இன்றைய இறைமொழி. வெள்ளி, 15 நவம்பர் ’24. லோத்தின் மனைவி

இன்றைய இறைமொழி
வெள்ளி, 15 நவம்பர் 2024
பொதுக்காலம் 32-ஆம் வாரம், வெள்ளி
புனித பெரிய ஆல்பர்ட், நினைவு

2 யோவான் 4-9. திருப்பாடல் 119:1-2, 10-11, 17-18. லூக்கா 17:26-37

லோத்தின் மனைவி

‘கவனச் சிதறல்கள் களைந்து முன்நோக்கிய பயணத்தில் தொடர்பவர் கடவுளின் நாளுக்குத் தயாராக இருக்கிறார்.’

விண்ணரசு பற்றிய இயேசுவின் உரையாடல்தளம் சற்றே மாறி, இறுதிக்காலம் நோக்கியதாக இருக்கிறது. விண்ணரசின் வருகை என்பது மானிட மகனின் இரண்டாம் வருகை என்ற பொருளில், விண்ணரசின் நீட்சியே இரண்டாம் வருகை என்றும் புரிந்துகொள்ளலாம். ‘திடீரென வரும் அந்நாள்’ என்னும் சொற்கள் இயேசுவின் அறிவுரையின் மையமாகத் திகழ்கின்றன.

மானிட மகனுடைய காலத்தில், அல்லது அவருடைய இரண்டாம் வருகையின்போது, அல்லது உலக முடிவில், அல்லது இறுதித் தீர்ப்பின் போது நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தம் சீடர்களோடு பகிர்ந்துகொள்கிறார் இயேசு.

இந்த நற்செய்திப் பகுதியில் இயேசு ஐந்து உருவகங்கள் அல்லது ஒப்புமைகளைப் பயன்படுத்துகின்றார்: (அ) நோவாவின் காலம். வாழ்க்கை இயல்பாக இருந்தது. ஆனால், திடீரென அவர்கள் வாழ்க்கை ஒருநாள் முடிந்துவிட்டது. (ஆ) லோத்து சோதோமை விட்டுப் போன நாள். எல்லாரையும் அழித்தது. லோத்து குடும்பம் தப்பியது. ஆனால், அழிவைத் திரும்பிப் பார்த்த லோத்தின் மனைவி உப்புச் சிலையாக மாறுகின்றார். (இ) ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார். இரண்டு பேர் ஓய்ந்திருக்கின்றனர். ஓய்ந்திருப்பவர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். மற்றவர் விடப்படுகிறார். (ஈ) இருவர் மாவரைப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார். இரண்டு பேர் பணிசெய்துகொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். மற்றவர் விடப்படுகிறார். (உ) எல்லா இடமும் இவை நிகழும். ஒன்றை வைத்து இன்னொன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கழுகுகளின் இருத்தலைக் கொண்டு பிணத்தின் இருத்தலைக் கண்டுகொள்ள வேண்டும்.

மேற்காணும் உருவகங்கள் நமக்கு மூன்று விடயங்களைச் சொல்கின்றன:

(அ) அந்த நாள் எப்போது என்பதை நாம் அறிந்துகொள்ள இயலாது.

(ஆ) அந்த நாளின் நிகழ்வுகளை நாம் நிர்ணயிக்க, வரையறுக்க, கட்டுப்படுத்த முடியாது.

(இ) அந்த நாளில் வாழ்க்கை இயல்பாகச் சென்றுகொண்டிருக்கும்.

அந்த நாளை எப்படி எதிர்கொள்வது?

‘லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்!’ என்று சொல்லி, லோத்தின் மனைவியை உருவகமாக முன்மொழிகின்றார் இயேசு.

லோத்தின் மனைவி என்ன செய்தார்? அவரை நாம் ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும்?

‘அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் ஆண்டவர் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும் நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத் தூணாக மாறினாள்.’ (தொநூ 19:25-26).

லோத்தின் மனைவி சோதோம் நகரைத் திரும்பிப் பார்த்ததால் உப்புத்தூணாக மாறுகிறார்.

லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தது ஏன்? தான் வளர்த்த கோழிக்கு என்ன ஆயிற்று? தன் ஆடுகள் அழிந்திருக்குமோ? தன் தோட்டம் பொசுங்கியிருக்குமோ? பக்கத்து வீட்டுத் தோழியரை உடன் அழைத்து வந்திருக்கலாமே? மாடியில் காயப்போட்ட வடாகம் என்ன ஆயிற்று? துணிகள் காயுமுன் கந்தகம் பொழிய வேண்டுமா? என்ற கேள்விகளோடு திரும்பிப் பார்த்திருக்கலாம். அல்லது, ‘என்னதான் நடக்கிறது?’ என்ற ஆவல் மிகுதியால் திரும்பிப் பார்த்திருக்கலாம். ஆனால், ஒன்று நிச்சயம். திரும்பிப் பார்த்தல் தவறு.

திரும்பிப் பார்த்து நிற்றல் ஆபத்தானது.

கார் ஓட்டிச் செல்கின்ற நபர் பின்னால் வருகின்ற வாகனங்களைப் பார்ப்பதற்கான ‘ரேர் மிரர்’ மட்டும் பார்த்துக்கொண்டே ஓட்டினால் என்ன ஆகும்? முன்னால் அவர் மோதிவிடுவார்.

நம் வாழ்க்கை நமக்கு நிற்கவும், திரும்பிப் பார்க்கவும் நேரம் தருவதில்லை. நாம் முன்னால் சென்றுகொண்டே இருக்க வேண்டும். நம் வாழ்வில் நாம் கடந்து வந்த பாதை கடந்ததுதான். மீண்டும் போய் அதைச் சரிசெய்ய இயலாது. ஆக, நாம் வாழும்போது அறிந்து, தெளிந்து, நன்றாக வாழ்ந்துவிட்டால் போதும்.

முன்னே செல்கிறவர் முன்னே தொடர்ந்து செல்லட்டும் எனக் கற்பிக்கிறார் லோத்தின் மனைவி.

இன்றைய முதல் வாசகத்தில், அன்பு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருத்தல் பற்றியும் தன் தனிப்பட்ட மடலில் பெருமாட்டி ஒருவருக்கு அறிவுறுத்துகிறார் யோவான்.

பதிலுரைப் பாடலில், திருச்சட்டம் பற்றிப் புகழ்ப்பா இசைக்கிற ஆசிரியர், ஆண்டவராகிய கடவுளின் திருச்சட்டம் நம் வழிகளை நெறிப்படுத்துகிறது எனக் கற்பிக்கிறார்.

நிற்க.

இன்று நாம் நினைவுகூர்கிற புனித பெரிய ஆல்பர்ட் அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பாதுகாவலர் எனக் கொண்டாடப்படுகிறார். நம்பிக்கையும் அறிவும் இணைந்து செல்ல முடியும் எனக் கற்பிக்கும் இவர், கற்றலின் இலக்கு பகிர்வதற்கே தவிர, பெருமைகொள்வதற்கு அன்று என்கிறார்.

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நின்று திரும்பிப் பார்ப்பதில்லை (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 249).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. வெள்ளி, 15 நவம்பர் ’24. லோத்தின் மனைவி”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

Leave a comment