இன்றைய இறைமொழி. வியாழன், 12 செப்டம்பர் ’24. அறிவிலிருந்து அன்புக்கு

இன்றைய இறைமொழி
வியாழன், 12 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 23-ஆம் வாரம், வியாழன்
1 கொரிந்தியர் 8:1-7, 11-13. லூக்கா 6:27-38

அறிவிலிருந்து அன்புக்கு

நாம் கொண்டிருக்கும் அறிவும் அறிதலும் அன்புக்கு இட்டுச் செல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றன இன்றைய வாசகங்கள். நாம் கொண்டிருக்கும் அறிவு நம்மை இறுமாப்பு அடையச் செய்து நம்மை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்குப் பதிலாக, குழுமத்தைக் கட்டியெழுப்பவும், கிறிஸ்துவின் இதயத்தை நாம் ஒத்திருக்குமாறு நம்மைத் தூண்டவும் வேண்டும். அறிவு என்பது வெறும் புரிதல் அல்ல, மாறாக, நம்மைக் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கும் ஞானம்.

(அ) அன்பு இல்லாத அறிவு இறுமாப்புக்கு இட்டுச் செல்லும்

இன்றைய முதல் வாசகத்தில், ‘அறிவு இறுமாப்பு அடையச் செய்யும். ஆனால், அன்பு உறவை வளர்க்கும்’ என மொழிகிறார் பவுல். சிலைகளைப் பற்றிய புரிதலை தங்களுடைய அறிவு எனக் கொண்டிருந்த கொரிந்து நகரக் கிறிஸ்தவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்டார்கள். ஆனால், வலுவற்றவர்களுக்கு அது இடறலாக இருந்தது. தங்களுடைய அறிவால் இறுமாப்பு அடைந்த அவர்கள் மற்றவர்களைவிடப் பெரியவர்கள் எனத் தங்களைக் கருதினார்கள். வலுவற்றவர்கள்மேல் அன்பு இல்லாதபோது நாம் தன்மையம் கொண்டவர்களாக மாறிவிடுகிறோம் என எச்சரிக்கிறார் பவுல்.

இன்றைய உலகம் அறிவையும் பணிசார் மேன்மையையும் முன்னிலைப்படுத்துகிறது. நாம் கொண்டிருக்கும் அறிவு மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகப் பயன்பட வேண்டும் என நினைவூட்டுகிறார் பவுல். நம் அறிவு பரிவுக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். அறிவு கடவுளை நோக்கியும் ஒருவர் மற்றவரை நோக்கியும் அழைக்கிறது.

(ஆ) அன்பு மற்றவர்களின் நன்மையை நாடுகிறது

பகைவர்களை அன்பு செய்ய நம்மை அழைக்கிறது நற்செய்தி வாசகம். அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல, மாறாக, மற்றவர்களுக்கான நன்மைச் செயல்பாடு. இரக்கம், தாராள உள்ளம், மன்னிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதே அன்பு. நமக்கு நலம் தருவதை மட்டும் நாடாமல், மற்றவர்களை நோக்கி நகர்த்துகிறது அன்பு.

நம்மை எதிர்ப்பவர்களையும் நமக்குத் தீங்கிழைப்பவர்களையும் அன்பு செய்ய நம்மை அழைக்கிறார் இயேசு. இது நமக்கு சவாலாக இருக்கும் என அறிந்த அவர், நமக்கு அவரே முன்மாதிரி காட்டுகிறார். கடவுளைப் பற்றிய அறிவு உண்மையெனில், அது நம் இதயங்களை மாற்றுகிறது.

(இ) கடவுளைப் பற்றிய அறிதலும் அவரைப் போல அன்புசெய்தலும்

அறிவு என்னும் நிலையில் நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபடுகிறோம். ஆனால், அன்பு நம்மை ஒன்றிணைக்கிறது. கடவுள் இரக்கமுடையவர் என்று அறியும் நாம், அவரைப் போல மற்றவர்கள்மேல் இரக்கம் காட்ட அழைக்கப்படுகிறோம். கடவுளைப் பற்றிய அறிதல் மற்றவர்களை அன்பு செய்ய நம்மை உந்தித் தள்ளுகிறது.

கடவுளைப் பற்றிய அறிதல் என்பது இறையியல் படிப்பில் அல்ல, மாறாக, அனுபவத்தில் அடங்கியுள்ளது. அன்பும் ஓர் அனுபவமே.

நிற்க.

அறிவு அன்புக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ – இந்த அன்பே குழுமத்தைக் கட்டியெழுப்புகிறது. இந்த அன்பே கடவுளின் இதயத்துடிப்பு. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 197)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment