இன்றைய இறைமொழி. வியாழன், 27 ஜூன் 2024. இருவகை வாழ்க்கை

இன்றைய இறைமொழி
வியாழன், 27 ஜூன் 2024
பொதுக்காலம் 12-ஆம் வாரம் – வியாழன்
2 அரசர்கள் 24:8-17. மத்தேயு 7:21-29

இருவகை வாழ்க்கை

இயேசுவின் நீண்ட மலைப்பொழிவு இன்றைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவுக்கு வருகிறது. ரபிக்களின் நீண்ட உரைகள் இறுதியில் சொல்லோவியம் மற்றும் தெரிவுமொழிதல் ஒன்றோடு முடிவடையும். அந்த வகையில், கட்டடம் கட்டுதல் என்னும் சொல்லோவியத்தை முன்மொழிந்து, இரண்டு வகைகளான அடித்தளத்தை – பாறைமீது, மணல்மீது – முன்மொழிகிறார்.

மலைப்பொழிவைக் கேட்கும் சீடர் தன் வாழ்க்கையை பாறைமீது கட்டுபவராக மாற வேண்டும். மணல்மீது கட்டப்படுகிற வீடு எளிதாகக் கட்டப்படுகிறது. ஆனால், எதிர்ப்புகளைத் தாங்க இயலாத நிலையில் அது இருக்கிறது. எளிதில் வீழ்ந்துவிடுகிறது. நீண்ட பொழுது நிலைத்திருக்க இயலாது.

மாறாக, பாறைமீது கட்டப்படுகிற வீடு கட்டுவது கடினமாக இருந்தாலும், அது எதிர்ப்புகளைத் தாங்கக் கூடியதாக இருக்கிறது. நீண்ட பொழுது நிலைத்திருக்கிறது.

மலைப்பொழிவுக்கு இரு நிலைகளில் பதிலிறுக்க முடியும்: ஒன்று, சொல் அளவில். இரண்டு, செயல் அளவில். செயல் அளவில் நாம் பதிலிறுப்பது பாறைமீது வீடு கட்டுவது போன்றது ஆகும்.

இன்றைய முதல் வாசகத்தில், தெற்கு நாடான யூதா பாபிலோனிய அரசர் நெபுகத்னேசரால் கொள்ளையிடப்படுவதை வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளுக்கு அவர்கள் பதிலிறுப்பு செய்தது சொற்கள் அளவிலேயே இருந்தன. அவர்களுடைய செயல்களோ சிலைகளை நோக்கியதாக இருந்தன. மணல்மீது கட்டிய வீடாக அது விழுகிறது.

நிற்க.

பாறைமீது வீடு கட்டுகிற ஒருவர் எதிர்நோக்கு உடையவராக இருக்கிறார் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 135).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment