இன்றைய இறைமொழி
செவ்வாய், 24 டிசம்பர் ’24
திருவருகைக்கால வார நாள்
2 சாமுவேல் 7:1-5, 8-12, 16. திருப்பாடல் 89. லூக்கா 1:67-79
வீடும் விடியலும்
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நாளில் நிற்கிறோம். நம் இல்லங்களும் உள்ளங்களும் கிறிஸ்துவை வரவேற்கத் தயாராக இருக்கின்றன.
காலத்தைக் கடந்த கடவுள் நம் காலத்துக்குள் நுழைந்து தமக்கென கூடாரம் ஒன்றை நம் நடுவே அமைத்துக்கொள்கிறார். கடவுளுக்கென கோவில் ஒன்றைத் தாவீது கட்ட விரும்பியபோது, தாவீதுக்கு கடவுள் இல்லம் கட்டுவதாக வாக்களிக்கிறர் (முதல் வாசகம்). இருளிலும் இறப்பின் பிடியிலும் வாழ்வாருக்கு ஒளி கொடுக்க விண்ணிலிருந்து விடியல் ஒன்று இறங்கி வருவதாகப் பாடுகிறார் சக்கரியா (நற்செய்தி வாசகம்).
(அ) கடவுளுடைய வாக்குப் பிறழாமை
கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதியை இயேசுவின் பிறப்பு வழியாக நிறைவேற்றுகிறார். நமக்கான இல்லத்தை ஆண்டவராகிய கடவுள் அவர் வழியாகக் கட்டி எழுப்புகிறார்.
(ஆ) கடவுளுடைய உடனிருப்பு
கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் ‘கடவுள் நம்மோடு’ என்னும் அனுபவம் பெறுகிறோம். நம்மோடு வாழ்கிற கடவுளுடைய உடனிருப்பு நமக்கு ஓய்வையும் அமைதியையும் தருகிறது.
(இ) கடவுளுடைய விடியல்
கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஒளி முதன்மையான பங்காற்றுகிறது. ஒளியும் வாழ்வும் இணைந்தே செல்கின்றன.
கடவுளுடைய வாக்குப் பிறழாமையில் நம்பிக்கை கொள்ளும் நாம், அவருடைய உடனிருப்பால் நம் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறோம். கடவுள் நமக்கு விடியலாக வருகிறார் எனில், நாம் ஒருவர் மற்றவரின் விடியலாக மாறுவோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment