இன்றைய இறைமொழி
வெள்ளி, 5 ஜூலை 2024
பொதுக்காலம் 13-ஆம் வாரம் – வெள்ளி
ஆமோஸ் 8:4-6, 9-12. மத்தேயு 9:9-13
இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் கருத்துருக்கள்: ‘சீடத்துவத்துக்கான அழைப்பு,’ ‘கடவுளின் இரக்கமும் அருளும்,’ ‘கிறிஸ்துவின் பணி அனைவரையும் உள்ளடக்கியது.’
வரிதண்டுபவரான மத்தேயுவை அழைக்கிறார் இயேசு. இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு அனைவருக்கும் உரியது. அது திடீரென ஒருவரைத் தேடி வருகிறது. மத்தேயு உடனடியாகவும் முழுமையாகவும் பதிலிறுப்பு செய்கிறார். தன் பழைய வாழ்க்கையையும் பணியையும் ஒரேயடியாக விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார்.
சீடத்துவம் விருந்தோம்பலில் கனிகிறது. இயேசுவின் சமகாலத்தில் உணவும், உண்ணுதலும், உண்ணும் வழக்கமும் ஒருவருடைய சமூக நிலையின் அடையாளத்தை நிர்ணயித்தன. ஆனால், இயேசு மனித வரையறைகளை மீறுகிறார். கடவுளின் இரக்கமும் பாவிகளைத் தேடி வருகிறது. அனைவரையும் அது தழுவிக்கொள்கிறது.
நாம் இயேசுவின் அழைப்பை எப்போது கேட்கிறோம்? அதற்கு எப்படி பதிலிறுக்கிறோம்? நாம் உடைந்த நிலையில் இருக்கும்போது நம் அருகில் வருகிற கடவுள் நம்மைத் தழுவிக்கொள்கிறார். இயேசுவோடு நெருக்கமாக நாம் பயணம் செய்வது எப்படி?
நம் அன்றாட அலுவல்களில் நாம் ஈடுபட்டிருக்கும்போது நம் மனத்தின் அமைதியில் நம்மை அழைக்கிறார் இயேசு. நாம் உடனடியாகப் புறப்படும்போது நம் பயணம் முழுவதுமாக மாறுகிறது.
முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக எச்சரிக்கை விடுக்கிறார். நாடெங்கும் இறைவார்த்தைப் பஞ்சம் உண்டாகும் என மொழிகிறார். இத்தகைய பஞ்சம் நேரிடும்போது மக்கள் திசைகளும் இலக்குகளும் இழந்து துன்புறுகிறார்கள்.
நிற்க.
நம் காலடிகளை வழிநடத்தும் உள்மன ஒலியே இறைவார்த்தை (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 140).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment