கிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் (இரண்டாம் வாசகம்).

‘வாக்கு, வாழ்வு, வரவேற்பு’ என்னும் மூன்று சொற்கள் நற்செய்தி வாசகத்தில் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

(அ) வாக்கு

கடவுளின் வாக்காக, வார்த்தையாக இருக்கிறார் இயேசு. இந்த வார்த்தையைக் கொண்டே கடவுள் அனைத்தையும் படைக்கிறார். இந்த வார்த்தையே சதை ஏற்கிறது. படைப்பு முழுவதும் எதிரொலித்த வார்த்தை, பத்துக் கட்டளைகளாக வழங்கப்பட்ட வார்த்தை, தூரத்தில் நின்ற வார்த்தை, புதிய உடன்படிக்கையாக உள்ளத்தில் எதிரொலித்த வார்த்தை இன்று மனுவுரு ஏற்று, காணக்கூடிய, தொடக்கூடிய அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது.

இன்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் எப்படி இருக்கின்றன?

(ஆ) வாழ்வு

‘அவரிடம் வாழ்வு இருந்தது. அந்த வாழ்வு மனிதருக்கு ஒளியாக இருந்தது’ என்கிறார் யோவான். வாழ்வும் ஒளியும் இணைந்தே செல்கின்றன. ஏனெனில், ஒளியின் இருத்தல்தான் வாழ்வைச் சாத்தியமாக்குகிறது. இருளும் இறப்பும் இணைந்து செல்கின்றன.

வாழ்வும் ஒளியும் என நாம் நகர்கிறோமா? அல்லது இருளும் இறப்பும் என தேங்கி நிற்கிறோமா?

(இ) வரவேற்பு

‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்’ என எழுதுகிறார் யோவான் (1:11). கடவுள் நம்மிடம் வருகிறார் என்றாலும், அவரை ஏற்றுக்கொள்வது நாம் மேற்கொள்ள வேண்டிய தெரிவு. அந்தத் தெரிவில் நம் விருப்பமும் பொறுப்புணர்வும் இருக்கின்றன.அவரை நாம் வரவேற்கும்போது அவர் நம் நிலையை – அடிமை நிலையிலிருந்து பிள்ளைகள் என்னும் நிலைக்கு – உயர்த்துகிறார்.

அவரை வரவேற்கும் நாம் அவருடைய சாயலில் உள்ள அனைவரையும் வரவேற்கிறோமா?

அவர் இன்றும் நம் நடுவே வருகிறார்.

அவரின் காலடிச் சத்தம் நம் நடுவில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

நம் பாதங்களுக்கு அவரே வலிமை தருகிறார்.

கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகளும் செபங்களும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment