இன்றைய இறைமொழி. வெள்ளி, 29 நவம்பர் 2024. அழியாதவை நோக்கி!

இன்றைய இறைமொழி
வெள்ளி, 29 நவம்பர் 2024
பொதுக்காலம் 34-ஆம் வாரம், வெள்ளி
திருவெளிப்பாடு 20:1-4, 11. 21:2. திருப்பாடல் 84. லூக்கா 21:29-33

அழியாதவை நோக்கி!

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது:

ஒன்று, காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத ஒன்றை அறிந்து கொள்ள இயேசு அழைப்பு விடுக்கின்றார். காணக்கூடிய அத்திமரத்தின் தளிரிலிருந்து காண இயலாத கோடைக்காலத்தை ஒருவர் அறிந்துகொள்ள முடிகிறது. அது போல, காணக்கூடிய அறிகுறிகளைக் கொண்டு காண இயலாத இறையாட்சியை அறிந்துகொள்ள முடியும்.

இரண்டு, அனைத்தும் நிகழும் வரை தலைமுறை ஒழியாது. விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் ஆண்டவரின் வார்த்தைகள் ஒழிய மாட்டா. ஆண்டவரின் வார்த்தை நிறைவேறும் என நாம் நேர்முகமாக எடுத்துக்கொள்ளலாம். எசாயா இறைவாக்கு நூலில் தனது வார்த்தை என்றென்றும் நிலைத்து நிற்பதாக (காண். 40:8) ஆண்டவராகிய கடவுள் முன்மொழிகின்றார்.

நிகழ்வுகளைத் தெரிந்து தெளிதல் பற்றி இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

அன்றைய மக்கள் இயற்கையின் இயக்கத்தை வைத்துப் பல விடயங்களைக் கணிப்பார்கள்.இயற்கை ஒரு கணிதச் சமன்பாடு போல இயங்குகிறது என்பது கிரேக்க மெய்யிலாளர் பித்தாகரஸின் வாதம். இப்படி இருந்தால் அப்படி நடக்கும் என்று நாம் கணித்துவிட முடியும். இறுதிக்கால நிகழ்வுகளும் அப்படிப்பட்டவையே என்கிறார் இயேசு. அதாவது, மண்ணிலும் விண்ணிலும் நாம் காணும் அடையாளங்களைக் கொண்டு மானிட மகனின் வருகை அண்மையில் உள்ளது என்பதை நாம் கணித்துவிட முடியும்.

இந்தப் போதனை நமக்குச் சொல்வது என்ன?

(அ) தேர்ந்து தெளிதல்

ஒரு விடயத்தின் பல கூறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அல்லவை நீக்கி, நல்லவை தழுவலே தேர்ந்து தெளிதல். ‘இது அல்ல! இது அல்ல!’ என்று நாம் ஒவ்வொரு அடுக்காக நீக்கும்போதுதான் இயற்கையின் மறைபொருளை உணர முடிகிறது. தேர்ந்து தெளிதல் வளர நாம் நம் உள்ளுணர்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

(ஆ) காரணம் – காரியம்

இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் காரணம் – காரியம் என்றே நகர்கின்றன. ‘காரணம் – காரியத்திற்கு’ அப்பாற்பட்டவற்றை நாம் வல்ல செயல்கள் என்று சொல்கின்றோம்.

(இ) என் வார்த்தைகள் ஒழியா!

தம் வார்த்தைகள் அனைத்தும் நிறைவுறும் என இயேசு மொழிகின்றார். அதாவது, தம் வார்த்தை பொய்யாகாமல் நிறைவுபெறும் என்கிறார். நம்மைத் தயார்நிலைக்கும் விழிப்புநிலைக்கும் அழைக்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில், ‘புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்’ காட்சியில் காண்கிறார் யோவான். இறுதிநாளில் புதிய எருசலேம் விண்ணகத்திலிருந்து இறங்கி வருகிறது. எருசலேமின் மாட்சியும் அழகும் பழைய துன்பங்களையும் கண்ணீரையும் மறக்கச் செய்கின்றன. அனைத்தும் புதுப்பிக்கப்படுவதை இக்காட்சி எடுத்துரைக்கிறது. ஆக, வாழ்வின் துயரங்கள் அனைத்தும் மாறும் என்னும் எதிர்நோக்கை நாம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், புதிய எருசலேம் மீண்டும் மண்ணகத்தில் உருவாவது கடவுளின் குடியிருத்தலை அடையாளப்படுத்துகிறது. ஆண்டவராகிய கடவுள் எருசலேம் நகரத்திலும் ஆலயத்திலும் குடிகொள்ளத் திருவுளம் கொள்கிறார்.

நிற்க.

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ காலத்தின் அறிகுறிகளைக் கண்டறியக்கூடியவர்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 261).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment