இன்றைய இறைமொழி
வெள்ளி, 31 மே 2024
கன்னி மரியா-எலிசபெத்து சந்திப்பு விழா
செப்பனியா 3:14-18. லூக்கா 1:39-56
மகிழ்ச்சியும் புகழ்ச்சியும்
இகழ்ச்சியை நீக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கிற கடவுளை நோக்கி நாம் புகழ்ச்சியை ஏறெடுத்தல் நலம்!
நம் தாய்த்திருஅவையில் 13-ஆம் நூற்றாண்டில் இத்திருவிழா தொடங்கப்பட்டது. முதலில் ஜூலை 2-ஆம் தேதி கொண்டாடப்பட்ட இவ்விழா, பிற்காலத்தில் மே 31-க்கு மாற்றப்பட்டது. அதாவது, மங்கள வார்த்தை திருநாளுக்கும் (மார்ச் 25), திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவுக்கும் (ஜூன் 24) இடையே கொண்டுவரப்பட்டது.
வானதூதர் தன் இல்லத்தை விட்டு வெளியேறிய அந்த நொடியே, கதவை அடைத்துவிட்டு மரியாவும் வெளியேறுகிறார். அப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா: ‘அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.’ இயேசுவைத் தன் உடலில் தாங்கத் தொடங்கிய அந்த நொடி முதல் அவர் முழு இயக்கத்திற்கு உட்படுகிறார். எருசலேம் ஆலயத்தை நோக்கியோ, அல்லது தலைமைச்சங்கத்தை நோக்கியோ அவர் ஓடவில்லை. மாறாக, தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை நோக்கி ஓடுகிறார்.
மங்கள வார்த்தை மரியாவை முழுவதுமாக மாற்றியது: நாசரேத்தூரின் எளிய இளவல் இப்போது உன்னதரின் மகனின் தாயாகின்றார். இனி அவர் தன் விருப்பத்தை அல்ல, இறைவிருப்பத்தை நிறைவேற்றவே விரும்புவார். இனி அவர் அனைத்திலும் விரைந்தே செயல்படுவார்: விரைந்து பணியாற்றுவார், விரைந்து இறைத்திருவுளம் நிறைவேற்றுவார்.
கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும் அமைதியாக ஓய்ந்திருக்க முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி செய்வோம். நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம். நம் தேவைகளை மறந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்.
இப்போது தொடங்குகின்ற மரியாவின் பயணம், தொடர்ந்துகொண்டே இருக்கும்: பெத்லகேமுக்கு, எகிப்துக்கு, மீண்டும் நாசரேத்துக்கு, எருசலேம் ஆலயத்துக்கு, கானாவூருக்கு, கல்வாரிக்கு என இனி அவர் பயணம் செய்துகொண்டே இருப்பார். எல்லாப் பயணங்களின் முன்னோட்டமே எலிசபெத்தை நோக்கிய பயணம்.
தான் கடவுளின் தாயாக இருந்தாலும் தாழ்ச்சியுடன் புறப்படுகின்றார் மரியா. தன் அன்பைப் பகிர்ந்துகொள்ளச் செயல்கிறார் மரியா. மரியாவின் அன்பும் தாழ்ச்சியுமே அவரை எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார்.
மரியா தன் வழியில் வேறு எந்தக் கவனச் சிதறலும் கொள்ளவில்லை. அவருடைய இலக்குத் தெளிவு நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. செக்கரியாவின் வீட்டை அடைந்தவுடன் வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்து மிகவும் எதார்த்தமானதாகவும் உண்மையாகவும் இருந்ததால் அது வயிற்றிலுள்ள குழந்தையைச் சென்றடைகின்றது.
‘எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்’ என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. வானதூதர் கபிரியேல் சொன்ன நொடியில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம் உள்ள தூய ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா.
எலிசபெத்து மரியாவை வாழ்த்த, மரியாவோ கடவுளைப் பாடிப் புகழ்கின்றார். மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது நம் முகம் வாழ்த்தியவரைப் பார்க்காமல் இறைவனைப் பார்த்தால் எத்துணை நலம்! தன் வாழ்வு முழுவதும் இறைமையின் வெளிப்பாடாகப் பார்க்கத் தெரிந்த மரியாவின் நம்பிக்கைப் பார்வை நமக்கு வியப்பாக இருக்கிறது.
ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கியிருக்கின்ற மரியா பின்னர் வீடு திரும்புகின்றார். புறப்படும் பயணம் அனைத்தும் இல்லம் திரும்பவே என்பதும் ஒரு நல்ல வாழ்வியல் பாடம். பயணத்தின் எந்த இலக்கும் நம் வீடாகிவிடாது. நாம் திரும்ப வேண்டிய ஒரு வீடு எப்போதும் உண்டு.
இன்றைய முதல் வாசகத்தில், ‘உன் துன்பத்தை அகற்றிவிட்டேன். ஆகவே, நீ இழிவடையமாட்டாய்’ என யூதா மக்களை நோக்கி இறைவாக்குரைக்கிறார் செப்பனியா. ஆண்டவருடைய முகம் படும் இடத்தில் துன்பம் மறைகிறது, இழிவுநிலை மறைகிறது. குழந்தை பெற இயலாதவர் என்னும் இழிநிலையை எலிசபெத்திடமிருந்து எடுக்கிறார் கடவுள். ‘என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ எனக் கேட்டு எலிசபெத்து மரியாவைத் தழுவிக்கொள்கிறார். ஓர் இளவலில் தன் ஆண்டவரின் தாயைக் காணும் ஞானம் உடையவராக இருக்கிறார்.
மரியாவின் மகிழ்ச்சி புகழ்ச்சியாக மாறுகிறது. மகிழ்ச்சியால் நம் உள்ளம் நிறையும்போது புகழ்ச்சி பிறக்க வேண்டும். இகழ்ச்சியை நீக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கிற கடவுளை நோக்கி புகழ்ச்சியை ஏறெடுத்தல் நலம்!
கருவில் உள்ள குழந்தைக்கும் உயிர் இருக்கிறது. அதை அழிப்பது தவறு எனச் சுட்டிக்காட்டி கருக்கலைப்பைத் தடை செய்து தீர்ப்பளித்தது நம் உச்ச நீதிமன்றம். கருவில் உள்ள குழந்தைக்கும் உணர்வும் இருக்கிறது என நமக்குச் சொல்கிறது நற்செய்தி வாசகம். பெரியவர்கள் சக்கரியா-எலிசபெத்து, இளவல் மரியா, குழந்தை யோவான் என அனைவரும் மகிழ்ச்சியால் நிரம்பி நிற்கிறார்கள். பெரியவர்களிலும், கருவில் உள்ள குழந்தைகளிலும் உள்ள உணர்வுகளைப் போற்றி மதித்தல் வேண்டும்.
நிற்க.
மரியா-எலிசபெத்து சந்திப்பு நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது. இந்த மகிழ்ச்சி நம் அனைவரையும் பற்றிக்கொள்வதாக! (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 112).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment