இன்றைய இறைமொழி. சனி, 13 ஜூலை 2024. அஞ்சாதிருங்கள்!

இன்றைய இறைமொழி
சனி, 13 ஜூலை 2024
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – சனி
எசாயா 6:1-8. மத்தேயு 10:24-33

அஞ்சாதிருங்கள்!

பணித்தளத்தில் தம் சீடர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிற இயேசு, மூன்று முறை, ‘அஞ்சாதிருங்கள்!’ என்கிறார்.

(அ) இகழ்வாரைக் கண்டு அஞ்ச வேண்டாம்!

இயேசுவின் பணிவாழ்வில் அவருடைய வல்ல செயல்களைக் குறைத்து மதிப்பிட்டு அவரை இகழ்ந்தார்கள். இத்தகைய இகழ்ச்சியை சீடர்களும் எதிர்கொள்ள நேரிடும். இகழ்வாரைக் குறித்து சீடர்கள் அஞ்ச வேண்டாம்.

(ஆ) உடலைக் கொல்வோரைக் கண்டு அஞ்ச வேண்டாம்!

உடலைக் கொல்பவர்கள் மற்றவர்கள்மேல் ஆற்றல்கொண்டவர்களாக நினைக்கிறார்கள். ஆனால், கடவுளின்முன் அவர்கள் ஆற்றலற்றவர்கள். கடவுள் ஆன்மாவின்மேல் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். கடவுளைக் குறித்து அச்சம் கொள்பவர்கள் மனிதர்களைக் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

(இ) சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்!

இயேசுவின் சமகாலத்தில், சிட்டுக்குருவிகள் வாங்குபவர்கள் அவற்றைப் பறக்கவிட்டுச் சோதித்துப் பார்த்தார்கள். அப்படி பறக்கவிடப்படுகிற குருவிகளைப் பராமரிப்பவராக இருக்கிறார் கடவுள். சீடர்கள் சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்.

மேற்காணும் மூன்று சூழல்களில், முதல் இரண்டு சூழல்கள் வெளியிலிருந்து வரக்கூடிய காரணிகளைக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது சூழலில் அச்சம் பிறக்கக் காரணம் தன்-ஐயம் அல்லது தாழ்வு மனப்பான்மை.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா இத்தகைய தன்-ஐயம் கொண்டவராக இருக்கிறார். அவருக்குக் காட்சியில் தோன்றுகிற ஆண்டவர் அவருடைய உதடுகளைத் தூய்மைப்படுத்துகிறார். அவருடைய அச்சம் களைகிறார்.

நிற்க.

‘இதோ! நான் வருகிறேன்!’ என்று கடவுளின் அழைப்புக்குப் பதிலிறுக்கிறார் எதிர்நோக்கின் திருப்பயணி (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 147).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment