இன்றைய இறைமொழி. புதன், 25 டிசம்பர் ’24. எதிர்நோக்கின் திருப்பயணிகள் நாம்!

இன்றைய இறைமொழி
புதன், 25 டிசம்பர் ’24
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா – நள்ளிரவில் திருப்பலி
எசாயா 9:2-4, 6-7. தீத்து 2:11-14. லூக்கா 2:1-14

எதிர்நோக்கின் திருப்பயணிகள் நாம்!

பண்டிகைகளும் பயணங்களும் இணைந்தே செல்கின்றன. பண்டிகைக்காலப் பயணங்கள் நமக்குச் சில நேரங்களில் மகிழ்ச்சியைவிட பயத்தையே தருகின்றன. கூட்ட நெரிசல், கட்டண உயர்வு, பசியுடன் பயணம், பணத் தேவை என்று சில நெருடல்கள் இருந்தாலும் பயணத்தின் இறுதியில் நாம் கொண்டாடும் பண்டிகை நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த ஆண்டு நாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு பண்டிகை சிறப்பு மிக்கதாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து என்னும் மீட்பர் பிறந்த 2025 ஆண்டுக்கொண்டாட்டமாக – யூபிலிக் கொண்டாட்டமாக – இது அமைகிறது. ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்னும் கருத்துருவை நம் சிந்தனைக்கும் கொண்டாட்டத்திற்கும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்று நள்ளிரவுத் திருப்பலியில் நாம் வாசிக்கக் கேட்ட (லூக்கா) நற்செய்தி வாசகம் இரண்டு பயணங்களைப் பற்றிப் பேசுகிறது:

(அ) யோசேப்பு மற்றும் மரியா (வயிற்றில் இயேசு) பெத்லகேம் நோக்கிச் சென்ற பயணம்

வரலாற்று அடிப்படையில் பார்க்கும்போது பேரரசர் அகுஸ்து சீசர் வழங்கிய கட்டளையின் காரணமாக இந்தப் பயணம் நடந்தேறினாலும், இறையியல் அடிப்படையில் பார்க்கும்போது இந்தப் பயணம் மெசியாவின் பயணமாக இருக்கிறது. ‘நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்’ (மீக்கா 5:2) என்னும் இறைவாக்கு நிறைவேறும்விதமாக, நாசரேத்திலிருந்து பெத்லகேம் நோக்கி நகர்கிறது திருக்குடும்பம். ஒரு பக்கம் மனிதக் கட்டளையை நிறைவேற்றுவதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இறைவனின் திருவுளம் இங்கே நிறைவேற்றப்படகிறது.

காலத்தையும் இடத்தையும் கடந்த கடவுள் மனித வரலாற்றுக்குள் ‘பெயரிடப்பட்டு’ நுழைகிறார். ‘பெயரிடுதல்’ என்பதே முதல் மனிதன் ஆதாம் விவிலியத்தில் செய்கிற முதல் பணி (தொநூ 2:19). மனிதர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய நகர்ந்த நிகழ்வில் நுழைகிற கடவுள் தம் பெயரை மனித வரலாற்றில் பதிவு செய்கிறார்.

இந்தப் பயணத்தில் யோசேப்பும் மரியாவும் மேற்கொள்கிற ஒரு தடை, ‘விடுதியில் இடமில்லை’ என்பதுதான். விடுதியில் இடம் இல்லை என்பதற்காக கடவுள் தம் பயணத்தை முடித்துக்கொள்வதில்லை. தமக்கென ஓரிடத்தை அவர் கண்டுகொள்ளவே செய்கிறார். தீவனத்தொட்டியையும் தம் இல்லம் என மாற்றிக்கொள்கிறார்.

(ஆ) வானதூதர்(கள்) இடையர்களை நோக்கிச் சென்ற பயணம்

முதல் பயணம் திட்டமிட்டதாக அமைகிறது. இரண்டாவது பயணம் திடீரென்று அமைகிறது. மனிதர்கள் நகரவில்லை. கடவுளின் தூதர் நகர்கிறார். விண்ணிலிருந்து மண்ணகம் வருகிற தூதர் கட்டளையை அல்ல, மாறாக, ‘பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை’ கொண்டு வருகிறார். பிறந்திருக்கிற குழந்தையின் பெயரை – ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் – இடையர்களுக்கு அறிவிக்கிற தூதர், குழந்தையின் அடையாளத்தையும் – ‘துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பார்கள்’ என்னும் அடையாளத்தையும் – வழங்குகிறார். கடவுளுடைய பிறப்பின் நற்செய்தி எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் தூய்மையற்றவர்கள் எனக் கருதப்பட்ட ஆடு மேய்ப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

மேற்காணும் இரண்டு பயணங்களுமே நம் வாழ்விலும் நடந்தேறுகின்றன. சில பயணங்கள் திட்டமிட்டு நடக்கின்றன. சில பயணங்கள் திடீரென்று நடக்கின்றன. சில பயணங்கள் மனிதக் கட்டளையின் அடிப்படையில் நகர்கின்றன. சில பயணங்கள் கடவுளின் திருவுளப்படி நடந்தேறுகின்றன. சில பயணங்கள் நமக்கு அச்சத்தையும் திகைப்பையும் ஏமாற்றத்தையும் தருகின்றன. சில பயணங்கள் வியப்பையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன.

பயணங்கள் எப்படி இருந்தாலும் நம் பாதங்கள் என்னவோ நகர்ந்துகொண்டே இருக்கின்றன.

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் கடவுள் தம் பாதங்களை நம் நடுவில் பதித்து நிற்கின்றார். இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைத் தருகின்றன.

(அ) வரையறைகள் உடைய வேண்டும்

கிறிஸ்து பிறப்பின் பெரிய மறைபொருள் என்னவென்றால் வலிமையான கடவுள் தம்மையே வலுவற்ற நிலைக்கு உட்படுத்துகிறார் என்பதே. எல்லாம் வல்ல கடவுள் வலிமையற்ற குழந்தையாகப் பிறக்கிறார். அனைத்தையும் தமக்குக் கீழ் கொண்டிருக்கிற கடவுள் எதுவும் தமக்கு இல்லை என்னும் வறுமையைத் தழுவுகிறார். அண்ட சராசரங்களைக் கடந்த கடவுள் மாடுகள் உணவருந்தும் தீவனத் தொட்டிக்குள் தன்னையே சுருக்கிக்கொள்கிறார். மொத்தத்தில், கடவுள் வரையறைகளை உடைக்கிறார்.

யோசேப்பும் மரியாவும்கூட வரையறையை உடைப்பவர்களாகவே இருக்கிறார்கள். ‘விடுதியில் இடம் மறுக்கப்பட்டபோது அல்லது கிடைக்காதபோது’ வரையறையைத் தாண்டிச் செல்கிறார்கள்.

வரையறைகளை நாம் தாண்ட வேண்டும், நமக்கென நாமே வரையறுத்துள்ள பாதுகாப்பு வேலிகளை விட்டு நகர வேண்டும் என்பது நாம் கற்கிற முதல் பாடம். பல நேரங்களில் நமக்கு வெளியிலிருந்து அல்ல, மாறாக, நமக்கு உள்ளிருந்தே தடைகள் வருகின்றன. அச்சம், முற்சார்பு எண்ணம், தயக்கம், சோம்பல் போன்றவை நமக்கு உள்ளிருந்தே எழுகின்றன. ‘நான் இவ்வளவுதான்! நான் இப்படித்தான்!’ என்று நாம் வரையறைகளை வைத்துக்கொள்ளும்போது அங்கே வருகிற கடவுள், ‘நீ கடவுள்! நீ கடவுளின் மகன்! நீ கடவுளின் மகள்!’ என்று நம் மாண்பை உயர்த்துகிறார்.

வரையறைகள் உடைய வேண்டும் எனில் நாம் ‘இன்று’ செயலாற்ற வேண்டும். ‘விடுதியில் இடமில்லை’ என்று வீடு திரும்பவில்லை யோசேப்பு. இடம் கண்டுபிடிக்கிறார். வரையறையை உடைக்கின்றார். பல நேரங்களில் நமக்கு நாம்தான் தடைகள். நம்மைத் தவிர வேறு தடைகள் நமக்கு இல்லை. பலமுள்ள விலங்காக இருந்தாலும் தன்னைக் கட்டியிருக்கிற சங்கிலி தன்னைவிட வலிமையானது என நினைக்கும்வரை யானை சங்கிலியை உடைப்பதில்லை. சின்னச் சின்ன நிலையில் நாம் செயலாற்றிக்கொண்டே இருக்கும்போது பெரிய மாற்றம் நடந்தேறுகிறது.

‘மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது’ என தீத்துவுக்கு எழுதுகிறார் பவுல் (இரண்டாம் வாசகம்). ‘மாற்றமும் வளர்ச்சியும் சாத்தியம்’ என்பதே கடவுள் நமக்கு வழங்குகிறது அருள்.

‘மக்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர். அவர்களின் கொடுங்கோலை உடைத்தெறிந்தீர்’ என ஆண்டவரின் வல்ல செயல்களை எடுத்துரைக்கிறார் எசாயா (முதல் வாசகம்). நம் வரையறைகளை நாம் உடைத்தெறிய கடவுளின் உடனிருப்பு நமக்கு உண்டு என்னும் எதிர்நோக்கைத் தருகின்றன எசாயாவின் சொற்கள். நாம் ஏற்றிருக்கும் நுகம், நம்மைப் புண்ணாக்கும் தடி, நம்மை அடிமையாக்கும் கொடுங்கோல் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.

(ஆ) நாம் ஆண்டவரின் மாட்சியுடன் ஒளிர வேண்டும்

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு இடையர்களுக்கு அறிவிக்கப்படும் நிகழ்வில், ‘ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது’ எனப் பதிவு செய்கிறார் லூக்கா (2:9). இன்றைய முதல் வாசகத்திலும் ஒளி உருவகம் தரப்பட்டுள்ளது: ‘காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.’ கீழ்த்திசை ஞானியர் விண்மீனின் ஒளியில் நடந்து வருகிறார்கள். ஆலயத்தில் குழந்தை இயேசுவைக் கைகளில் ஏந்துகிற சிமியோன், ‘இம்மீட்பே பிறவினத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி!’ எனக் கொண்டாடுகிறார் (லூக் 2:32). இயேசுவின் வருகையை ‘இருளிலும் இறப்பின் நிழலிலும் இருப்பவர்களுக்குத் தரப்படும் ஒளி, விண்ணிலிருந்து வரும் விடியல்’ என உரைக்கிறார் சக்கரியா (லூக் 1:78-80).

‘ஒளி மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் காண கண்கள் களிக்கும்’ என எழுதுகிறார் சபை உரையாளர் 11:7. ஒளியைக் காணுதல் என்றால் பிறத்தல் என்பது பொருள். ஏனெனில், நம் பிறப்பில்தான் முதன்முதலாக நாம் ஒளியைக் காண்கிறோம். ‘அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது’ என யோவான் பாடுகிறார் (1:4).

மலைப்பொழிவில் கிறிஸ்து, ‘நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ என்கிறார் (மத் 5:14). கிறிஸ்துவை ஒளி என்று கொண்டாடுகிற நாம், அவருடைய ஒளியில் வாழ்கிறோமா? என்பது முதல் கேள்வி. அந்த ஒளியை மற்றவர்களுக்கு வழங்குகிறோமா? என்பது இரண்டாவது கேள்வி. ‘ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால், மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர் … தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் செயல்கள் வெளியாகிவிடும் என்பதால் அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்’ என நிக்கதேமிடம் உரையாற்றுகிறார் இயேசு (யோவா 3:19-21). இதையொட்டியே, ‘இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோமாக!’ (உரோ 13:12) என்று எழுதுகிறார் பவுல்.

ஒளியைக் கொண்டாடுகிற நாம் வாழ்க்கையைக் கொண்டாடுவோம். வாழ்க்கை என்பது மிகப்பெரிய கொடை. இந்தக் கொடையை ஒளியின் துணைகொண்டு வாழுவோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு – குடும்பத்தில், சமூகத்தில், திருஅவையில் – இந்த ஒளியை வழங்குவோம்.

(இ) அனைவரோடும் ஒன்றித்து தோழமையோடு வாழ வேண்டும்

நாம் இன்று அமைத்துள்ள குடிலைச் சற்றே கூர்ந்து கவனிப்போம். அங்கே அனைவருக்கும் இடம் உண்டு – வானதூதருக்கு, இயேசுவுக்கு, மரியாவுக்கு, யோசேப்புக்கு, ஆடு மேய்ப்பவர், ஞானியருக்க, அரசருக்கு, ஆடுகளுக்கு, மாடுகளுக்கு, ஒட்டகத்துக்கு! விண்ணகம் சார்ந்தவர்-மண்ணகம் சார்ந்தவர், ஆண்-பெண், பெரியவர்-குழந்தை, இருப்பவர்-இல்லாதவர், மனிதர்கள்-விலங்குகள் என எந்த வேறுபாடும் இல்லை. பகைமை என்னும் சுவரை உடைக்கிறவராக இருக்கிறார் இயேசு (காண். எபே 2:14).

பாலினத்தின், சமயத்தின், மொழியின், சாதியின், பொருளாதாரத்தின் அடிப்படையில் நாம் வைத்திருக்கும் அனைத்து வேறுபாடுகளும் நம் உள்ளம் சார்ந்தவையே அன்றி, வெளிப்புறத்தில் அவற்றுக்கான கூறுகள் எவையும் இல்லை. கூட்டியக்கத்துக்கான திருஅவை நடந்து முடிந்துள்ளது. கூட்டியக்கத்தின் அடிப்படையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மொழிவது ஒன்றிப்பு அல்லது தோழமை என்பதே. கடவுள் மனித ஒன்றிப்பு, மனிதர்களுக்கு இடையே நடைபெறும் ஒன்றிப்பு, தனிமனிதருக்கு உள்ளே நிகழும் ஒன்றிப்பு ஆகியவற்றைப் பொருத்தே கூட்டியக்கம் சாத்தியமாகிறது.

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்று நாம் யூபிலி பயணத்தைத் தொடங்குகிறோம். நாம் அனைவரும் பயணிகள் என்ற எண்ணம் வர வேண்டுமெனில், நான் வேறு நீ வேறு என்னும் பேதம் மறைய வேண்டும். ‘நான் உன்னைப் போல மாறினேன்’ என்று மனித உரு ஏற்றார் கடவுள். ‘நான் உன்னைப் போல மாறுகிறேன்’ என்று நாம் மற்றவர்களின் மன உரு ஏற்கும்போதெல்லாம் மனுவுருவாதல் நடந்தேறுகிறது.

நிற்க.

யோசேப்பும் மரியாவும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக பெத்லகேம் நோக்கிச் சென்றார்கள். மெசியாவின் வருகை என்னும் எதிர்நோக்கு நிறைவேறியதை அறிவிக்க விண்ணகத்திலிருந்து மண்ணகம் வருகிறார் வானதூதர்.

எதிர்நோக்கின் பயணிகள் நாம்! எழுந்து தொடர்வோம் பயணத்தை இன்று!

‘எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும் அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு, தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அவர் அருள்புரிவாராக!’ (உரோ 15:13)

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகளும் செபங்களும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. புதன், 25 டிசம்பர் ’24. எதிர்நோக்கின் திருப்பயணிகள் நாம்!”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

Leave a comment