இன்றைய இறைமொழி
புதன், 12 ஜூன் 2024
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – புதன்
1 அரசர்கள் 18:20-39. மத்தேயு 5:17-19
நிறைவேற்றவே
இயேசுவின் சமகாலத்தவர் அவருக்கும் திருச்சட்டத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய குழப்பத்தில் இருக்கிறார்கள். இயேசுவின் புதிய போதனை மோசே வழியாக கடவுள் வழங்கிய திருச்சட்டத்தை அழித்துவிடுமோ என்னும் அச்சத்தில் இருந்தபோது, திருச்சட்டத்துக்கும் தமக்கும் உள்ள உறவைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் இயேசு: ‘திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றவே வந்தேன்!’
‘நிறைவேற்றுதல்’ என்றால் ‘முழு பொருள் தருதல்’ என்று புரிந்துகொள்ளலாம்.
திருச்சட்டம் என்பதை விதையாக உருவகம் செய்துகொள்வோம். பெரியதாக வருவதற்கான ஆற்றலை இது கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான மழை, வெளிச்சம், ஊட்டம் ஆகியவற்றைக் கொடுத்தால் அது முழுமையாக வளரும். இவ்வாறாக, திருச்சட்டம் என்னும் விதை அழிக்கப்படுவதில்லை. மாறாக, அது முழு வடிவத்தைப் பெறுகிறது.
தொடர்ந்து, கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாக ஒருவர் விண்ணரசில் பெரியவர் ஆகிறார் என மொழிகிறார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியா பாகால் இறைவாக்கினர்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நிகழ்வை வாசிக்கக் கேட்கிறோம்.
‘ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்!’ என்று மக்கள் ஆண்டவரை நோக்கித் திரும்பும்படி செய்கிறார் எலியா. ஆண்டவராகிய கடவுள் என்பது திருச்சட்டத்தின் போதனையாக இருந்தாலும், அந்தப் போதனை இங்கே வாழ்வாக மாறுகிறது.
நிற்க.
விதையின் ஆற்றல் செடியாக வளர்ந்து பூவாக மலர்ந்து கனியாக மாறும் என்பதே எதிர்நோக்கு (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 122).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment